கோலி காலி… அசைக்க முடியாத முதலிடத்தில் ஸ்மித்!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்ட புதிய தரவரிசையில் டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசையில் அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தும், பந்துவீச்சாளர்களில் பாட் கம்மின்ஸும் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளனர்.

மான்செஸ்டரில் நடந்து முடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 4வது டெஸ்ட் போட்டியின் போது, ஸ்மித்தின் 211 மற்றும் 82 ரன்கள் தரவரிசையில் மிகப்பெரிய உயர்வை அளித்துள்ளது.

937 புள்ளிகளுடன் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் ஸ்மித் உள்ளார். டிசம்பர் 2017ம் ஆண்டு ஸ்மித் எடுத்த 947 புள்ளிகளைப் பெறுவதற்கு இன்னும் 10 புள்ளிகள்தான் அவருக்குத் தேவைப்படுகிறது. இன்னும் ஒரு டெஸ்ட்டில் அவுஸ்திரேலிய அணி விளையாட உள்ளது.

இந்திய அணியின் கப்டன் விராட் கோலி 903 புள்ளிகளுடன் 2வது இடத்தில் தொடர்கிறார். 3வது இடம் முதல் 10வது இடம் வரை முறையே கேன் வில்லியம்ஸன், சட்டேஸ்வர் புஜாரா, ஹென்றி நிகோலஸ், ஜோ ரூட், அஜின்கயே ரஹானே, ரொம் லதம், திமுத் கருணாரத்ன, எய்டன் மார்க்ரம் ஆகியோர் உள்ளனர்.

பந்துவீச்சாளர்கள் வரிசையில் அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் கம்மின்ஸ் ஆஷஸ் தொடரின் 4வது ஆட்டத்தில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் 914 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். 2001ம் ஆண்டு முன்னாள் அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மெக்ராத் எடுத்த புள்ளிகளுக்கு இணையாக கம்மின்ஸ் எடுத்துள்ளார்.

2வது இடத்தில் தென்னாப்பிரிக்கா வேகப்பந்துவீச்சாளர் ரபாடா 64 புள்ளிகள் பின்தங்கியுள்ளார். பும்ரா 835 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் உள்ளார். அவுஸ்திரேலிய வீரர் ஜோஸ் ஹேடல்வுடன் 12வது இடத்தில் இருந்து 8வது இடத்துக்கு உயர்ந்துள்ளார். ஹேசல்வுட் அவரின் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகச்சிறந்த தரவரிசை இதுவாகும்.

இதுதவிர இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர் 4 இடங்கள் முன்னேறி 37வது இடத்திலும், ரோரி பர்ன்ஸ் 6 இடங்கள் உயர்ந்து 61வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர். அவுஸ்திரேலிய கப்டன் டிம் பெய்ன் 6 இடங்கள் முன்னேறி 60வது இடத்திலும் உள்ளனர்.

சட்டோகிராம் நகரில் நடந்த டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷை 224 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வென்றது. இதில் ஆப்கானிஸ்தான் வீரர் அஸ்கர் ஆப்கன் இரு அரை சதங்கள் அடித்ததால், தரவரிசையில் 110வது இடத்தில் இருந்து 63வது இடத்துக்கு உயர்ந்தார். சதம் அடித்த ரஹமத் ஷா 93வது இடத்தில் இருந்து 65வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

கப்டன் ரஷித் கான் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 11 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் தரவரிசையில் 69வது இடத்தில் இருந்து 37வது இடத்துக்கும், முகமது நபி 85வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here