விக்னேஸ்வரன் துரோகி… ஃபுல் ஃபோர்மில் செல்வம்; நெளிந்த மாவை; கண்ணை மட்டும் திறந்த சம்பந்தன்: நேற்றைய ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் நடந்தது இதுதான்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று கொழும்பில் நடைபெற்றது. இங்கு பேசப்பட்ட விடயங்கள் தொடர்பான முழுமையான விபரங்களை தமிழ்பக்கம் பெற்றுள்ளது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், இராகவன், கிழக்கை சேர்ந்த ஹென்ரி மகேந்திரன், ஜனா ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். மாலை 6 மணிக்கு தொடங்கிய கூட்டம் ஒரு மணித்தியாலம் வரை நீடித்தது. கூட்டம் ஆரம்பிக்கும்போதே, அவசர அலுவல் காரணமாக கூட்டத்தின் இடையிலிருந்து தான் வெளியேறிவிடுவேன் என்பதை சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார். அப்படியே 15,20 நிமிடத்தில் வெளியேறி விட்டார்.

இதில் உள்ளூராட்சி தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு பற்றியும், மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் பற்றியும் பேசப்பட்டது.

நேற்றைய கூட்டத்தின் தொடக்கத்தில் பேசிய மாவை சேனாதிராசா, சுமார் 10 நிமிடங்கள் பேசினார். மாவையின் பேச்சு முழுக்க உள்ளூராட்சிசபை தேர்தலில் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட வீழ்ச்சியை பற்றித்தான் இருந்தது. நல்ல பெறுபேறு கிடைக்குமென நாங்கள் நம்பியிருந்தோம், ஆனால் நடந்ததென்னவோ. வேட்பாளர்கள் தெரிவினால்தான் சறுக்கல் ஏற்பட்டதென சமாதானம் சொல்ல முடியாது. ஏனெனில் எல்லா இடங்களிலும் வீழ்ச்சிதான். எங்களிற்குள் இருந்த குத்துவெட்டும், போட்டியும், புரிந்துணர்வற்ற தன்மையும்தான் இதற்கு காரணம். சுன்னாகம் பிரதேசசபை எமது கோட்டை. அங்கேயே வீழ்ச்சிதான். அங்கு எமது ஆட்களே எமக்கு குழிபறித்தார்கள் என்றார்.

அடுதத்து செல்வம் அடைக்கலநாதன் உரையாற்றினார். வழக்கத்தை விட செல்வத்தின் உரையில் கொஞ்சம் சூடும், வேகமும் தெரிந்தது. “தமிழ் தேசிய கூட்டமைப்பின் தோல்விக்கு திட்டமிடாத பிரசார நடவடிக்கையும் ஒரு காரணம். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரசாரங்கள் இம்முறை திட்டமிட்டு, எமது குறைகளை வெளிப்படுத்துவதாகவே அமைந்தது. அரசியலமைப்பு உருவாக்கம் நடக்கவில்லை, தீர்வு முயற்சிகள் பலிக்கவில்லையென்பதை மக்கள் ஏற்றார்கள். த.தே.ம.முன்னணியின் பிரசாரங்களிற்கு பதிலளிப்பதாகவே எமது பிரசாரங்கள் இருந்தனவே தவிர, எமது கொள்கைள்- திட்டங்களை பற்றிய விளக்கத்தை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பிப்பதாக பிரசாரம் இருக்கவில்லை.

அரசியல் தீர்வு வராவிட்டாலும், இங்கு ஜனநாயகசூழல் ஏற்பட்டுள்ளது. மாவீரர்நாள், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பவற்றை சுமுகமாக அனுட்டிக்க முடிகிறது. இது அரசாங்கத்துடன் நாம் நல்லிணக்கத்தை பேணுவதால் ஏற்பட்ட சூழல். மஹிந்த ஆட்சியில் இருந்தால் இப்போது விளக்கு கொளுத்துபவர்களால் அதை செய்ய முடியுமா? இதையெல்லாம் மக்களிடம் சரியாக கொண்டுபோய் சேர்க்கவில்லை“ என்றார்.

