போராளி தொடக்கம் சந்தர்ப்பவாதம் வரை: வரதராஜ பெருமாளின் இரண்டாவது இன்னிங்ஸ்!

கோட்டாபயவிற்கான திடீர் ஆதரவு அறிவிப்புக்களினால் மெல்ல செய்திகளில் எட்டிப்பார்க்க தொடங்கி, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துடன் “டைம் லைனில்“ வந்திருக்கிறார் முன்னாள் வட,கிழக்கு முதலமைச்சர் வரதராஜ பெருமாள்.

சமூக ஊடகங்களிலும் சகட்டு மேனிக்கு வசைபாடப்பட்டே டைம் லைனிற்கு வந்தார். இப்பொழுது, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அவருக்கு “அர்ச்சனை“ செய்துள்ளனர்.

“காணாமல் ஆக்கப்பட்டவர்கள் யாரும் உயிருடன் இல்லையென்பது எல்லோருக்கும் தெரியும்“ என வரதராஜ பெருமாள் கூறியிருந்தார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தையடுத்து, வரதர் அப்படியென்ன சொன்னார்? அவர் யதார்த்தவாதி, யதார்த்தத்தைத்தானே சொன்னார்? காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தின் பின்னால் யாரோ இருக்கிறார்கள் என வரிந்து கட்டிக் கொண்டு, வரதர் அணி சமூக ஊடகத்தில் களமிறங்கி விட்டது.

இதற்கு முன்னர் தமிழ்பக்கத்தில் எழுதப்பட்ட கட்டுரையில், வரதர் ஒரு போராளியென்ற ரேஞ்சில் எழுதிவிட்டு, இப்பொழுது இப்படியெழுதுவது முரண்பாடாக சிலருக்கு தோன்றலாம். அப்பொழுது எழுதியது, போராட்ட இயக்கங்களின் ஆரம்ப நாட்கள் மற்றும் தியாகி துரோகி அரசியலை பற்றியது. அந்த பார்வையில் வரதரின் ஆரம்ப நாட்களை குறிப்பிட்டிருந்தோம். அது வரதர் பற்றிய ஒரு முழுமையான சித்திரமல்ல.

வரதரைப் பற்றிய முழுமையான சித்திரமொன்றில், அவர் மீது கறுப்பு மையும் பூசப்படும். அந்த காலகட்டத்தை அவர் இப்போது செய்வதை போல மௌனமாக கடக்க முடியாது.

இன்று திடீரென வானத்திலிருந்து குதித்தவரை போல, யாழில் செய்தியாளர்களை சந்தித்து, தமிழ் தேசிய கூட்டமைப்பையும், வடமாகாணசபையையும், தமிழ் தேசியத்தையும் அவர் விமர்சித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், வரலாறு அவரை விடுதலை செய்யவில்லை. அவர், தன்னையும், ஒரு காலகட்டத்தையும் சுயவிமர்சனம் செய்ய வேண்டிய தேவையுள்ளது. அவர் அதை மௌனமாக கடக்க முடியாது.

இன்றைய வடமாகாணசபையை விமர்சிக்கும் வரதர், அன்றைய வட,கிழக்கு மாகாணசபையை என்ன செய்தார்கள்? இந்தியாவின் ஏவலாட்களாக நடந்ததை விட அதிகபட்சமாக என்ன செய்தார்கள்?

திரும்பிப்பார்க்கும்போது, இன்றைய மாகாணசபைக்கு சொல்வதற்கு எதுவுமில்லையென்பதை போல, அன்றைய வட,கிழக்கு மாகாணசபைக்கும் எதுவுமே கிடையாது. அரசியல் நெருக்கடியால், இந்தியாவின் உத்தரவால் செய்யப்பட்ட தமிழீழ பிரகடனத்தை தவிர வேறொன்றும் கிடையாது. அப்போதைய மூத்த ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பினர் இப்பொழுதும் வருந்திச் சொல்வது- அன்றைய மாகாணசபையை குடித்துக்குடித்தே அழித்தார்கள் என.

