மனைவியுடன் எப்போது உடலுறவு வைக்கலாம்?: டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள் 12

இயூயின் பிரின்ஸ் (36)
கல்முனை

எனது மனைவி 7 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். கர்ப்பம் தரத்த பின்னர் உடலுறவில் ஈடுபடுவது சிக்கலா?

டாக்டர் ஞானப்பழம்: இந்த சந்தேகம் உங்களிற்கு மட்டுமல்ல, சமூகத்தில் பலரிடம் உள்ளது. இதனுடன் சேர்த்து இன்னொரு சந்தேகமும் உள்ளது.

ஒன்று, கர்ப்பமாக இருக்கும்போது செக்ஸ் வைத்துக்கொள்ளலாமா, கூடாதா? இரண்டாவது, பிரசவத்துக்குப் பிறகு எத்தனை நாள்கள் கழித்து செக்ஸில் ஈடுபடலாம்?

இதற்குப் பெண்ணின் உடல் ஆரோக்கியம் கர்ப்பத்தின்போது எப்படி இருந்தது என்பதைப் பரிசோதித்தால்தான் தெரியவரும். பொதுவாகவே, ஒன்பதாவது மாதம் வரை செக்ஸ் வைத்துக்கொள்ளலாம். ஆணின் உடல் எடை கர்ப்பமான பெண்ணின் வயிற்றை அழுத்தாதபடிக் கவனமாக இருக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் நோய்த்தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால், இருவரும் பிறப்புறுப்புகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். வேகமாகவோ, கடுமையாகவோ உறவில் ஈடுபடக் கூடாது. அதேபோல ஏற்கெனவே குறைமாதத்தில் குழந்தை பிரசவித்திருக்கும் பெண்கள் மீண்டும் கருவுற்றால், கர்ப்பப்பை வாய் (Cervix Dilated) கிழிந்திருந்தால், சில பெண்களுக்குக் கர்ப்ப காலத்திலும் பிறப்புறுப்பில் ரத்தக்கசிவு ஏற்படும். அவர்கள் வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் இருந்தால், கர்ப்பப்பையில் குழந்தைக்கு ஊட்டச்சத்துகள் கொடுக்கும் நஞ்சுக்கொடி (Plecenta), கர்ப்பப்பையின் வாய் பகுதியில் அமைந்திருந்தால் (Placenta Previa) உறவுகொள்ளக் கூடாது. இதையெல்லாம் மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.

சுகப்பிரசவமாக இருந்தால் மூன்று வாரங்கள் கழித்து உறவுகொள்ளலாம். அதுவும் பெண்ணின் உடல்நிலையைப் பொறுத்தது. பிரசவத்தின்போது பிறப்புறுப்புக்கும் ஆசனவாய்க்கும் நடுவில் இருக்கும் பகுதி கிழிந்து (Episiotomy), தைக்கப்பட்டிருந்தால், அது முழுமையாகக் குணமாகும்வரை உறவில் ஈடுபடக் கூடாது. சிசேரியன் பிரசவமாக இருந்தால், குழந்தை பிறந்து 6 வாரங்கள் கழித்தே உறவுகொள்ள வேண்டும். மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டுக்கொள்வது நல்லது.

குழந்தை பிறந்த பிறகு, சில பெண்களுக்கு உடலுறவின்போது பிறப்புறுப்பில் சுரக்கும் திரவம் நின்றுவிடும். இதன் காரணமாக, செக்ஸில் ஈடுபடும்போது எரிச்சல், வலி ஏற்படும். இதைத் தவிர்க்க, மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்தகங்களில் விற்கப்படும் எண்ணெய் போன்ற ஜெல்களைப் பயன்படுத்துவது நல்லது. கர்ப்பமாக இருப்பது செக்ஸ் வாழ்க்கைக்கு முட்டுக்கட்டை அல்ல.

எம்.வரதகுமார் (61)
வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு

நான் தனியார் துறையில் பணியாற்றி வருகிறேன். எனது மனைவிக்கு 54 வயது. அவருக்கு உடலுறவில் நாட்டமில்லை. எவ்வளவுதான் சொல்லி அழைத்தாலும் அவர் மறுத்து விடுகிறார். உடலுறவில் அதிக ஆர்வம் காட்டும் என்னை மருத்துவரிடம் காண்பிக்க வேண்டுமென்றும் சொல்கிறார். இந்த வயதில் உடலுறவில் ஆர்வம் காட்டுவது கேடானதா?

