வடக்கின் சுகாதாரத் திணைக்களம் செயலற்றுப் போகிறதா?

இலங்கையில் செயற்திறமை மிக்க சுகாதாரத் திணைக்களமாகப் பெருமையுடன் அடையாளப்படுத்தப்பட்ட வடக்கின் சுகாதாரத் திணைக்களம் தொடர்பில் அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் சனங்களில் வயிற்றில் புளியைக் கரைப்பனவாகவே அமைந்துள்ளன.

நாட்டில் அசாதாரண சூழல் நிலவிய காலப்பகுதிகளில் முழு நாட்டுக்குமே உதாரணமாக வடக்கு-கிழக்கு மாகாண சுகாதாரத்திணைக்களமானது செயற்பட்டுவந்தது. பின்னர் தனித்தனியாக இவை பிரிந்தபோதும் கூட தமது செயற்திறனில் பின்தங்கிவிடாது இடம்பெயர்வுகள் மீள்குடியேற்றங்கள் மற்றும் மீள்கட்டுமாணங்கள் என தொடர்ந்த சவால்கள் அனைத்தையும் மிகக்குறைந்த ஆளணி மற்றும் பௌதீகவளங்களுடன் இத் திணைக்களங்கள் எதிர்கொண்டு சாதித்தமை வரலாறு.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக வடக்கின் சுகாதாரத்துறை தொடர்பாக அதன் செயல்விளைவுகள் தொடர்பாக வெளியாகிவரும் செய்திகளை அடுத்து நாம் அதுகுறித்து ஆராயப் புறப்பட்டோம். இந்த ஆய்வில் நாம் கண்டுகொண்ட பல விடயங்கள் அதிர்ச்சிகரமானவை. பொதுவெளியில் பகிரப்படமுடியாதவை. எனினும் பொதுமக்களது நன்மை கருதி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி சம்பந்தப்பட்டவர்களது கவனத்தை ஈர்க்கும்பொருட்டு அவற்றில் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறோம்.

‘ஆக்கிரமிக்கப்பட்ட’ பிராந்திய பயிற்சி நிலையம்

பிராந்திய பயிற்சி நிலையத்திற்கெனக் (Regional Training Centre) கட்டப்பட்ட கட்டிடத்திலேயே வடமாகாண சுகாதார அமைச்சு மற்றும் மாகாண சுகாதார அமைச்சு இயங்குகின்றன. இதனால் வடக்கிலுள்ள ஒரே ஒரு பிராந்திய பயிற்சி நிலையமானது இலங்கையிலேயே எவ்வித அடிப்படை வசதிகளும் அற்ற ஒரு நிலையமாக யாழ்மாவட்ட மார்புநோய் சிகிசை;சை நிலையத்தின் மேல்மாடியில் கடந்த பல வருடங்களாக இயங்கி வருகிறதாம். வடக்கின் சுகாதார ஆளணி உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தப் பிராந்திய பயிற்சி நிலையத்தின் கையறு நிலை காரணமாக கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் பாரிய தடங்கல்கள் நேரிடுவதாக சம்பந்தப்பட்ட வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

இப்பிராந்திய பயிற்சி நிலையத்தில் மாகாண சுகாதாரத் திணைக்களம் மற்றும் சுகாதார அமைச்சின் செயலகங்கள் அமைக்கப்படுவதற்கான அனுமதியினை அப்போதிருந்த யாழ் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளரே தமது உயரதிகாரிகளது மனங்களைக் குளிர்விப்பதற்காக வழங்கினார் எனவும் அவரே தற்போது மாகாண சுகாதார அமைச்சில் முக்கிய பதவியில் இருக்கிறார் எனவும் அதே வட்டாரங்கள் தகவல் தந்தன.