ஆக, இந்த தமிழ் அரசியலில் இன்றிருப்பது எல்லாமே காகங்கள்தான். வரதர் தன்னை கொக்காக நினைப்பதுதான் பிரச்சனை.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தில், அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பதல்ல பிரச்சனை. அது பற்றி எல்லோருக்கும் தெரியும். அவர்களிற்கு என்ன நடந்தது? அந்த குற்றங்களிற்கு யார் பொறுப்பாளி என்பதே முதன்மையான கேள்வி. இந்த கேள்வி- பதிலை தவிர்த்து விட்டு, அந்த விவகாரத்தை கையாள முடியாது. வரதராஜ பெருமாள் ஒரு தேசியப்பட்டியல் எம்.பியை பெற வேண்டுமென்பதற்காக, பிள்ளைகளை பறிகொடுத்து விட்டு வீதியோரமாக 1000 நாளாக போராடுபவர்கள் எழுந்து செல்ல வேண்டுமென நினைக்கக்கூடாது.

நல்லிணக்கமென்பது, தோற்கடிக்கப்பட்டவர்கள், பலவீனமானவர்கள்- எதுவும் செய்ய முடியாமல் விட்டுக்கொடுத்து செல்வதல்ல. அது இரண்டு தரப்பு நகர்வு. காணாமல் போனவர்கள் விவகாரத்தில் இழப்பீடு வாங்கி “செட்டில்” ஆகுங்கள் என்பது, அரசை காப்பாற்றும் எத்தனம். இழப்பீடா, மன்னிப்பா என்பது கடைசி கட்ட தீர்மானம். அதை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள் எடுக்க வேண்டியது. அதற்கு முன்பாக, அரசு செய்ய வேண்டிய படிமுறைகள் பலவுள்ளன.

அதை வசதியாக மறந்துவிட்டு, “யதார்த்தமாக பேசுகிறேன்“ என, மறப்போம் மன்னிப்போம் என்பது, சந்தர்ப்பவாத அரசியல். வரதராஜ பெருமாள் என்ற போராளி, பல தசாப்தங்களின் முன்னரே காணாமல் போய், ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதியாக திரும்பி வந்திருக்கிறாரோ என்ற வலுவான கேள்வியை, வரதராஜ பெருமாளின் இரண்டாவது இன்னிங்ஸ் அரசியல் எழுப்பியுள்ளது.

வரதராஜபெருமாளின் இரண்டாவது இன்னிங்ஸ் அரசியல் என்பது, “செட்டில்“ ஆகக்கூடிய ஏதாவதொரு அரசியல் அணியுடன் ஒட்டிவிடுவது என்ற குறிக்கோளையுடையதென்பது தெளிவாக தெரிகிறது. இதற்குள் மக்கள் நலன் போன்ற கவர்ச்சியான சுலோகங்களை முன்வைப்பதெல்லாம், அதை மறைப்பதற்கான கவசங்களே.

வரதராஜ பெருமாளின் இரண்டாம் இன்னிங்சை புரிந்து கொள்வது, அவரது இன்றைய அரசியலை புரிந்து கொள்ள உதவும்.

இந்தியப்படைகளுடன் தப்பியோடி, ஒரிசாவில் வாழ்ந்து, குடும்பமெல்லாம் “செட்டில்“ ஆகிய பின்னர் வரதராஜ பெருமாள் சில வருடங்களின் முன்னர் இலங்கைக்கு திரும்பினார். ஈ.பி.ஆர்.எல்.எவ் வரதர் அணியென இயங்கிய அணி, தமிழர் சமூக ஜனநாயக கட்சியென பெயர் மாற்றப்பட்டு, அதே பழைய முகங்கள், அதே பழைய நிலைப்பாடுகளுடன் அரங்கிற்கு வந்தது.

எப்படியும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் வரதராஜ பெருமாளை நுழைத்து விடலாமென்றுதான் ஆரம்ப திட்டம். இந்தியாவும் அதை ஆதரித்தது. அப்போது, கூட்டமைப்பிற்குள் ஈ.பி.ஆர்.எல்.எவ் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்ததால், சுரேஷின் ஜென்மப் பகையாளியான வரதராஜ பெருமாளை கூட்டமைப்பிற்குள் கொண்டு வர தமிழ் அரசு கட்சி ஒரு முயற்சி செய்தது.

மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன் இருவரும் இதில் ஆர்வமாக இருந்தனர். கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலும் இது பேசப்பட, அப்போது சுரேஷ் கடுமையாக எதிர்த்தார்.

பின்னர் சுரேஷ் கூட்டமைப்பை விட்டு வெளியில் சென்றதன் பின்னர், வரதராஜ பெருமாள் குழுவை உள்ளீர்ப்பது பற்றிய பேச்சுக்கள் தேக்கமடைந்திருந்தன. உள்ளூராட்சி தேர்தலிற்கு முன்னதாக, அந்த அணியின் தலைவரான சுகுவின் வீட்டிற்கு நேரில் சென்று எம்.ஏ.சுமந்திரன், ப.சத்தியலிங்கம் உள்ளிட்டவர்கள் பேச்சு நடத்தியிருந்தனர். ஆனால், ஏனோ பின்னர் அதை அவர்கள் தொடர விரும்பவில்லை. உள்ளூராட்சி தேர்தல் நெருங்கும் நிலையில், வேட்புமனு தாக்கல் நாள் நெருங்கும் நிலையில், தமிழரசுகட்சியினரை தொலைபேசியில் அழைத்தும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில், சாவகச்சேரி நகரசபைக்கு தனித்து வேட்புமனு தாக்கல் செய்தது தமிழர் சமூக ஜனநாயக கட்சி.

ஜனநாயக போராளிகள் கட்சியை எப்படி இப்போது, ஒரு “சின்ன வீடு“ மாதிரி கூட்டமைப்பிற்குள் வைத்திருக்கிறார்களோ, அப்படித்தான் அப்போது வரதர் குழுவை வைத்திருப்பதற்கு தமிழ் அரசு கட்சி விரும்பியது. ஆனால், வரதர் அணியின் எதிர்பார்ப்புக்கள் அதிகமாக இருந்ததால், தமிழ் அரசு கட்சி பின்வாங்கியிருக்கலாம்.

மீளவும் தமிழ் அரசியலில் பிரவேசித்த வரதராஜ பெருமாளின் முதல் ஒப்ஷன் தமிழ் தேசிய கூட்டமைப்பாகவே இருந்தது. ஆனால், அங்கு செல்வது முடியாமல் போனது.

இதன்பின்னர் யாழில் மாற்று அணிகள் என சிறிய சிறிய அணிகள் பல கூட்டு முயற்சிகள் மேற்கொண்டன. கிழக்கிலும் மேற்கொண்டன.எல்லா இடங்களிலும் தமிழர் சமூக ஜனநாயக கட்சி சென்றது. பிளேன்ரீயும், வடையும் சாப்பிட்டு கதைத்தது. கூட்டணிகளிற்கு தயாரென்றது. ஆனால், கையொப்பம் இடும் நாட்களில்- பாடசாலைகளில் ஒன்றுவிட்ட அப்பபம்மா செத்துப் போனா என சொல்லி லீவு அடிப்பதை போன்ற காரணங்களை சொல்லி- போகாமல் தவிர்த்தது. யாழில் ஒரு முயற்சி, கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் முயற்சிகளை இப்படி தவிர்த்தார்கள்.

அதாவது, அரசியல் நோக்கங்கள், கொள்கைகளிற்காக அல்லாமல், எந்த அணியில் இணைவது அதிக “பலனை“ தருகிறது என்பதை பார்த்து, கூட்டு வைக்கும் முயற்சியிலேயே தமிழர் சமூக ஜனநாயக கட்சி ஈடுபட்டது. அதற்காக எல்லா இடமும் பேரம் பேசியது.

அப்படித்தான் இப்பொழுது பெரமுன தரப்புடன், தமிழர் சமூக ஜனநாயக கட்சி கூட்டு வைத்ததும்.

