‘ஜனாதிபதியுடன் பேசி எனக்கு வர வேண்டிய அமைச்சை தடுத்தார்’: நேற்றைய அலரி மாளிகை கூட்ட சுவாரஸ்யங்கள்!

ஐக்கிய தேசியக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை ஆராய நேற்று அலரி மாளிகையில் உயர்மட்ட கலந்துரையாடலொன்று நடைபெற்றிருந்தது. இதன்போது அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஆர்வத்தை ரணில் விக்கிரமசிங்க வெளிப்படுத்தியிருந்தார். இதை நேற்று குறிப்பிட்டிருந்தோம்.

அந்த சந்திப்பில் கபீர் ஹாஷிம் இடைநடுவில் வெளியேறியதாகவும் குறிப்பிட்டிருந்தோம். நேற்று நடந்த மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட எல்லோருமே, கட்சி பிளவடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென்றுதான் வலியுறுத்தியுள்ளனர். அதற்கு சஜித்துடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்த வேண்டுமென ரணிலை வலியுறுத்தியுமுள்ளார்கள். இதனடிப்படையிலேயே, நாளை அலரிமாளிகையில் சஜித்துடன் பேசுவதென ரணில் முடிவு செய்தார்.

ரணல் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் அதே சமயம், சஜித்தை பிரதமராக்கலாமென்ற உத்தரவாதத்தை வழங்கும்படி கூட்டத்திலிருந்தவர்களில் அனேகர் கேட்டுக் கொண்டனர். அதை சஜித்துடன் நாளைதான் ரணில் பேசிக் கொள்வார்.

நேற்று சஜித் ஆதரவு நிலைப்பாட்டில் கபீர் ஹாஷிம்தான் அதிகமாக பேசினார். இதனால்தான் என்னவோ, கபீர் ஹாஷிமின் பழைய விவகாரங்களையெல்லாம் இழுத்து வைத்து லக்ஷ்மன் கிரியெல்ல பேசினார்.

பெற்றோலிய வள அமைச்சை கபீரிடமிருந்து பெற்று கிரியெல்லவிற்கு வழங்கும்படி ரணில் அண்மையில் ஜனாதிபதிக்கு சிபாரிசு செய்திருந்திருந்தார். ஆனால், அது நடக்கவில்லை. கடந்தவாரம் ஜனாதிபதியை சந்தித்த கிரியெல்ல இது பற்றி கேட்க, நடந்த விடயங்களை ஜனாதிபதி சொல்லியிருக்கிறார்.

இதனடிப்படையில் நேற்று கபீரை கடுமையாக சாடினார். “இவர் இன்னொரு குழுவுடன் ஜனாதிபதியுடன் சென்று பேசி, அதை தடுத்து நிறுத்தி விட்டார். கட்சிக்கு ஒரு முகம், ஜனாதிபதியுடன் இன்னொரு முகமாக இருக்கிறார்“ என பொரிந்து தள்ளியிருக்கிறார்.

லக்ஷ்மன் கிரியெல்லவிற்கு ஆதரவாக அகிலவிராஜ் காரியவசம், சரத் பொன்சேகா போன்றவர்களும் பேசினர்.

பல விடயங்களில் கட்சி தலைவருக்கு எதிராக கபீர் ஹாஷிம் செயற்படுவதாக கிரியெல்ல குற்றம்சாட்டினார். அமைச்சராக பதவியேற்க வேண்டாமென ரணில் கூறியபோதிலும், அவர் பதவியேற்றார், ஜனாதிபதியுடன் வெளிப்படையான உறவை வைத்துள்ளார், கோட்டாபாயவுடன் உறவை வைத்து சந்திக்கிறார் என குற்றம்சாட்டினார்.

“கோட்டாபயவுடனான உங்கள் இரகசிய சந்திப்பு தொடர்பாக அமைச்சர் நவின் திசானாயக்கால் நீங்கள் அம்பலப்படுத்தப்பட்டீர்கள். பின்னர், நீங்கள் அதை ஒப்புக்கொண்டீர்கள். அரசாங்கத்தில் உங்களைப் போன்றவர்களுடன் கூட்டுறவு கொள்வதில் நான் வெட்கப்படுகிறேன்”என்று கிரியெல்ல கூறினார். மேலும் கட்சியின் நிலைப்பாட்டைப் பொருட்படுத்தாமல் நாடு முழுவதும் பொது பேரணிகளை நடத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

“கட்சியின் தலைவராக நீங்கள் இவற்றைச் செய்வது வெட்கக்கேடானது. நீங்கள் கட்சியில் இருந்து ராஜினாமா செய்து, நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள் ”என்று கிரியெல்லா கூறினார்.

சஜித்தை வேட்பாளராக்க வேண்டுமென்று கையெழுத்து வாங்குவதன் பின்னணியில் இருப்பவரும் கபீர் ஹாஷிம்தான் என அவர்கள் குற்றம்சாட்டினர். இந்த விவகாரங்கள் முற்றியதையடுத்தே, அவர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here