டாக்டர் ஞானப்பழம்: உங்கள் நீண்ட கடிதத்தில் பல விடயங்களை சொல்லியுள்ளீர்கள். உண்மையில், நீங்கள் இதையிட்டு கவலைப்பட வேண்டியதில்லை. சந்தோசப்படலாம். உங்கள் மனைவியைத்தான் நல்ல உளவியல் ஆலோசகரிடம் காண்பிக்க வேண்டும்.

தாம்பத்யத்துக்கு வயது ஒரு தடை இல்லை. 20 வயதில் நன்றாக சாப்பிட்ட ஒருவரால், 60, 70 வயதுகளில் அதே அளவு சாப்பிட முடியாதுதான். ஆனால், சாப்பிடாமலேயே இருக்க மாட்டார் அல்லவா… அதைப்போலத்தான் தாம்பத்ய உணர்வும்; மனமிருந்தால் போதும். “தாம்பத்ய சுகத்தை அனுபவிக்க, நீங்கள் வயதளவில் மட்டும் இளைஞராக இருக்கத் தேவையில்லை“என்பதை மையமாகவைத்து பிரபல எழுத்தாளர் ஈ.எல்.ஜேம்ஸ் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். “பிஃப்டி ஷேட்ஸ்“ஆஃப் கிரே’ (Fifty Shades of Grey) என்ற அந்தப் புத்தகம், இளைஞர்களுக்கு மட்டுமன்றி, அனைத்துத் தரப்பையும் சேர்ந்த பலரின் அந்தரங்க வாழ்க்கையை சுவாரஸ்யமாக்கியது.

உடலுறவு உயிரோட்டமானது. உடலுக்கும் மனதுக்கும் மிகவும் நல்லது. 20 வயதுகளில் இருந்த உடலமைப்பும் ஆர்வமும் இல்லாமல் போனாலும், வயதும் அனுபவமும் வலிமையையும் தைரியத்தையும் கூட்டியிருக்கும். இள வயதுக் கற்பனைகளோ, எதிர்பார்ப்புகளோ இல்லாமல் அல்லது குறைந்து போயிருந்தாலும், நமக்கு என்ன பிடிக்கும் என்பதில் தெளிவு ஏற்பட்டிருக்கும். வயதாகும்போது, உடலுறவு குறித்த கற்பனைகளில் மாற்றம் அவசியம். கொஞ்சம் கற்பனைத்திறனும் கலந்துரையாடலும் வாழ்க்கையை மேலும் மகிழ்ச்சியாக்கும்; சுவாரஸ்யம் கூட்டும்.

தாம்பத்யம் சுவாரஸ்யமாக அமைய சில யோசனைகள்

பளிச்சென இருக்கும் விளக்குகளைவிட, குறைவான ஒளிகொண்ட விளக்குகள் செக்ஸ் கிளர்ச்சியை உண்டாக்கக்கூடியவை. அதிலும், மெழுகுவத்திகள் ரொமான்டிக் உணர்வைக் கொடுப்பவை. அதிக வெளிச்சத்தில் சாதாரணமாகத் தெரியும் அழகு, மெழுகுவத்தி வெளிச்சத்தில் அதீத அழகாகத் தெரியும்.

மெனோபாஸ் நேரத்தில், பெண்களுக்கு உடலுறவில் ஈடுபடுவது கடினமாக இருக்கும். அந்த நேரத்தில் மட்டும் ஏதேனும் உயவு சாதனங்களைப் பயன்படுத்தலாம். தவிர்க்க முடியாதபட்சத்தில், ஹார்மோன் தெரபி எடுத்துக்கொள்ளலாம்.