வடக்கு ஆளுனராக ரெஜினோல்ட் குரே இருந்தபோது, யாழில் தமிழ் கூட்டொன்றை உருவாக்க ஈ.பி.டி.பி எத்தனித்தது. அதில் பேசிக் கொண்டிருந்த த.ச.ஜ.கட்சி, பின்னர் அப்போதைய வடக்கு ஆளுனர் ஊடாக பெரமுன தரப்புடன் நேரில் பேச விருப்பம் தெரிவித்தது. அந்த அணியில் இணைய சில “சன்மானங்களை“ எதிர்பார்த்ததாகவும் அப்போது அரசல்புரசலாக பேச்சடிபட்டது. அதெல்லாம் சில மாதங்களின் முன்னைய கதைகள்.

இப்பொழுது எப்படியோ அந்த அணிக்குள் தமிழர் சமூக ஜனநாயக கட்சியும் வந்து விட்டது. ஆனால், பெரமுனவில் அது ஒரு வலுவான பங்காளி அல்ல. பெரமுன தரப்பிலுள்ள திஸ்ஸ விதாரண, தினேஷ் குணவர்த்தன தரப்புக்களின் நண்பனாகத்தான் வரதராஜ பெருமாள் அங்கிருக்கிறார். அதாவது கோட்டாபயவின் நண்பர்களின், நண்பராகத்தான் இருக்கிறார். கோட்டாபயவின் நண்பராக அல்ல. ஆனால், அவர் கோட்டாபயவை உத்தரவாதப்படுத்தி, தமிழர்களை வாக்களிக்க கோருகிறார்.

வரதராஜ பெருமாள் பகிரங்கமாக கோட்டாபயவை ஆதரித்த இரண்டு கூட்டங்களிலும், கோட்டா வல்லவர் நம்பி வாக்களியுங்கள் என்றுதான் வரதராஜ பெருமாள் கோரினார். ஆனால், பெரமுனவை ஆதரிக்கும் தமிழ் கட்சிகள் மஹிந்த ராஜபக்சவை சந்தித்தபோது, வரதராஜ பெருமாள் முன்வைத்த ஒரேயொரு கருத்து, “வடக்கிலிருந்து இளைஞர்கள் வெளிநாடு போகிறார்கள். அதை தடுத்து நிறுத்த வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்“ என்பதை. மரணவீடொன்றிற்கு போய் வந்து களைப்பிலிருந்த மஹிந்த, அலட்சியமாக “அது தெற்கிலுமுள்ள பிரச்சனைதான்“ என பதிலளித்தார். இந்த ஒரு உரையாடலை தவிர, மஹிந்த அல்லது கோட்டாபயவுடன் தமிழர் சமூக ஜனநாயக கட்சி மேற்கொள்ளவில்லை. ஆனால், திஸ்ஸ தரப்புடன் தாராளமாக பேசினார்கள். அதாவது, கோட்டாவின் நண்பர்களுடன் பேசினார்கள். அதனடிப்படையில் கோட்டாவின் நண்பர்களின், நண்பர் யாழிலும், வவுனியாவிலும் பகிரங்க கூட்டம் வைத்து, கோட்டாவை ஆதரிக்க கோருகிறார்.

1970களில் தமிழீழ விடுதலை போராட்ட முன்னோடிகளில் ஒருவராக இருந்த வரதராஜ பெருமாள் என்ற போராளி, கால ஓட்டத்தில் சிதைந்து எப்படியொரு சந்தர்ப்பவாதியாக திசைமாறினார் என்பதை புரிந்துகொள்ளும் இடம் இது.

எந்த அரசியல் பலமுமில்லாமல்,முறையான நேரடி பேச்சுக்கள் இல்லாமல், கோட்டாபயவை ஆதரிக்க கோருகிறார் என்றால், அது அவரது தனிப்பட்ட நலனிற்காக செய்யும் அரசியல் என்றுதானே அர்த்தப்படும்.