காணாமல் போகும் வடமாகாண மார்பு நோய் சிகிச்சை நிலையம்

இலங்கையில் மிகப் பழமையானதும் அக்காலத்திலேயே மிகுந்த வசதிகளுடனும் செயற்பட்ட வடமாகாண மார்பு நோய் வைத்தியசாலை அமைந்திருந்த நிலப்பரப்பு மயிலிட்டிப் பகுதியில் பாதுகாப்புத் தரப்பினரால் விடுவிக்கப்பட்டும், அதனை மீளமைத்து வடக்கிற்கான சிறப்பு மார்புநோய் சிகிச்சை மையமாக அபிவிருத்தி செய்யப்படுவதற்கு வடக்கின் சுகாதார உயர் அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை என மார்பு நோய் சிகிச்சை நிலையப் பொறுப்பு வைத்தியர் சி.யமுனானந்தா அண்மையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பில் ஆராய்ந்தபோது யாழ்ப்பாணப் பிராந்திய பயிற்சி நிலையக் கட்டடத்தினை நிரந்தரமாக கையகப்படுத்தும் நோக்குடன் அப்பயிற்சி நிலையத்திற்கெனப் புதிதாக கட்டடங்களை மயிலிட்டி மார்புநோய் வைத்தியசாலைக் காணியில் நிர்மாணிக்க வடமாகாண சுகாதாரத் திணைக்களம் முயன்று வருவதாக ஒரு தகவல் கிடைத்தது. அதுதவிர குறித்த காணியானது வேறு திணைக்களங்களுக்கும் பகிரந்து அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தகவல்கள் உண்மை எனில் மாணவர்கள் மற்றும் வளவாளர்கள் இலகுவாக அணுகும் வகையில் பண்ணையில் கட்டப்பட்ட பிராந்திய சிகிச்சை நிலையத்தினை விடவும் மயிலிட்டிப் பகுதயில் அமைக்க எண்ணியுள்ள இடத்தினை இலகுவாக அணுக முடியுமா என்ற கேள்வியினை விடயமறிந்தவர்கள் எழுப்பினர்.

மேலும் தமது வசதிகளை மட்டும் கருதி பண்ணைப் பகுதியில் பிராந்திய பயிற்சி நிலையத்தினை ஆக்கிரமித்துள்ள வடக்கின் சுகாதார உயரதிகாரிகள், தற்போது அதே காரணத்துக்காக பிராந்திய பயிற்சி நிலையத்தின் செயற்பாடுகளை மேலும் சிக்கலுக்குள்ளாக்கும் வகையிலும், வடக்கில் மார்புநோய் காரணமாக அவதிப்படும் மக்களது அவலத்திற்கு தீர்வு கிடைப்பதைத் தடுக்கும் வகையிலும் செயற்படுவதாகவே தோன்றுகிறது.

பறிபோகும் வவுனியா தாதியர் பயிற்சிக் கல்லூரி

இலங்கையில் உள்ள தாதியர் பயிற்சிக் கல்லூரிகளில் வவுனியா தாதியர் பயிற்சிக் கல்லூரி மட்டுமே மாகாணசபை நிர்வாகத்தின்கீழ் பரிபாலிக்கப்பட்டு வருகிறது.

இந்தத் தாதியர் பயிற்சிக் கல்லூரிக்கான மாணவர்களது ஊக்குவிப்புக் கொடுப்பனவுகள் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஊடாக மத்திய அரசினால் வழங்கப்பட்டுவந்த நிலையில், வடக்கின் சுகாதாரத் திணைக்களத்தின் செயற்திறனும் நடைமுறைச் சாத்தியங்களும் அற்ற பின்விளைவுகளை உணராத முடிவுகள் காரணமாகத் தற்போது அனுராதபுர போதனா வைத்தியசாலை ஊடாக வழங்கப்படுவதாக தெரியவந்தது.

இதன் அடுத்தகட்டமாக வவுனியா தாதியர் பயிற்சிக் கல்லூரியானது அனுராதபுர போதனா வைத்தியசாலை நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்படலாம் என விடயமறிந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

அதாவது எவ்வாறு வடக்கு கிழக்கில் நிர்வாகப் பிரிவுகள் அருகில் உள்ள பெரும்பான்மை இன நிர்வாகப் பிரிவுகளுடன் தந்திரோபாயமாக இணைக்கப்பட்டு இறுதியில் நிரந்தரமாகவே எமது கைகளை விட்டுப் போயினவோ அதே பாணியில் இத் தாதியர் பயிற்சிக் கல்லூரியும் பறிபோகப் போகிறது.

