மனித எச்சத்தை புதைக்க இடத் தேர்வு நடந்தது இப்படித்தான்!

©தமிழ்பக்கம்

உயிர்த்த ஞாயிறு தினத்தில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய முகமது நாசர் முகமது ஆசாத் என்ற மனித வெடிகுண்டின் தலை உள்ளிட்ட உடல்பாகங்கள் மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் 26ம் திகதி மாலை இரகசியமாக புதைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு கள்வியங்காடு இந்து பொது மயானத்தில் சீயோன் தேவாலய மனித வெடிகுண்டின் எச்சத்தை புதைக்க யார் அனுமதித்தார்கள்?

இந்த கேள்விதான் சமூக ஊடகங்களில் இன்றைய பேசு பொருள். மாநகரசபை எல்லைக்குட்பட்ட மயானத்தில் மாநகரசபை அனுமதியில்லாமல் புதைக்கப்பட வாய்ப்பிருக்குமா என ஒருசாரர் கேள்வியெழுப்பி, மாநகர முதல்வரை நோக்கி சந்தேகப்பார்வை பார்க்க… மாவட்ட அரசாங்க அதிபர்தான் இதில் முடிவெடுத்தார் என இன்னொரு சாரர், அரச அதிபரை குற்றம்சாட்ட…

அவர்கள் இருவருமே அந்த குற்றச்சாட்டுக்களை மறுத்தார்கள்.

நேற்று முன்தினம் இந்த விவகாரம் கொந்தளிப்பாகி, இளைஞர்கள் நகரில் போராட்டத்தில் இறங்க, மாநகரசபை ஆணையாளர் அவசரமாக பத்திரிகையாளர் சந்திப்பொன்றை நடத்தினார். இந்த விவகாரத்தில் மாநகரசபைக்கு எந்த தொடர்பும் இல்லையென்றார்.

மாநகரசபை எல்லைக்குள் உள்ள கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்க அனுமதிக்குமாறு மாவட்ட செயலாளரிடமிருந்து வந்த கடிதத்துடன், அதற்கான நீதிமன்ற உத்தரவு இல்லாததால், அந்த கோரிக்கையை நிராகரித்ததாக குறிப்பிட்டார். பின்னர், எச்சம் புதைக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியான பின்னரே, அதை தாம் அறிந்ததாக குறிப்பிட்டார்.

ஆனால், மாவட்ட அரசாங்க அதிபர் அதை மறுத்தார். அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் முறைப்படியான அனுமதி பெறப்பட்டதாக குறிப்பிட்டார்.

இதில் யார் சொல்வது உண்மை?… உண்மையில் என்ன நடந்தது?

இந்த மில்லியன் டொலர் பெறுமதியான கேள்விகளுடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் மூத்த நிர்வாகசேவை அதிகாரிகள் பலருடன் தமிழ்பக்கம் பேசியது. எல்லா அதிகாரிகளின் சுட்டு விரல்களும் அரசாங்க அதிபரை நோக்கி திரும்பியது. தவிரவும், மனித எச்சத்தை புதைக்கும் முடிவு எப்படி எடுக்கப்பட்டது என்ற தகவலையும் தந்தார்கள்.

அந்த தகவல்களை குறிப்பிடுவதற்கு முன்னதாக, இன்னொரு விடயத்தை கவனிக்கலாம்.

தற்கொலைதாரியின் மனித எச்சங்களை புதைக்க, மன்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிராமசேவகரிற்கு உரிய அனுமதியை வழங்குமாறு மட்டக்களப்பு மாநகரசபைக்கு, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தரின் கையொப்பத்துடன் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டது. 26ம் திகதியிடப்பட்ட கடிதம். அந்த கடிதம் மாநகரசபையின் பார்வைக்கு 27ம் திகதி கிடைத்ததாக, மாநகரசபை இறப்பர் முத்திரை பதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மனித வெடிகுண்டின் எச்சம், கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்டது 26ம் திகதி மாலையில்!

உத்தியோகபூர்வ பதிவுகளின்படி கவனித்தால், மனித எச்சத்தை புதைப்பதற்கான அனுமதியை மட்டக்களப்பு மாநகரசபை வழங்குவதற்கு முன்னரே- அந்த தகவல் அவர்களிற்கு கிடைப்பதற்கு முன்னரே- அங்கு எச்சம் புதைக்கப்பட்டு விட்டது!

இந்த விடயத்தை கவனித்தால்- மாநகரசபையின் கவனத்தை இந்த விடயத்தில் ஈர்த்து சர்ச்சையை தோற்றுவிக்காமல், மாவட்ட நிர்வாகமே காதும் காதும் வைத்ததைபோல விடயத்தை முடிக்க முயன்றது தெரிய வருகிறதல்லவா!

இந்த புள்ளியிலிருந்து மாவட்ட நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளுடன் பேசினோம்.

கள்ளியங்காடு இந்து மயானத்தில் எச்சத்தை புதைப்பதென முன்னரே தீர்மானிக்கப்பட்டு விட்ட நிலையில், சம்பிரதாயமாக மண்முனை பிரதேச செயலாளரிற்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டதாக ஒரு அதிகாரி குறிப்பிட்டார்.

மண்முனை பிரதேசசெயலாளராக பதவிவகித்த தயாபாரன் அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். மாவட்ட எம்.பி சிறிநேசன் மற்றும் மாவட்ட நிர்வாகம் இந்த இடமாற்றத்தின் பின்னணியில் இருந்ததாக அப்போது பேச்சடிபட்டது. புதிதாக நியமனமான வாசுதேவன், மாவட்ட செயலாளரிற்கு அதிகமாகவே ஒத்துழைப்பு கொடுப்பதாகவும், இதனாலேயே அவரது பிரதேசத்திலுள்ள மயானம் தெரிவாகியதாகவும் மாவட்ட நிர்வாகத்தில் ஒரு பேச்சுண்டு.

நிர்வாகரீதியான சம்பிரதாயங்களிற்காகவே, மாவட்ட நிர்வாகத்தினால் மண்முனை பிரதேச செயலாளரிற்கு கடிதமொன்று அனுப்பப்பட்டது. ஆனால், எச்சத்தை புதைக்கும் இடம் குறித்து வாய்மூலம் குறிப்பிடப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் குறிப்பிடப்படுகிறது.

இதன்பின்னர், கள்ளியங்காடு இந்து பொதுமயானத்தில் எச்சத்தை புதைக்க அனுமதிக்குமாறு மண்முனை பிரதேசசெயலாளர் எழுத்துமூலமாக அந்த பகுதி பெண் கிராமசேவகரிற்கு எழுத்துமூலம் அறிவித்தல் வழங்கியிருக்கிறார் என்பதையும் தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது.

இந்த விவகாரம் சர்ச்சையாகியதையடுத்து, அந்த கடித மூல அறிவித்தல் பற்றி வாய் திறக்க வேண்டாமென குறிப்பிட்ட கிராமசேவையாளரிற்கு ‘மேலிடத்தில்’ இருந்து அழுத்தம் கொடுப்பதாகவும் தெரிகிறது.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here