அம்பலமானது வவுனியா விவசாய பண்ணை ஊழல்கள்: குட்டி ஈனாத பன்றி பால் கொடுத்த அதிசயம்!

வடமாகாண விவசாய அமைச்சின் கீழ் செயற்படும் வவுனியா பண்ணையில் பெரும் ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளது கையும்மெய்யுமாக அகப்பட்டுள்ளது. இந்த பண்ணையில் ஊழல் முறைகேடுகள் நடந்து வருகிறது, வவுனியா பிரதி விவசாய பணிப்பாளர் இடமாற்றத்திற்கான எதிர்ப்பும் இந்த பின்னணியில்தான் என்பதை தமிழ்பக்கம் ஏற்கனவே குறிப்பிட்டு வந்தது. ஊழல் தொடர்பான ஆவணங்களை தமிழ்பக்கம் பெற்றிருந்தது என்பதையும் குறிப்பிட்டிருந்தோம்.

இதையடுத்து கடந்த சில தினங்களாக வவுனியா பண்ணையில் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை, கணக்காய்வில் பெரும் ஊழல் மோசடி வெளிப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பொறுப்பான அதிகாரிகள் பலர் சிக்கியுள்ளதுடன், விவசாய அமைச்சின் உயரதிகாரிகள் சிலரிற்கும் இதில் தொடர்பிருக்கலாமென்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வவுனியா விவசாய பண்ணையில் நடத்தப்படும் சோதனையில் பண்ணை முகாமையாளர் பெருமளவு ஊழல் மோசடியில் ஈடுபட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

பண்ணையின் உற்பத்திகள், வளங்கள், நிதி ஒதுக்கீடுகளில் அளவுகணக்கின்றி மோசடி செய்யப்பட்டுள்ளது. அவை பற்றிய விலாவாரியான தகவல்களை விரைவில் தமிழ் பக்கம் வெளியிடும்.

சோதனை நடத்தப்பட்டபோது, மாட்டு தீவனத்தில் இருப்பு காட்டப்பட்ட தொகையை விட பல மடங்கு நிறையுடைய தீவனம் இருப்பில் இருந்துள்ளது. இதன்மூலம் மாட்டுக்கு தீவனம் சரியாக வழங்கப்படாமல் மிகுதி தீவனங்கள் பணமாக்கப்பட்டுள்ளதாக கருத முடிகிறது.

நெல் அறுவடையில் மோசடி நடப்பதாக பண்ணை மீது நீண்டகாலமாக குற்றம் சுமத்தப்பட்டு வந்தது. பண்ணைக்குரிய நெல் காணிகளில் காட்டப்படும் விளைச்சலை விட, அதற்கு பக்கத்தில் உள்ள தனியார் காணிகளில் அதிகளவான விளைச்சல் உள்ளது. மிகக்குறைவான விளைச்சலை பண்ணையில் காண்பிக்கிறார்கள் என்றால் ஏதோ சிக்கலுள்ளதென்பதை அதிகாரிகள் புரிந்துகொண்டிருக்க வேண்டும். ஆனால் மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளராக இருந்த ரி.யோகேஸ்வரன் அதை கவனிக்கவில்லை. அவரது அலுவலகமும் அதே பண்ணைக்குள்தான் இயங்கியது.

இந்த நெல் அறுவடை மோசடியும் சோதனையில் உறுதியாகியுள்ளது. இருப்பில் காட்டப்பட்ட நெல் சில நூற்றுக்கணக்கான கிலோ அளவாகும். சோதனையில் சிக்கிய நெல்லின் அளவு பல ஆயிரக்கணக்கான கிலோ நிறையுடையது.

வவுனியாவில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் பொருள் கொள்வனவு செய்து விட்டு, அந்த ஒரு பற்றுச்சீட்டை வைத்து பல வவுச்சர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

பண்ணையின் உற்பத்திகள் எப்படி பணமாக்கப்பட்டுள்ளன, அதிகாரிகளிற்கு எப்படி அந்த பணம் சென்று சேர்ந்தது என்பது தொடர்பாக அலுவலர்கள் தொடர்ந்தும் வாக்குமூலம் வழங்கி வருகிறார்கள்.