வரலாற்றில் முதல் தடவையாக மூடப்பட்ட வைத்தியசாலை

இவ்வருடம் சித்திரை மாதத்தில் வைத்தியர்கள் மற்றும் வைத்திய நிபுணர்கள் மத்தியில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாகத் திடீரென முல்லைத்தீவு பொது மருத்துவமனை (மாஞ்சோலை) வைத்தியசாலையை மூடிவிட்டு மாகாணப் பணிப்பாளர், மாவட்டப் பணிப்பாளர், வைத்தியசாலைப் பணிப்பாளர் ஆகியோருடன் மாஞ்சோலை வைத்தியசாலை வைத்தியர்கள் அனைவரும் கொழும்பு சுகாதார அமைச்சிற்குப் புறப்பட்டுச் சென்றிருந்தனர். இதனாலேயே யுத்த காலத்திலும் இடம்பெயர்ந்து மக்கள் சேவையாற்றிய மாஞ்சோலை வைத்தியசாலை அதன் வரலாற்றில் முதல் தடவையாக நிர்வாகத் திறமையீனத்தின் விளைவாகச் செயலிழந்து போயிருந்தது.

இவ்விடயம் தொடர்பில் மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் அவர்களைத் தொடர்பு கொண்டு வினவியபோது அவர் இதனை உறுதிப்படுத்தியதுடன் “இது வைத்தியர்கள் மற்றும் வைத்திய நிபுணர்கள் இடையிலான முரண்பாடு என்பதால் இதனை மத்திய சுகாதார அமைச்சே தீர்த்து வைக்க வேண்டும். இந்த விடயத்தில் மாகாண சுகாதர திணைக்களத்திற்கு எவ்வித அதிகாரமும் இல்லை” என்று உறுதிபடத் தெரிவித்ததாகச் செய்திகள் வெளியாகியிருந்தன.

ஆனால் மாகாணத்தின் மூத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் இளைப்பாறிய மூத்த மாகாண சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்கள் அக்கருத்தினை முற்றாக மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

“கடந்த காலங்களில் வடமாகாணத்தில் வைத்தியர்கள் மற்றும் வைத்திய நிபுணர்கள் தொடர்பான பல பிணக்குகளுக்குத் தீர்வுகள் வைத்தியசாலை மட்டங்களிலும் மாவட்ட மட்டங்களிலும் கூட எட்டப்பட்டுள்ளன. அதற்கும் மேலாக மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் அல்லது ஆளுநர் தலையிட்டுத் தீர்வு வழங்கிய சந்தர்ப்பங்கள் சில வடமாகாணத்தில் நடைபெற்றிருக்கிறன. அத்துடன் எமது அறிவுக்கு எட்டிய வரையில் வடமாகாண சபையின் ஆளுகைக்கு உட்பட்ட வைத்தியசாலை ஒன்றில் ஏற்பட்ட சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்கு மத்திய சுகாதார அமைச்சு தலையிட்டதோ அல்லது வைத்தியசாலையைச் செயலிழக்கச் செய்துவிட்டு வைத்தியர்கள் தீர்வு தேடிக் கொழும்புக்குச் சென்றதோ இதுவரை காலத்தில் நடந்தது இல்லை.” என மிகவும் தெளிவாகக் கூறியிருந்ததாக அப்போது செய்திகள் வெளியாகியிருந்தன.

செயலிழக்கும் சுற்றயல் மருத்துவமனைகள்

பின்விளைவுகள் குறித்து ஆராயாது நிதிமுகாமைத்துவம் என்ற போர்வையில் மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் நிதிப்பிரிவினர் தன்னிச்சையாக செயற்படுத்தும் நடைமுறைகளால் சுகாதாரத் திணைக்களத்தின் பலசெயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டு வருவதாக இன்னொரு தகவல் கிடைத்தது.

