வடக்கின் சுகாதாரப் பணி உதவியாளர் நியமனக் குளறுபடிகள் ஆதாரங்களுடன் வெளிவந்தன

மு.தமிழ்செல்வன்

நீண்டகாலம் மோதல் நிலவிய பிரதேசங்களில் சுகாதாரத் தொண்டர்களாக பணியாற்றியவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்காக  மேற்கொள்ளப்பட்ட நேர்முகத் தேர்வில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாக நூற்றுக்கணக்கான சுகாதாரத் தொண்டர்கள் நடாத்திய போராட்டம் காரணமாக நேற்றை தினம் (05) இடம்பெறவிருந்த புதிய சுகாதாரப் பணி உதவியாளர்கள் நியமனங்களை வடமாகாண ஆளுனர் தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளார்.

மேலும் ஆளுனர் அலுவலகத்தின் இணையத்தளம் வாயிலாக சகல மாவட்டங்களிலும் நேர்முகத் தேர்வில் வழங்கப்பட்ட புள்ளிகளை வெளியிட்டு அதுதொடர்பிலான ஆட்சேபனைகளை தமக்கு 24 மணிநேரத்தினுள் சமர்ப்பிக்குமாறு அதிரடியாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் கிளிநொச்சி மாவட்ட சுகாதாரத் தொண்டர்களது நேர்முகப் பரீட்சைப் புள்ளிகளுக்கான பட்டியலை ஆராய்ந்தபோது கல்வித் தகமைகளுக்கு வழங்கப்பட்ட புள்ளிகள் காரணமாக பல சுகாதாரத் தொண்டர்கள் பாதிக்கப்பட்டிருப்பது அப்பட்டமாகத் தெரியவந்துள்ளது.

அதாவது கிளிநொச்சி மாவட்டத்தில் மொத்தமாக 736 விண்ணப்பதாரிகள் நேர்முகம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 69 விண்ணப்பதாரிகள் மட்டுமே தொண்டர்களாகச் சேவையாற்றியுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் சுகாதாரப் பணி உதவியாளர் பதவிநிலை வெற்றிடமானது 56ஆகக் காணப்படுவதால் 56விண்ணப்பதாரிகளே இந்த நியமனத்திற்காகத் தேர்வாகி இருந்தனர்.

மேற்படி நியமனத்திற்குத் தெரிவான 56பேரில் சுகாதாரத் தொண்டர்களாகப் பணியாற்றிய சேவைக் காலத்துடன் உள்ளோர் 24பேர் மட்டுமே. மிகுதி 32பேரும் கல்வித் தகமை அடிப்படையிலேயே நியமனத்திற்குத் தேர்வாகி உள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் வடக்கு சுகாதாரத்துறையின் மிக மூத்த அதிகாரிகள் விசனம் வெளியிட்டுள்ளனர். அவர்களது கருத்துகளின் பிரகாரம் கடந்த காலங்களில் சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கான நேர்முகப் பரீட்சைகளில் கல்வித் தகுதியானது ஒரு உள்நுழைவிற்காக விதியாக (Entry criteria) இருந்ததே தவிர அதற்கு எவ்வித புள்ளிகளும் வழங்கப்படவில்லை என்றே தெரிகிறது.

மாறாக குறித்த விண்ணப்பதாரி சுகாதாரத்துறையில் அவரிடம் எதிர்பார்க்கப்படும் கடமைப் பொறுப்புகளை மேற்கொள்ளும் ஆற்றலும் மனப்பாங்கும் துறைசார் அறிவும் உடையவரா என்பதை கண்டறிவதற்கான சிறப்பு அம்சங்களுக்கே புள்ளிகள் வழங்கப்பட்டு வந்துள்ளன.

இதற்கு மிக அண்மைய உதாரணமாக 2014ம் ஆண்டில் வடக்கில் வழங்கப்பட்ட சுகாதாரப் பணி உதவியாளர் நியமனங்களின் போது இடம்பெற்ற நேர்முகப் பரீட்சையில் ‘வதிவிடச் சான்றிதழுக்கு 10புள்ளிகள், வயதிற்கு ஆகக் கூடியது 05 புள்ளிகள், சுகாதாரத்துறையில் பணிபுரிந்த அனுபவத்திற்கு ஆகக் கூடியது 40 புள்ளிகள், பொருத்தமான நடத்தைக்கு ஆகக் கூடியது 10 புள்ளிகள், பொது அறிவிற்கு ஆகக் கூடியது 05 புள்ளிகள், சுகாதாரத்துறை தொடர்பான அறிவிற்கு ஆகக் கூடியது 20 புள்ளிகள், புறச் செயற்பாடுகள் குறித்த ஆவண ஆதாரங்களைச் சமர்ப்பித்தால் ஆகக் கூடியது 05 புள்ளிகள், விசேட திறமைகளுக்கு ஆகக் கூடியது 05 புள்ளிகள்’ எனப் புள்ளிகள் வழங்கப்பட்டிருந்தமையை  அந்த மூத்த உயரதிகாரிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.