பின்னர் உரையாற்றி புளொட் பிரதிநிதி- இந்த தோல்விக்கு தமிழரசுக்கட்சியும் ஒரு காரணம். உள்ளூராட்சி தேர்தல் திடீரென நடக்கவில்லை. நீண்டகாலத்தின் முன்னரே எல்லோருக்கும் தெரியும். ஆனால், நாம் தயாராகவில்லை. கடைசிக்கட்டம் வரை இழுத்து, ஆளாளுக்கு தெரியாமல் இரகசியமாக வேட்பாளர்களை பிடித்ததும், ஒருவரையொருவர் நம்பாமல் செயற்பட்டதும் தான் நடந்தது. கடைசிவரை வேட்பாளர் தெரிவை இழுத்ததால், அதற்காக காத்திருந்த சிலர் வேறு கட்சிகளிற்கும் போனார்கள். கொழும்பில் ஒரு முடிவெடுக்க, மாவட்ட மட்டத்தில் இன்னொரு முடிவெடுத்து சிக்கலை அதிகப்படுத்தியதாக குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தல் தோல்வியை பற்றி பேச்சுக்கள் நடந்தபோது, இரா.சம்பந்தன் எதுவும் பேசாமல், கண்ணை மூடிக்கொண்டு கேட்டுக் கொண்டிருந்தார். இடையிடையே கண்ணை முழித்து பார்த்தார். இதைவிட வேறொன்றும் செய்யவில்லை.

தமிழரசுக்கட்சியின் இளைஞரணி மாநாடு பற்றி செல்வம் அடைக்கலநாதன் கேட்டார். தமிழரசுக்கட்சியின் இளைஞரணி மாநாடா அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பின் இளைஞரணி மாநாடா என கேட்டார்.

“இப்போதைக்கு அது கட்சியின் மாநாடாகத்தான் திட்டமிடுகிறார்கள்“ என கொஞ்சம் சங்கடப்பட்டபடி மாவை பதிலளித்தார்.

என்றாலும், தமிழரசுக்கட்சி தனியாக இளைஞரணி மாநாட்டை நடத்துவது நல்லதல்ல என பங்காளிக்கட்சிகள் வலியுறுத்தின. கூட்டமைப்பாக தேர்தலை மட்டும் சந்திப்பது, மிகுதி வேலைகள் எல்லாவற்றையும் தனியாக செய்வது கூட்டமைப்பின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்பதை சுட்டிக்காட்டினார்கள்.

“இல்லையில்லை… இப்போதைக்கு நாங்கள் அதை செய்கிறோம். நீங்களும் (ரெலோ, புளொட்) கொஞ்ச இளைஞர்களை சேருங்கள். இன்னொரு முறை எல்லோரும் சேர்ந்து செய்வோம்“ என்றார் மாவை.

அடுத்ததாக வடக்கு முதலமைச்சர் விவகாரத்தையும் செல்வம் அடைக்கலநாதனே ஆரம்பித்து வைத்தார். “விக்னேஸ்வரன் செய்தது மிகத் துரோகம். சம்பந்தன் ஐயாவின் பேச்சையே அவர் கேட்கவில்லை. அவரை முதலமைச்சர் வேட்பாளராக்க முடியாது. நீங்கள் (மாவை சேனாதிராசா) தேர்தலில் போட்டியிடவுள்ளதாக பேச்சடிபடுகிறது. இம்முறையும் கடைசிவரையும் இருக்காமல் முன்னரே திட்டமிட வேண்டும்“ என்றார்.

இதை புளொட் பிரதிநிதியும் ஆமோதித்தார். “யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பதில் குழப்பமாக செய்திகள் வந்தபடியிருக்கின்றன. பலரது பெயர்கள் வருகின்றன. நீதிபதி இளஞ்செழியனின் பெயர் கூட வருகிறது. இப்படியான செய்திகளால் மக்கள் ஒருவரை எதிர்பார்த்து விட்டு, அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத ஒருவரை நாம் களமிறக்கினால் சறுக்கல்தான் வரும். யாரென்பதை நேரகாலத்துடன் தீர்மானிக்க வேண்டும். நீங்கள்தான் என்பது முன்னரே தெரிந்தால், அதற்காக வேலை செய்யலாம்“ என்றார். தமிழ் பக்கத்திடம் இது தொடர்பாக தகவல் தந்த எம்.பி, அடுத்த மாகாணசபை தேர்தலில் மாவையை ஆதரிக்கும் தொனிதான் பங்காளிக்கட்சிகளின் பேச்சில் வெளிப்பட்டதாக குறிப்பிட்டிருந்ததையும் குறிப்பிடுகிறோம்.