இதனை ஆராய்ந்தபோது அதிலும் உண்மை இருப்பதாகவே எமக்குத் தெரியவந்தது. உதாரணமாக வைத்தியசாலைகளில் கடமைச் சுற்றொழுங்கினை (Duty Roster) ஆளணிகளுக்கு ஏற்பத் தீர்மானித்துத் தடங்கலற்ற சேவைகளினை வழங்குவதற்கான அதிகாரம் அந்ததந்த வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர்களையே சார்ந்தது.

தற்போது அந்த நடைமுறையினை மீறி ஆளணி நிலைமைகளையும் வைத்தியசாலைகளது அகப் புறச் சூழல்களையும் கருத்தில் கொள்ளாது மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் நிதிப்பிரிவினால் தீர்மானிக்கப்பட்டவாறு ஒரே வகையான கடமைச் சுற்றொழுங்கினை மாகாணத்தின் சகல சுற்றயல் வைத்தியசாலைகளிலும் மேற்கொள்ளுமாறு; பணிக்கப்பட்டுள்ளதாம்.

இதன் காரணமாகப் பல சுற்றயல் வைத்தியசாலைகளில் வாரஇறுதி மற்றும் பொது விடுமுறை தினங்களில் மருந்தாளர்கள் உள்ளிட்ட முக்கிய பணியாளர்கள் வரவு இன்மை காணப்படுவதால் வைத்திய சேவைகள் முடங்கிப்போயிருப்பதாகத் தெரியவருகிறது.

இந்நிலை தொடர்ந்தால் வடக்கினை தமது நியமனத்தின்போது தெரிவு செய்வதனை அனேக சுகாதாரப் பணியாளர்கள் எதிர்காலத்தில் தவிர்க்கும் அபாயம் இருப்பதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

தாதிய பதவி உயர்விற்கான நேர்முகத்தில் குளறுபடி

தாதிய உத்தியோகத்தர்களை தரம் – 1 இற்குப் பதவி உயர்த்துவதற்கான தகுதிவாய்ந்தவர்களைத் தெரிவு செய்வதில் வடமாகாண சுகாதாரத் திணைக்களம் விட்ட தவறுகளால் வடக்கில் தாதியர்கள் மத்தியில் கடந்த சில மாதங்களாகப் பாரிய குழப்பநிலை தோன்றியிருந்ததாக அறிய முடிகிறது.

அதாவது மேற்படி பதவி உயர்விற்காக நடத்தப்பட்ட திணைக்களத்தினால் ஒரு நேர்முகத் தேர்வு மட்டுமே நடத்தப்பட வேண்டியிருந்த நிலையில் அந்த நேர்முகத் தேர்வுகள் இரண்டு தடவைகள் நடாத்தப்பட்டமை. அதன்பின்னர் அந்த இரண்டு நேர்முகத்தேர்வுகளின் முடிவுகளை இரத்துச் செய்து மூன்றாவது தடவையாக வடக்கின் மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழுவினால் ஒரு நேர்முகப் பரீட்சை நடாத்தப்பட்டமை ஆகியவற்றினால் உரிய தகுதிகள் இருந்தும் புள்ளி வழங்கலில் மேற்கொள்ளப்பட்ட தவறுகளால் பல தாதியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனராம்.

