வடமாகாண சுகாதார பணி உதவியாளர் நியமனத்தில் பாரிய குளறுபடி: சொந்த மக்களையே வஞ்சிக்கும் அதிகாரிகள்!

நாளையதினம் (05) வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள சுகாதார பணி உதவியாளர் நியமனத்தில் பாரிய குளறுபடிகள் நடந்துள்ளதாக பாதிக்கப்பட்ட சுகாதாரத் தொண்டர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து ஆராய்ந்தபோது அவர்களது குற்றச்சாட்டுகளில் உண்மையிருப்பதாகவே இது தொடர்பில் விடயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

வடக்கில் நீண்டகாலம் நிலவிய யுத்த சூழ்நிலையில் சுகாதாரத்துறையின் இயங்கு விசைகளாக தம்மை ஒறுத்து சம்பளமின்றிப் பணியாற்றிய சுகாதாரத் தொண்டர்களுக்கு படிப்படியாக நிரந்தர வேலை வாய்ப்பினை வழங்கும் நடவடிக்கைகள் 2009 ம் ஆண்டின் பின்னர் மேற்கொள்ளப்பட்டன. இவ்வேலை வாய்ப்பானது சுகாதாரத் தொண்டர்களாகக் கடமையாற்றிய கால மூப்பின் அடிப்படையில் கட்டம் கட்டமாக வழங்கப்பட்டது. இந்த நியமனங்களின் போதும் கிளிநொச்சி மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தகுதியானவர்களைப் பின்தள்ளி சுகாதாரத் தொண்டர்களாக சேவையாற்றி இருக்காத பலர் அரசியல் செல்வாக்கு மூலம் நியமனம் பெற்றதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

2015ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் அரசவேலைக்கான உள்ளீர்ப்புத் திட்டத்தில் சுகாதார பணி உதவியாளர்களாக நியமனம் பெறுவதற்கான அடிப்படைத் தகமை க.பொ.த சாதரண தரமாக உயர்த்தப்பட்டது.

இதனையடுத்து இவ்வாறு புதிய நியமன நடைமுறையால் பாதிக்கப்பட்ட சுகாதாரத் தொண்டர்கள் தொடர்ச்சியாக நடாத்திய போராட்டங்களை அடுத்து அப்போதைய வடமாகாண சுகாதார அமைச்சர், ஆளுனர்கள், மத்திய சுகாதார அமைச்சு ஆகிய தரப்பினர் வடக்கில் நீண்டகாலம் யுத்தகாலங்களில் கடமையாற்றியவர்களுக்கு மனிதாபினமான அடிப்படையில் முன்பிருந்த அரச உள்ளீர்ப்புக் கொள்கையின்படி ஆண்டு எட்டு கல்வித் தரத்தினை அடிப்படையாகக் கொண்டு நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இதன்படி 850 சுகாதாரத் தொண்டர்களது பெயர்ப்பட்டியல் தயாரிக்கப்பட்டு அமைச்சர் வாரியத்தின் அனுமதியும் பெறப்பட்டது. இருப்பினும் வடக்கின் அரச உயரதிகாரிகள் அரசாங்கத்தின் புதிய அரசவேலை உள்ளீர்ப்புத் திட்டத்தின்படியே இந்த ஆட்சேர்ப்பு நடக்கவேண்டும் என்பதில் குறியாக இருந்தனர்.

தற்போது தற்துணிவுடன் மக்கள் நலன்சார்ந்து முடிவெடுப்பதற்கு எந்த ஒரு அரச உயரதிகாரியும் தயாராக இருக்கவில்லை என்பதே இதற்குக் காரணமாகும். இதனால் நியமனத்திற்கான பெயர்ப்பட்டியலானது அதிகாரிகள் மத்தியில் பந்தாடப்பட்டதே தவிர ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்கபட்டவில்லை.

இறுதியில் வடக்கு ஆளுனராக சுரேன் ராகவன் அவர்கள் கடமையேற்றதும் இந்தச் சுகாதாரத் தொண்டர்கள் நியமனத்தினை பழைய அரசவேலைக்கான உள்ளீர்ப்பின்படி மேற்கொள்ளவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு அரச அதிகாரிகைளைப் பணித்தார்.

இருப்பினும் தமது ‘கதிரைகளைக்’ காப்பதில் கண்ணாக உள்ள வடக்கின் உயரதிகாரிகள் குழுமம் கூடிக்கதைத்து ‘விஞ்ஞானபூர்வமாக’ தம்மைத் தற்காக்கும் திட்டத்தினைத் தந்திரமாகத் தீட்டினர். இத்திட்டத்தின் பிரகாரம் ஆண்டு எட்டு அடிப்படைக் கல்வித் தகமை உள்ள சகல சுகாதாரத் தொண்டர்களும் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படுவர். ஆனால் அதற்கு மேற்பட்ட கல்வித் தகமை கொண்டவர்களுக்கு மேலதிக புள்ளிகள் வழங்கப்படும் என முடிவெடுத்தார்கள். அதன்படி இறுதியில் கூடிய கல்வித் தகமை கொண்டவர்களே வெட்டுப்புள்ளிக்கு மேலாக தெரிவுசெய்யப்படுவர்.