பண்ணையில் வளர்க்கப்பட்ட பன்றிகள் முறையற்ற விதத்தில் பணமாக்கப்பட்டுள்ளன.

பண்ணையில் இருந்த பன்றியொன்று இறந்ததாக கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. அந்த பன்றி தொடர்பான பதிவுகளில் அது குட்டி ஈனாததாகவே காண்பிக்கப்பட்டுள்ளது. அதன் மரணத்திற்கு காரணமாக பால் முலை அலர்ச்சியென மருத்துவ சான்றிதழ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழை வழங்கியவர் மிருக வைத்தியரான திருமதி சத்தியலிங்கம். வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும், வவுனியா தமிழரசுக்கட்சி பிரமுகருமான ப.சத்தியலிங்கத்தின் மனைவி.

குட்டி ஈனாத பன்றி பால்முலை அலர்ச்சிக்கு உள்ளாகாது. அப்படியானால் அந்த மருத்துவ சான்றிதழ்?

ஒன்றில் மருத்துவ சான்றிதழ் பொய்யாக இருக்க வேண்டும். அல்லது, பன்றி குட்டி ஈனவில்லையென பேணப்பட்ட பதிவு பொய்யாக இருக்க வேண்டும். பொய்யான பதிவை பேணி, குட்டியை விற்றிருக்கலாம். இதற்கான வாய்ப்பே அதிகமாக உள்ளது.

முறையான விசாரணைக்குழு ஒன்றின் மூலம் நடத்தப்படும் விசாரணைகளிலேயே இவை வெளிப்படும்.

வவுனியா பண்ணையில் பெரும் சீரழிவு நடப்பதாகவும், உயரதிகாரிகளின் ஆசிர்வாதமும் இதற்கு உள்ளதாகவும் பல விமர்சனங்கள் இருந்து வந்தன. இந்த நிலையிலேயே வவுனியா பிரதி விவசாய பணிப்பாளரை இடமாற்றம் செய்யும் முடிவை முதலமைச்சர் மேற்கொண்டிருந்தார்.

அந்த முடிவை மாற்றும்படியும், ரி.யோகேஸ்வரனின் சேவை வவுனியாவிற்கு தேவையென வவுனியாவை சேர்ந்த மாகாணசபை உறுப்பினர்கள் ப.சத்தியலிங்கம், ஜி.ரி.லிங்கநாதன், இ.இந்திரராசா, ம.தியாகராசா ஆகியோர் முதலமைச்சரிற்கு கடிதம் அனுப்பினார்கள். பின்னர், இ.இந்திரராசா, ம.தியாகராசா ஆகியோர் அதிலிருந்து விலகினார்கள்.

பின்னர் வவுனியா விவசாய திணைக்கள வளாகத்திற்குள்ளேயே இயங்கிய அமுதம் என்ற நிறுவனத்தின் தலைவரான நேசராசா என்பவர் தான் அங்கம் வகிக்கும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பெயரையும் பாவித்து, ரி.யோகேஸ்வரனின் இடமாற்றத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தார். சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு என்ற அமைப்பும் அவரது இடமாற்றத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தது.

அந்த சமயத்திலேயே தமிழ்பக்கம் இலங்கை ஆசிரியர் சங்கத்திடம் ஒரு கேள்வியை முன்வைத்திருந்தது. வவுனியா பண்ணை ஊழல்களை வெளியிட்டால், இலங்கை ஆசிரியர் சங்கத்தை கலைத்து விட தயாராக இருக்கிறீர்களா என. நாம் ஆவணங்களை வெளியிட முன்னரே, விவசாய அமைச்சின் அதிகாரிகளே அந்த ஊழல்களை அம்பலப்படுத்தியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here