அத்துடன் மத்திய சுகாதர அமைச்சினால் இப் பதவி உயர்விற்காக வடக்கின் தாதிய சேவை தரம் 1 ற்காக ஆளணி வெற்றிடம் குறித்து 2018ஆம் ஆண்டில் கோரப்பட்டபோது மாகாண சுகாதாரத் திணைக்களமானது அதற்கான பதிலினை அசண்டையீனமாக வழங்கியதன் காரணமாக 61 தாதிய உத்தியோகத்தர்கள் தெரிவுசெய்யப்பட்டிருக்க வேண்டிய நிலையில் 44 தாதிய உத்தியோகத்தர்கள் மட்டுமே தற்போது வடக்கிலிருந்து தெரிவு செய்யப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

இவ்விடயம் தொடர்பில் 12.06.2019 புதன்கிழமை மக்கள் சந்திப்பின்போது தம்மைச் சந்தித்த வடமாகாண தாதியர்களது பிரதிநிதிகளுடன்; வடமாகாண ஆளுனர் அவர்கள் உரையாடும்போது “ மாகாண சுகாதாரப் பணிப்பாளர் பணிமனை நாய்கள் நேர்முகப் பட்டியலை நேரடியாக மத்திய சுகாதார அமைச்சிற்கு அனுப்பாது ஏன் மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு ஊடாக அனுப்பினார்கள்” எனச் சினந்தாராம் எனச் செய்திகள் வெளியாகியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சுகாதாரத் தொண்டர்களது நேர்முகப் பரீட்சைக் குளறுபடிகள்

மேற்சொன்ன எல்லாவற்றிக்கும் சிகரம் வைத்தது போல கடந்த வாரத்தில் சுகாதாரத் தொண்டர்களது நேர்முகப்பரீட்சைகளில் வடக்கின் சுகாதாரத்துறை உயரதிகாரிகள் மேற்கொண்ட குளறுபடிகள் வெளியாகி சந்தி சிரிக்க வைத்ததுடன் அது வடக்கில் அனைவரது பேசுபொருளாக மாறிப்போனது.

இக்குளறுபடியிலும் சம்பந்தப்பட்ட அனைவரும் மாகாண சுகாதாரத் திணைக்களம் நோக்கியே விரல்நீட்டுகின்றனர். இவ்வளவு குளறுபடிகளுக்கும் மூலகாரணமான திணைக்களத்தின் மூத்த உயரதிகாரி இக்குளறுபடிகள் வெளியானதும் நியமனம் வழங்க எனக் குறிப்பிடப்பட்ட தினமான 05ம் திகதிக்கு முன்னதாக தாம் வெளிநாடு செல்வதாகக் கூறி அவசரமாக வடக்கை விட்டு வெளியேறிவிட்டதாக அவருடன் நெருக்கமான சில வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. மேலும் அவர் 08ம் திகதியே அந்த வெளிநாட்டுப்பயணத்தினை மேற்கொள்ள உள்ளார் என எமக்குக் கிடைத்த நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

குளறுபடிகளின் ஆதிமூலம்

இக்கட்டுரைக்கு ஆதாரம் தேடி நாம் தொடர்புகொண்ட அனைவரும் ஒரே குரலில் தெரிவித்த ஒரே விடயம் ‘தற்போது வடமாகாண சுகாதாரத் திணைக்களமானது ஒரு உறுதியான தலைமைத்துவம் இன்மையால் தடுமாறிவருகிறது’ என்பதாகும்.

