சிங்கள மக்களை பகைக்காத விதத்தில் 6 மாதத்தில் தீர்வு: சஜித்- கூட்டமைப்பு யாழில் உயர்மட்ட கலந்துரையாடல்!

ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைந்த பின்னர், இனப்பிரச்சனை தீர்வு விவகாரத்தை எப்படி அணுகுவது என்பது குறித்து சஜித் பிரேமதாசவும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்களும் இன்று கலந்துரையாடினர்  என தமிழ்பக்கம் அறிந்தது.

யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட சஜித் பிரேமதாச, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர்களுடன் இன்று இந்த உயர் மட்ட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, த.சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன் ஆகியோருக்கு யாழ் நகரிலுள்ள ஜெட்விங் ஹொட்டலில் இன்று மதிய போசண விருந்தளித்தார். இதன்போதே, இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. ஐ.தே.க தரப்பில் சஜித் பிரேமதாச, மங்கள சமரவீர, எரான் விக்ரமரட்ண ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

சுமார் இரண்டு மணித்தியாலம் வரை நீடித்த இந்த கலந்துரையாடலில் பேசப்பட்ட விவகாரங்களை தமிழ்பக்கம் பெற்றுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் சஜித் வெற்றியடைந்த பின்னர் தமிழர் பிரச்சனையை எப்படி அணுகுவது என்பது குறித்து இதன்போது ஆராயப்பட்டது.

ஜனாதிபதியாக பதவியேற்ற முதல் ஆறு மாதங்களிற்குள் இனப்பிரச்சனையை தீர்க்க வேண்டும், அதற்கு மேல் இழுத்தடித்தால் தீர்க்க முடியாமல் போய்விடும் என்பதை குறிப்பிட்ட சஜித், தான் ஜனாதிபதியானால் ஆறு மாதங்களிற்குள் இனப்பிரச்சனையை தீர்ப்பேன் என்றார்.

எனினும், எப்படியான வடிவத்தை அவர் தீர்வாக வைத்திருக்கிறார் என்பதை தெரிவிக்கவில்லை. ஏற்கனவே மங்கள சமரவீரவின் இல்லத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சில வாரங்களின் முன்னர் சந்தித தகவலை தமிழ்பக்கம் வெளியிட்டிருந்தது. அதன்போதும், தீர்வு வடிவம் குறித்து சஜித் தெளிவாக பேசவில்லை. இனப்பிரச்சனை விவகாரத்தை அவர் முழுமையாக விளங்கியதாக, அவர் வெளிப்படுத்தியிருக்கவில்லை. இன்றைய சந்திப்பிலும் அவர் இனப்பிரச்சனை பற்றிய தெளிவான பார்வையை வெளிப்படுத்தியிருக்கவில்லையென தமிழ்பக்கம் அறிந்தது.

“ஒற்றையாட்சியை கடந்து வெறொரு வடிவத்தில் தீர்வு என்றால் சிங்கள மக்கள் குழப்பமடைந்து விடுவார்கள். சிங்கள மக்களை குழப்பமடைய வைத்து தீர்வொன்றை எட்ட முடியாது என்ற யதார்த்தத்தை நாம் புரிய வேண்டும்“ என சஜித் தெரிவித்தார்.

‘வார்த்தைகளில் கவனம் செலுத்தாமல், உள்ளடக்கத்தில் கவனம் செலுத்தலாம். ஒற்றையாட்சியென்ற அரசியலமைப்பிற்குள் சுயாட்சிக்குரிய அம்சங்களுடன் பல்வேறு நாடுகளில் அரசியலமைப்பு உள்ளது. வார்த்தைகளில் சிக்காமல்- வார்த்தைகளால் சமாளித்து- அதிகாரங்களை பகிர்ந்து அரசியலமைப்பை உருவாக்கலாம்“ என சுமந்திரன் குறிப்பிட்டார்.

சமஷ்டி கோரிக்கையுடன் தமிழ் மக்கள் நீண்டகாலமாக போராடியதை குறிட்ட மாவை, அதற்கு குறைந்த எந்த தீர்வையும் ஏற்க முடியாதென்றார்.

“சமஷ்டியின் குணாம்சங்களும், அலகுகளும் தமிழர்களிற்கான தீர்வில் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும். அதேவேளை சிங்கள மக்களை குழப்பாமல் நுணுக்கமாக செயற்பட வேண்டும். ஆனால், அதற்கு முன்னர் ஐ.தே.க தரப்பின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை தீர்மானித்து விட்டீர்களா?“ என த.சித்தார்த்தன் கேட்டார்.

“ஜனாதிபதி வேட்பாளர் பற்றிய குழப்பம் ஐ.தே.கவிற்குள் நீடிக்கிறது. யார் வேட்பாளர் என்ற குழப்பத்தால், மக்கள் இங்கு குழப்பமடைந்துள்ளனர். யார் வேட்பாளர் என்பதில் உடன்பாட்டிற்கு வந்துவிட்டீர்களா? நீங்கள் போட்டியிடுவீர்களா?“ என சுமந்திரன் கேட்டார்.

சித்தார்த்தன், சுமந்திரனின் கேள்விகளிற்கு பதிலளித்த சஜித்- “நான் இம்முறை போட்டியிடாமல் விட்டுக்கொடுக்கலாம். எனக்கு அதில் ஆட்சேபணையில்லை. எனக்கு இன்னும் காலமிருக்கிறது. ஆனால், என்னை தவிர்த்தால், கட்சிக்குள் வெற்றியடைய கூடியவர்கள் யார் இருக்கிறார்கள்? வேறு யார் போட்டியிட்டாலும், கட்சி தோல்வியடையும். கட்சி வெற்றியடைய வேண்டுமென்பதற்காகவே போட்டியிட விரும்புகிறேன்“ என்றார்.

“இனப்பிரச்சனை தீர்வு விவகாரம் பெரிய விடயம். அதனால் எப்படியான தீர்வை எட்டுவது என்ற கலந்துரையாடலை ஒரே சந்திப்பில் எட்ட முடியாது. பல்வேறு கருத்துக்களில் இருந்து, வடிவமொன்றை கண்டுபிடிப்போம். இது அதற்கான முதல் சந்திப்பாக இருக்கட்டும்“ என்றார் சஜித்.

“அதுதான் சரி. முதலில் ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை நீங்கள் தீர்மானியுங்கள். அதன்பின்னர், அடுத்த கட்ட பேச்சுக்களை தொடரலாம்“ என கூட்டமைப்பு தரப்பில் குறிப்பிடப்பட்டது.

சுமார் 2 மணித்தியாலம் நடந்த சந்திப்பின் பின்னர் சஜித் கிளிநொச்சி கிளம்பிச் சென்றார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here