ஆனால் தற்போது வெளியாகியுள்ள நேர்முகத் தேர்வுப் பட்டியலின்படி சேவைக்காலத்திற்காக ஆகக்கூடியது 55 புள்ளிகள், கல்விப் பெறுபேறுகளுக்கு ஆகக் கூடியது 40புள்ளிகள், நேர்முகப் புள்ளியாக ஆகக் கூடியது 5 புள்ளிகள் என மூன்றே மூன்று பிரிவுகளின்கீழேயே புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகிறது. அதாவதுசுகாதாரத் தொண்டர்ஒருவரது துறைசார் அறிவு, ஆற்றல் மற்றும் சுகாதாரத் துறைசார் புலமை ஆகியவற்றினை இம்முறை நடாத்தப்பட்டுள்ள நேர்முகத்தேர்வின் அளவுகோல்களால் அளவிடப்பட முடியாது.

உதாரணமாகவைத்தியசாலை ஒன்றில் சுகாதாரத் தொண்டராக இருந்து கடந்த 10 வருடங்களாக கழிவுநீர் சுத்திகரிப்புப் பொறியினை (Swage plant) இயக்கும் ஒருவரது கல்வித்தகமை குறைவாக இருப்பின் அதனால் அவர் தெரிவாகாதுபோக அவரைக் காட்டிலும் கல்வித்தகமை உள்ள ஒருவர் உள்வாங்கப்படும் நிலையே காணப்படுகிறது.

இதுதவிர மேலும் பல ஐயவினாக்கள் இந்த நேர்முகத் தேர்வு குறித்து எழுகின்றன. கிளிநொச்சி மாவட்டத்தின் சுகாதார சேவைப் பணியாளருக்கான ஆளணி வெற்றிடமானது 56ஆகவும், சேவைக் கால அனுபவம் உடைய சுகாதாரத் தொண்டர்களது எண்ணிக்கை 69ஆகவும் இருக்கையில் ஏன் வெளிவாரி அடிப்படையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டன?

தற்போது நியமனத்திற்குத் தெரிவாகியுள்ள சகலரும் ‘ஆகக் குறைந்தது 10வருட சேவை அனுபவத்துடன் உள்ளார்கள்’ என மாகாண சுகாதாரப் பணிப்பாளரும், மாகாண சுகாதாரச் செயலாளரும் உறுதிப்படுத்தி ஒப்பமிட்டதாகக் கூறப்படுவது உண்மையானால் தற்போது தெரிவுசெய்யப்பட்டுள்ள 56 விண்ணப்பதாரிகளில் அனைவரும் 1991ம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்களாக இருக்கவேண்டும். அவ்வாறாயின் மட்டுமே அவர்கள் 2009ம் ஆண்டில் அவர்களது 18வயதில் தொண்டர்களாக சேவையில் இணைந்து 2019ம் ஆண்டில் 10 வருட சேவைக்காலத்தினைப் பூர்த்தி செய்திருப்பர்.

ஆனால் கிளிநொச்சி மாவட்டப் பட்டியலில் நியமனத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட 56 பேரில் 10 பேர் 1991ம் ஆண்டின் பின்னர் பிறந்தவர்கள். ஒருவர் 1996 ஆம் ஆண்டில் பிறந்திருக்கிறார். இவரும் 10வருட சேவைக் காலத்தினைப் பூர்த்தி செய்தவரேயானால் இவர் தனது 13 வது வயதில் சுகாதாரத் திணைக்களத்தில் தொண்டராக இணைந்திருக்க வேண்டும்.  அவ்வாறாயின் வடக்கின் சுகாதாரத் திணைக்களம் சிறுவர் தொழிலாளர்களை சுகாதாரத் தொண்டர்களாக சேவையில் இணைத்திருந்தார்களா?

ஆக மொத்தத்தில் சில மேலதிகாரிகள் வேண்டுமென்றே செய்த குளறுபடிகளால் சுகாதாரத் தொண்டர்களாகப் பணியாற்றி இருக்காத பலர் நியமனத்திற்குத் தெரிவாகி உள்ளது தெள்ளத் தெளிவாகிறது.

இனியாவது வடமாகாண ஆளுனர் அவர்கள் இவ்விடயத்தில் தமது தனிப்பட்ட கவனத்தினைக் குவித்து உரிய நீதியினைப் பெற்றுக் கொடுக்கவேண்டும் என்பதே அனைவரதும் வேண்டுகோளாகும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here