நாம் நாமாக இருப்பதுதான் இருப்பதிலேயே செக்ஸியான விஷயம். எனவே, உறவின்போது நமக்கு நம்மிடம் என்ன பிடிக்குமோ அதைச் செய்ய வேண்டும். பிடித்ததுபோல, தலைமுடியை அலங்கரித்துக்கொள்ளலாம். வாசனைத் திரவியம் பயன்படுத்தலாம். புதிய, அழகிய உள்ளாடைகள் அணிவதுகூட சந்தோஷச் சாரலை அதிகரிக்கும்.

வயதாகும்போது எழுச்சியோடு செயல்பட முடியாத ஆண்கள், மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம்.

தாம்பத்யத்துக்கு முன்னரும் பின்னரும் உறவு குறித்தும், செயல்பாடுகள் குறித்தும் பேசுவது, அந்தச் சுகத்தை இன்னும் நீட்டிக்கும். ஏதாவது நெருடலான விஷயம் இருந்தாலோ, பிடிக்காமலிருந்தாலோ அதைப் பற்றிப் பேசுவது அந்தச் சிக்கலைத் தவிர்க்க உதவும்.

தாம்பத்யத்தின்போது, கவலை இல்லாமலும், மனம் இலகுவாகவும் இருக்க வேண்டும். நெருடல்கள் இருந்தால், அவற்றைச் சரிசெய்ய வெளியிடங்களுக்குச் செல்லுதல், ஹோட்டலில் பிடித்த உணவுகளைச் சாப்பிடுதல், இசை கேட்டல், சினிமா பார்த்தல் என நம் மனநிலையை மாற்றும் எதையாவது செய்யலாம்.

உடலுறவு நேரம் தவிர மற்ற நேரங்களிலும் இணையுடன் இணக்கமாக இருக்க வேண்டியது அவசியம். தொட்டுப் பேசுதல், அவ்வப்போது சில்மிஷங்கள் செய்தல் நல்ல பலன் தரும். ஒன்றாகக் குளிக்கலாம்; மசாஜ் செய்துவிடலாம்; கைகளைப் பிடித்துக்கொண்டு பேசலாம்; நெட்டி முறித்துவிடலாம். உங்கள் இணையின் உடலைத் தொட்டபடி இருக்கும் எந்தச் செயலையும் நீங்கள் செய்வது நல்ல பலன் தரும்.

ஐம்பது வயதை எட்டியவர்களுக்கு, இளமையில் இருந்ததைப்போல உடல் ஒத்துழைக்காது. எனவே, `செக்ஸ் முன் விளையாட்டுகள்’ எனப்படும் ஃபோர்பிளே மிக அவசியம். இதனால், உறவின்போது இணையின் உடல் இலகுவாகி, நல்ல பொசிஷன் கிடைக்கும்.

ஓய்வு பெற்ற பிறகு, பகல் வேளையில் ஒன்றுமே செய்யாமல் இருக்கும் மனோபாவம் பலரிடம் இருக்கிறது. தாம்பத்யத்துக்கு ஏற்ற நேரம் இரவு மட்டுமல்ல. பகலில் உறவுகொள்வது புது சுகத்தையும் புரிந்துணர்வையும் தரும். ஒரு நாளின் வெவ்வேறு நேரங்களில் உறவில் ஈடுபடுவது, சுவாரஸ்யத்தைக் கூட்டும்.

வாழ்க்கையில் அடுத்தகட்டத்தைப் பற்றியோ, எதிர்காலத்தைப் பற்றியோ பெரிய கவலை இல்லாமல் இருக்கும்போதுதான், பலரும் நெருக்கத்தையும், உடலுறவில் அதிகமான இன்பத்தையும் பெறுகிறார்கள். அதாவது, கமிட்மென்ட்கள் இல்லாத அந்தக் காலகட்டம் தாம்பத்யத்தில் ஈடுபடுவதற்குப் பொன்னான நேரம். தற்போது 30, 40 ப்ளஸ் வயதுகளில் இருப்பவர்களும் கவனத்தில்கொள்ள வேண்டிய விஷயங்கள் இவை. `நமக்கென்ன… நன்றாகத்தானே இருக்கிறோம்?’ என்ற அலட்சியம் கூடாது. நாளை நமக்கும் ஐம்பதும் வரும்… ஆசையும் வரும்.

முந்தைய பாகங்களை படிக்க

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here