வெற்றிகரமாக நிறைவடைந்தது யாழ் புத்தக கண்காட்சி!

யாழ் புத்தகத்திருவிழா இன்று நிறைவடைந்தது.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மிகப்பெரிய புத்தக கண்காட்சியாக இது கருதப்படுகிறது. கடந்த ஆறு நாட்களாக இடம்பெற்ற இந்த புத்தக கண்காட்சியில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

வட மாகாண ஆளுநரின் ஒழுங்கமைப்பில் இலங்கை புத்தக விற்பனையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் ‘யாழ் புத்தகத் திருவிழா 2019’ கடந்த 27ஆம் திகதி ஆரம்பமானது.

இறுதி நாளான இன்று ஓவியப்போட்டியில் தெரிவுசெய்யப்பட்ட ஐவருக்கும் மற்றும் அதிஸ்டப்பெட்டியில் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்ட 20 வெற்றியாளர்களுக்கும் ஆளுநர் பரிசில்களை வழங்கினார்.

மேலும் அதிகளவிலான மக்கள் ஆர்வத்துடன் இந்த புத்தகத்திருவிழாவில் கலந்துகொண்டமையினால் அடுத்த வருடமும் இந்த புத்தகத்திருவிழாவினை யாழ் மண்ணில் மிகப்பிரமாண்டமாய் நடத்தவுள்ளதாக ஆளுநர் இதன்போது தெரிவித்தார்.

30 தொகுதிகளாக பிரிக்கப்பட்ட புத்தக கண்காட்சி மண்டபத்தின் ஒவ்வொரு பிரிவிலும் பாடசாலை மாணவர்களுக்கான புத்தகங்கள், சிறுவர் கதைகள், வழிகாட்டி நூல்கள், ஈழத்துப்படைப்புக்கள் உள்ளிட்ட உள்ளுர் மற்றும் இந்திய மூத்த எழுத்தாளர்களின் புத்தகங்களும் காட்சிப்படுத்தப்பட்டதுடன் சிறுவர்களுக்கான ஓவியப்போட்டிகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கை, யாழ்ப்பாண, வரலாறு பற்றிய நூல்களும் தாராளமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.

இந்த புத்தக கண்காட்சியில் கலந்து கொண்டிருந்த புத்தக விற்பனையாளர்கள் அனைவரும், தாம் எதிர்பாராத அளவில் புத்தக விற்பனை இடம்பெற்றதாக குறிப்பிட்டனர். நாளாந்தம் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் புத்தக கண்காட்சியில் கலந்து கொண்டிருந்தனர்.

கொடகே உள்ளிட்ட சிங்கள பதிப்பகங்களும் இதில் புத்தக விற்பனையில் ஈடுபட்டன. இராணுவத்தின் பார்வையில் யுத்தத்தை அணுகிய நூல்களும் விற்பனையில் இருந்தன. குடாநாட்டு போர் உள்ளிட்ட நூல்களின் தமிழ் மொழிபெயர்ப்புக்களும் விற்பனையில் இருந்தன. மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன எழுதிய நந்திக்கடலுக்கான பாதை நூலும் விற்பனையானது.

இதுதவிர யுத்தத்தின் அவலங்களை பதிவாக்கிய பிரான்சிஸ் ஹரிசன் எழுதிய சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள், கோல்டன் வைஸ் எழுதிய கூண்டு ஆகிய நூல்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. அந்த புத்தகங்கள் முதல் ஓரிரு நாளிலேயே விற்று தீர்ந்தன.

அது தவிர, முன்னாள் போராளிகளின் படைப்புக்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

புத்தக கண்காட்சியில் உறுத்தலாக இருந்த ஒரேயொரு விடயம்- ஈழத்து பதிப்பகங்களின் வெளியீடுகள் அதிகளவில் காட்சிப்படுத்தப்படவில்லை. பூபாலசிங்கம், குமரன் ஆகிய இரண்டு பதிப்பகங்களின் வெளியீடுகள் மட்டுமே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. ஈழப்போர் குறித்த முக்கிய வரலாற்று பதிவுகளை ஆவணப்படுத்திய வடலி உள்ளிட்ட ஈழத்து பதிப்பங்களின் நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கவில்லை.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here