வடக்கின் சுகாதார நிர்வாகத்துறையில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் மிக்கவர்களாக சுகாதார நிர்வாகத்துறையுடன் எவ்வித சம்பந்தமோ அல்லது முன் அனுபவமோ அற்ற சில உயரதிகாரிகளே செயற்படுவதாக விடயமறிந்தவர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த ‘பஞ்சமூர்த்திகள்’ எடுக்கும் முடிவுகளுக்கே மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் மிகமூத்த அதிகாரி தலையாட்டுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதற்கான ஒரு உதாரணமாக கடந்த வாரம் வெளிநாட்டுச் சுற்றுப்;பயணம் செல்வதாக கூறி சுகாதாரத் தொண்டர்களது நியமன தினத்தில் தப்பியோடிய மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் இந்த மிகமூத்த அதிகாரி ஒரு மருத்துவ நிர்வாக சேவை அதிகாரியாம். இவர் வெளிநாடு செல்வதாயின் இன்னொரு மருத்துவ நிர்வாக சேவை அதிகாரியிடம் அல்லது மருத்துவசேவை அதிகாரி ஒருவரிடமே பதில் கடமைக்கான ஒப்பத்தினைப் பெற்றிருக்கவேண்டுமாம் எனவும் ஆனால் குறித்த உயரதிகாரி மாகாண சுகாதாரத் திணைக்களத்தினை ‘நிழல் நிர்வாகத்தின்மூலம்’ இயக்கிவரும் ‘பஞ்சமூர்த்திகளில்’ ஒருவரான இலங்கை நிர்வாக சேவை அதிகாரியிடமே இந்த பதில் கடமை ஒப்பத்தினைப் பெற்றுள்ளாராம் என்றும் நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. குறித்த இலங்கை நிர்வாகசேவை அதிகாரி ஏற்கெனவே ‘நெல்சிப்’ சர்ச்சைகளில் சிக்கி இடமாற்றம் பெற்றே சுகாதாரத் திணைக்களத்திற்கு வந்தார் என்பது கொசுறுத் தகவல். இத்தகவல் உண்மை எனில் இந்த மிகமூத்த அதிகாரியின் வெளிநாட்டுப் பயணத்திற்கு வடமாகாண ஆளுனர் ஏற்கெனவே அனுமதி வழங்கியிருப்பாராயின் ‘பதில் கடமைக்குரிய அலுவலர் யார்?’ என்பது குறித்து ஆளுனர் கவனம் செலுத்தினாரா என்பதும், இனியாவது இதுகுறித்து உரிய நடவடிக்கைகளை ஆளுனர் அவர்கள் எடுப்பார்களா என்பதும் கேள்விக்குறியே.

குறித்த மாகாண சுகாதாரத்திணைக்களத்தின் உயரதிகாரியானவர் விருதுகளுக்காக விண்ணப்பிப்பதில் காட்டும் ஆர்வத்தினையும் ஊக்கத்தினையும் மருத்துவசேவை நிர்வாகத்தில் காட்டினால் பல சிக்கல்களை அவரால் முன்கூட்டியே தவிர்த்திருக்க முடியும் எனவும் தற்போதுகூட அவர் மாகாண சுகாதாரத் திணைக்களத்தில் திறன் விருதுக்கான செயல்பாடுகளில் (Productivity award) தனது கவனத்தைச் செலுத்துகிறாரே தவிர மாகாண சுகாதாரத்துறையின் சீரான செயற்பாடுகள் குறித்து அக்கறையின்றிச் செயற்படுகிறார் எனவும் வடக்கில் நாம் தொடர்பு கொண்ட சுகாதாரப் பணியாளர்கள் விசனம் வெளியிட்டமையை அவதானிக்க முடிந்தது.

புதிய செயலாளர் நியமனமும் எதிர்காலமும்

மேலும் வடமாகாண சுகாதாரத் திணைக்களத்தின் செயற்திறன் குன்றியமைக்கு சுகாதார அமைச்சின் பொறுப்புவாய்ந்த முன்னாள் உயரதிகாரி ஒருவரது ‘தாமரை இலையில் தண்ணீர்’ போக்கும் ஒரு காரணமாம்.

இந்நிலையில் வடமாகாண ஆளுனரது நேரடித் தலையீட்டின் காரணமாகப் புதிய பதில் செயலாளர் ஒருவர் வடமாகாண சுகாதார அமைச்சிற்கு கடந்தவாரம் நியமிக்கப்பட்டிருப்பதனை அடுத்து மக்கள் மனங்களில் சிறிது நம்பிக்கை துளிர்விட்டுள்ளது.

ஆகவே சுகாதாரத் தொண்டர்களது மீள் நேர்காணல் எவ்வளவு தூரம் நீதியாக மேற்கொள்ளப்படும்? வடக்கின் சுகாதாரத் திணைக்களத்தின் செயல்திறனை மீட்டெடுத்து சரிந்துவரும் சுகாதாரத்துறையினை தூக்கி நிறுத்தப்போவது யார்? என்பனவே தற்போது எம் அனைவர் முன்னும் உள்ள கேள்விகளாகும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here