இந்த இடத்தில் டக்ளஸ் தேவானந்தாவின் அரசியலையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். பெரமுனவின் கூட்டில்தான் டக்ளஸ் தேவானந்தாவும் இருக்கிறார். மஹிந்த அறிவிக்கும் வேட்பாளரை ஆதரிக்கும் முடிவில்தான் அவரும் இருந்தார். ஆனால், வரதராஜ பெருமாளின் நிலைப்பாட்டை போல, டக்ளசின் நிலைப்பாட்டில் சரணடைவு இருக்கவில்லை. தமது கட்சியின் நிலைப்பாட்டை யாழில் அறிவித்தபோது, “தாம் குறிப்பிடும் வேட்பாளருக்கு, தம்மை நம்பி வாக்களியுங்கள். ஏமாற்றிவிட்டார்கள் என அழுது கொண்டு வரமாட்டேன்“ என்றார். அதாவது, வாக்காளர்களிற்கு பொறுப்பு கூறுபவராக அவர் தன்னை மறைமுகமாக அறிவித்தார்.

டக்ளஸ் தேவானந்தாவிடமிருந்த அரசியல் நேர்மை வரதராஜ பெருமாளிடமிருக்கவில்லை.

தம்மை தவிர்ந்த மிகுதி அனைத்து பேரையும்- வானத்திற்கு கீழுள்ள சகலதையும் ஒரு தேவ தூதனை போல விமர்சித்தபடியிருக்கும் வரதராஜ பெருமாளிடமும், அவரது கட்சியிடமும் கேட்பதற்கு சில கேள்வியுண்டு.

அதற்கு முன்னர் ஒரு தகவல். வரதர் அணியின் ஆரம்ப செயற்பாட்டாளரான மலையகத்தை சேர்ந்த ஒருவர், தனது குடும்பம்,சுற்றமெல்லாவற்றையும் துறந்து போராட வந்தார். அவருக்கின்று போக்கிடமில்லை. வரதர் அணி அவரை பராமரிக்கவில்லை. ஆனந்தசங்கரியின் அலுவலகத்தில் கொண்டு சென்று விடப்பட்டார். ஆனந்தசங்கரியின் உணவையே, அவரது பாதுகாப்பு பிரிவினரின் முகாமிலிருந்துதான் எடுக்க வேண்டுமென நகைச்சுவையாக சொல்வார்கள். ஆனந்தசங்கரியின் முகாமில் எங்கே அவருக்கு சாப்பாடு கிடைக்கும்? இப்பொழுது சில வருடங்களாக அவர் யாழிலுள்ள ஈ.பி.டி.பி அலுவலகத்தில் தங்கியுள்ளார்.

வரதராஜ பெருமாள் போன்ற தலைவர்களை நம்பி இயக்கத்தில் இணைந்து இறந்து போனவர்கள் பற்றிய முறையான பதிவுகளாகவது அந்த இயக்கத்திடம் உள்ளதா? அமைப்பிலிருந்தவர்களின் இன்றைய நிலைமை பற்றிய தகவல்களாவது தெரியுமா?

தனது தார்மீக பொறுப்புக்களை கூட சரியாக செய்யாத வரதராஜ பெருமாள் எதற்கு ஊருக்கு உபதேசம் செய்கிறார்?

வரதர் அணிக்கு யாழ் நகரில் ஒரு வர்த்தக நிலையமொன்றுண்டு. அதன் வாடகை பணம் உள்ளூரிலிருந்து செயற்பாட்டாளர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவியது. வரதராஜ பெருமாள் யாழ்ப்பாணம் வந்ததும், உள்ளூர் செயற்பாட்டாளர்களின் வாழ்வாதார பணம் குறைந்து விட்டது.

இது எல்லாம் சாதாரண விடயங்கள். ஆனால் ஒரு விவகாரமாக குறிப்பிடுவதற்கு காரணம்- ஒவ்வொரு மனிதனையும் எடைபோடும் துல்லிய நிகழ்வுகள் இவைதான்.

வரதராஜ பெருமாள் போடும் உபதேச வேடம் அவருக்கு பொருத்தமானதல்ல. தமிழர்களிற்கும், வடக்கு மாகாணசபைக்கும் வழிகாட்டுவதற்கு முன்பாக , அவர் கட்சிக்குள் ஆற்ற வேண்டிய பணிகள் நிறைய உள்ளன. அதையே இவர் செய்ய வேண்டும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here