இந்த சந்தர்ப்பம் மாவையரை கொஞ்சம் சங்கடத்துடன் நெளிய வைத்தது. கதிரையில் இலேசாக நெளிந்தபடி- “ஓமோம்… நான் போட்டியிட போவதாக சொல்லியிருந்தேன். பத்திரிகைக்காரர்கள் என்னைக் கேட்டார்கள். அவர்களிற்கு சொன்னேன்-  தமிழ் தேசிய கூட்டமைப்பு என்னை நில் என கேட்டால் நிற்பேன். போனமுறை விட்ட தவறை இம்முறை விட மாட்டேன் என சொன்னேன்“ என்றார். இதை சொல்லிவிட்டும் நெளிந்து கொண்டிருந்தார்.

இதன்பின்னரும் விக்னேஸ்வரனிற்கு எதிரான கருத்துக்கள் அங்கு பரிமாறப்பட்டது.

இது சும்மா இருந்த மாவையை உசுப்பேற்றி விட்டது. “கடந்தமுறை போட்டியிட நான் தயாராக இருந்தேன். பங்காளிக்கட்சிகளும் என்னை ஆதரித்தீர்கள். இவர்கள்தான் (சம்பந்தன், சுமந்திரன்) கனகஈஸ்வரன் வீட்டில் ஏதோ கூடி கதைத்து விக்னேஸ்வரனை கொண்டு வந்தார்கள். பிரச்சனைப்படுத்தக்கூடாது என்று நான் ஒதுங்கியிருந்தேன். இவர்களால்தான் இந்த பிரச்சனை வந்தது. (சம்பந்தன் பக்கம் திரும்பி அவரை நேரடியாகவே சுட்டிக்காட்டினார்) இம்முறை கடந்தமுறை விட்ட தவறை விட மாட்டேன்“ என்றார்.

இந்த சமயத்தில் பங்காளிகள் முக்கிய விடயமொன்றை சுட்டிக்காட்டினர். விக்னேஸ்வரன் முதலமைச்சராக சமயத்தில் யாழ் நகரில் சரவணபவனிற்கு சொந்தமாக இருந்த விருந்தினர் விடுதியில் நடந்த கூட்டத்தில், அமைச்சர்கள் தெரிவு பேச்சு வந்தபோது, “அதை நாங்கள் பார்த்துக்கொள்வோம். இதில் ஆலோசிக்க சில விசயங்கள் உள்ளன“ என விக்னேஸ்வரனும், சுமந்திரனும் கூறியிருந்தார்கள்.

பின்னர் கொழும்பில் நடந்த கூட்டத்தில், “உங்கள் உறுப்பினர்களின் பயோ டேட்றாக்களை எமக்கு அனுப்பி வையுங்கள்“ என விக்னேஸ்வரன் கூறியிருந்தார். அப்பொழுது சுரேஷ் பிரேமச்சந்திரன் சொல்லியிருந்தார்- பயோ டேற்றா தந்துவிட்டு யாரும் போராட இயக்கங்களில் இணையவில்லையென. இதை சுட்டிக்காட்டி, எங்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு, மாகாணசபையை விக்னேஸ்வரனுடன் சேர்ந்து நிர்வகிக்கத்தான் நீங்கள் விரும்பினீர்கள், ஆனால் விக்னேஸ்வரன் இப்பொழுது உங்களையும் ஒதுக்கியதுதான் பிரச்சனையாகியுள்ளது என குத்திக்காட்டினார்கள். இதன்போது மாவை, சம்பந்தன் மௌனமாகவே உட்கார்ந்திருந்தனர்.

இடையில் மாவை இன்னொன்றையும் குறிப்பிட்டார்- “கொழும்பிலிருந்து கொண்டு வரப்படுபவர்களால்தான் இவ்வளவு பிரச்சனையும்“ என்றார். அது விக்னேஸ்வரனை மட்டும் குறிப்பிடுகிறதா, அல்லது சுமந்திரனையும் சேர்த்து குறிப்பிடுகிறதா என்பது மாவையருக்கும், கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிற்கும்தான் வெளிச்சம்!

தமிழரசுக்கட்சியின் அண்மைய நடவடிக்கைகள் தொடர்பாக சில இடங்களில் சில அதிருப்திகளை வெளிப்படுத்தி வந்த புளொட், நேற்று நல்ல பிள்ளையாக, பெட்டிப்பாம்பாக அடங்கியிருந்தது. ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்

மொத்தத்தில் நேற்றைய கூட்டம் மாவையருக்கு ரூட் கிளியர் பண்ணும் கூட்டமாக அமைந்ததாக, தமிழ் பக்கத்திடம் பேசிய எம்.பி குறிப்பிட்டார்!

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here