இவ்வாறு வடக்கின் அரச உயர் அதிகாரிகள் திட்டம் தீட்டிச் செயற்படும்போது சுகாதரத் தொண்டர்களில் இன்னொரு பிரிவினர் ஆளுனரிடம் பல்வேறு வழிகளில் சென்று ‘ நாமும் வவுனியா இடைத்தங்கல் முகாம்களிலும், மீள்குடியேற்றப் பகுதிகளிலும் சுகாதாரத் தொண்டர்களாகப் பணிபுரிந்தோம். ஆனால் எமது பெயர் தற்போது சுகாதாரத் திணைக்களம் தயாரித்துள்ள பட்டியலில் இல்லை’ என முறையிட்டுள்ளனர். இவர்களில் பலர் அரசியல்வாதிகளது பரிந்துரைக் கடிதங்களையும் வைத்திருந்திருந்தனர்.

பெரும்பாலும் உணர்ச்சி வசப்பட்டே முடிவுகளை எடுப்பவரான தற்போதைய ஆளுனர், உடனடியாகவே ‘அனைத்துச் சுகாதாரத் தொண்டர்களையும் ஒரே பட்டியலில் இணைக்குமாறும் அனைவருக்கும் ஒரே நேர்முகப்பரீட்சையினையே வைக்குமாறும்’ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் என சில திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த உத்தரவினை அடுத்து ஒரு வருடம் வவுனியா இடைத்தங்கல் (மெனிக்பாமில்) சுகாதார தொண்டராக இருந்தவரும், பல வருடங்களாக யுத்தகாலத்தில் சுகாதாரத் தொண்டராகப் பணியாற்றியவரும் ஒரே பெயர்ப்பட்டியலில் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

இவ்வாறு ஒன்றாக்கப்பட்ட பெயர்ப்பட்டியலில், கல்வித் தராதரத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட புள்ளிகளே சுகாதாரத் தொண்டர்களது தலைவிதியினைத் தீர்மானிப்பனவாக அமைந்திருகின்றன. இதுகுறித்து எவரும் கவனத்தில் எடுத்ததாகத் தெரியவில்லை.

உதாரணமாக ஒரு வருட சுகாதாரத் தொண்டர் சேவைக் காலத்துடன் க.பொ.த உயர்தரம் அல்லது சாதாரண தரம் வரை பயின்ற ஒருவர் நியமனத்திற்குத் தெரிவாக, ஆண்டு எட்டு வரையான கல்வித்தரத்துடன் சுமார் 15 வருடங்களாக சுகாதாரத் தொண்டராகப் பணியாற்றிய ஒருவர் நியமனத்திற்குத் தகுதியற்றவராக மாறியுள்ளார்.

அதாவது யாருக்காக இந்த நியமனங்கள் வழங்கப்படவேண்டும் எனப் பலரும் பலகாலமாக முயற்சி செய்தார்களோ அந்த நீண்டகாலச் சுகாதாரத் தொண்டர்கள் நடுத்தெருவில் விடப்பட்டு, அரசியல் பின்புலமும் செல்வாக்கும் உடைய ஓரிரு வருடங்களே சுகாதாரத் தொண்டர்களாகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட கணிசமான தொகையினர் தற்போது சுகாதாரப் பணி உதவியாளர்களாக உள்வாங்கப்படவுள்ளனர்.

இதனால் நீண்டகால அனுபவம் கொண்டுள்ள பலர் வாய்ப்பினைத் தவறவிடடுள்ளதோடு அவர்களில் அனேகர் 40 வயதினை எட்டியுள்ளதனால் இனிவரும் காலங்களில் அரச வேலைவாய்ப்பினைப் பெறும் சந்தர்ப்பங்கள் நிரந்தரமாகவே மறுக்கப்படும் ஆபத்துக்கு ஆளாகியுள்ளனர். அதாவது தமக்கென எவ்வித கொடுப்பனவுகளோ சலுகைகளோ பெறாது யுத்தகாலத்தில் மக்கள் பணியாற்றியவர்கள் பலர் நிர்வாகத் திறமையும் தற்துணிவும் அற்ற வடக்கின் சில உயரதிகாரிகளால் நடுத்தெருவில் விடப்பட்டுள்ளனர்.

அதிகாரங்களுக்காக போராடும் ஒரு இனம் வழங்கப்பட்ட அதிகாரங்களை உரியவர்களுக்கு நீதியை வழங்குவதற்காகப் பயன்படுத்தத் தவறுவதும், அவ்வாறு தவறும்போது அதனை எவருமே தட்டிக்கேளாது அமைதி காப்பதும் எவ்வளவு பெரிய நகை முரண்!

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here