காதலி வீட்டின் முன்பு வாலிபர் தீக்குளித்து சாவு: காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விபரீதம்

எர்ணாவூரில் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலி வீட்டின் முன்பு வாலிபர் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து உயிரிழந்தார்.

சென்னை, வடபழனியைச் சேர்ந்தவர், மொய்தீன் (வயது 27). நந்தனத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். அதே நிறுவனத்தில் எர்ணாவூரை சேர்ந்த மீனா (23) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரும் வேலை பார்த்தார்.

ஒரே நிறுவனத்தில் வேலைப்பார்த்த இருவரும் முதலில் நட்பாக பழகி பின்பு காதலிக்க தொடங்கினர். மீனா தன்னுடைய காதல் குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதற்கு அவரது பெற்றோர் சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மீனாவை வேலைக்கு அனுப்புவதையும் நிறுத்தி விட்டதாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து மொய்தீன், மீனாவை போனில் தொடர்பு கொண்டு தன்னை திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து அவர் மொய்தீனிடம் தொடர்ந்து செல்போன் பேசுவதை நிறுத்தி விட்டார்.

இந்தநிலையில், மனமுடைந்த மொய்தீன், நேற்று முன்தினம் இரவு எர்ணாவூரில் உள்ள மீனாவின் வீட்டுக்கு வந்து தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார்.

அதற்கு மீனாவின் பெற்றோர், பிரச்சினை செய்யாமல் இங்கிருந்து செல்லுமாறு கூறினர். இதனால் ஆத்திரமடைந்த மொய்தீன், தான் கேனில் கொண்டு வந்திருந்த மண்எண்ணெய்யை, திடீரென்று உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதனால், உடல் முழுவதும் தீப்பற்றிக்கொண்டதில் மொய்தீன் அலறி துடித்தார். உடனே இதைப்பார்த்த காதலி மீனா ஓடி வந்து தீயை அணைத்து, அவரை காப்பாற்ற முயன்றார். அக்கம்பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்தநிலையில் நேற்று மொய்தீன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதில் தீக்காயம் அடைந்த அந்த பெண் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து, எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here