நாளாந்தம் இருபதாயிரம் லீற்றர் நீரை உறிஞ்சி விற்கும் திட்டம்: புல்லுமலை பற்றிய முழுமையான ரிப்போர்ட்!

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பெரிய புல்லுமலை பிரதேசத்தில் நாள் ஒன்றுக்கு இருபது ஆயிரம் லீற்றர் குடி நீரை போத்தலில் அடைத்து விற்பனை செய்யும் தொழிற்சாலை அமைக்கும் பணியை நிறுத்தக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் நேற்று முன்தினம் (03) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த தொழிற்சாலை மூலம் அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு நீர் பற்றாக்குறை ஏற்படும் என்றும், ஏற்கனவே குறித்த பகுதியில் உள்ள மக்கள் குடிக்க நீர் இன்றி கஷ்டப்படும் நிலையில் எங்களது நீரை உறிஞ்சி விற்பதற்காக அமைக்கப்படும் இந்த தொழிற்சாலைக்கு அனுமதி வழங்க முடியாது என கோரியே அப்பகுதியில் உள்ள விவசாய அமைப்புகள், மீனவர் சங்கங்கள், கிராம அபிவிருத்தி சங்கம், பொதுமக்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த தொழிற்சாலை தொடர்பாக எமது புலனாய்வு செய்தியாளர் தரும் தொகுப்பு

ஆர்ப்பாட்டக்காரர்களின் கருத்துக்கள்!

இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெரிய புல்லுமலை மக்கள் அங்கு அமைக்கப்படும் தொழிற்சாலை குறித்தும் அது அமைந்துள்ள காணி குறித்தும் பல்வேறு கருத்துகளை தெரிவித்திருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான பல பதாகைகளை ஏந்தி இருந்தனர்.

‘தண்ணீர் பஞ்சமுள்ள இடத்தில் நீரை உரிஞ்சாதே’ ‘நிறுத்து நிறுத்து வரண்ட பூமியாக்கும் செயற்பாட்டை உடன் நிறுத்து’ ‘அழிக்காதே அழிக்காதே இயற்கை விவசாயத்தை அழிக்காதே’ ‘அபிவிருத்தி என்ற போர்வையி வளத்தை சூரையாடாதே ‘ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி இருந்தனர்.

தொழிற்சாலையை மக்கள் ஏன் எதிர்க்கிறார்கள்?

பெரிய புல்லுமலை கிராமசேவையாளர் பிரிவில் உள்ள கும்புறுவெளி என்ற இடத்தில் அமைக்கப்படும் குறித்த தொழிற்சாலை தங்களது வாழ்வாதாரத்திற்கு சவாலாக அமையும் என்பதுடன் எதிர்காலத்தில் புல்லுமலை கிராமம் பாலைவனமாக மாறும் என்று அச்சம் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே குடிநீர் பஞ்சம் உள்ள புல்லுமலையில் குறித்த இடத்தில் மாத்திரமே நீர் உள்ளதாகவும் அந்த இடத்தில் இருந்து நீர் உறிஞ்சும் இயந்திரம் மூலம் நீரை உறிஞ்சி எடுப்பதன் ஊடாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்து அருகில் உள்ள குளம், கிணறுகள் வற்றி எதிர்காலத்தில் வறட்சி ஏற்படும் என அச்சம் வெளியிட்டுள்ளனர்.

முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பி வாழும் இடமாக இது உள்ளதால் அங்குள்ள நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டால் விவசாயம் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

அத்துடன் தொழிற்சாலை கழிவுகள் அங்கு பாவிக்கப்படும் இரசாயண பதார்த்தங்களின் ஊடாக அந்த பகுதியில் உள்ள மீன் இனங்கள் அழிந்து போகவும், கால்நடைகள் பாதிப்புக்குள்ளாகவும் வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.

அத்துடன் குறித்த தொழிற்சாலை அமைக்கும் காணி காத்தான்குடி இராஜாங்க அமைச்சர் ஒருவரினால் திட்டமிட்டு பிடிக்கப்பட்டு அதில் உள்ள 100 ஏக்கரிற்கு மேற்பட்ட காணிகளை பிடித்து வைத்துள்ளதாகவும் அதற்குள் நூற்றுக்கணக்கான எருமை மாடுகள் , ஆடுகள் மேற்க்கப்படுவதாகவும் விவசாய நடவடிக்கைகளின் போது குறித்த கால்நடைகள் தங்களது பயிர்களை சாப்பிடுவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.

இதை விட குறித்த காணியில் விலையுயர்ந்த பல மரங்கள் காடுகளாக உள்ளதாகவும் அவை வெட்டப்பட்டு இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் உள்ள ஆற்றில் இருந்து சட்டவிரோதமான மண் அகல்வில் அங்குள்ளவர்கள் ஈடுபடுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

காணிக்கு உரிமை கொண்டாடிய நபர்!

ஆர்ப்பாட்டம் நடைபெறும் போது திடீரென வந்த வயோதிபர் ஒருவர் குறித்த காணியில் உள்ள 85 ஏக்கர் காணி தன்னுடையது என்றும் அதை கேட்டால் தர மறுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து காணி உறுதியுடன் வந்து நின்றார் அவர் கொண்டு வந்த உறுதி 1985 ஆண்டு பதிவு செய்யப்பட்ட உண்மையான உறுதி அவர் வழக்கு தொடர்ந்தால் தீர்ப்பு அவருக்கு சார்பாக வரும் என அவ்விடத்தில் அதிகாரிகள் கூறியபோது. இதன் பின்னால் அமைச்சர் ஒருவர் இருப்பதால் தனக்கு பயமாக இருக்கு என்று கூறினார்.

சம்பவ இடத்திற்கு வந்த பிரதேச செயலாளர்!

சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த செங்கலடி பிரதேச செயலாளர் ந.வில்வரெட்ணம் அவர்கள் மக்களின் கருத்துக்களை கேட்டறிந்ததன் பின்னர் பின்வருமாறு தெரிவித்தார்- குறித்த காணி தனியார் காணியா அரச காணியா என நிலஅளவை திணைக்கள அதிகாரிகளை கொண்டு அறிய வேண்டும். ஏனைய தொழிற்சாலை கட்டடத்திற்கான அனுமதி மற்றும் மரம் வெட்டுவது, மண் ஏற்றுவது, சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து அந்தந்த திணைக்களங்களின் ஊடாக அறியப்படவேண்டும். என்னதான் தனியார் காணியில் தொழிற்சாலை அமைத்தாலும் அதுகுறித்து அந்த பகுதி மக்களின் அனுமதி பெறப்பட வேண்டுமெனவும் குறித்த தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக தங்களுக்கு தெரியாது எனவும் இது குறித்து அரசாங்க அதிபருடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.

கட்டுமான பணிக்கு தடை உத்தரவு போட்ட பிரதேசசபை செயலாளர்!

சம்பவ இடத்திற்கு வந்த செங்கலடி பிரதேச சபையின் செயலாளர் பேரின்பம் அவர்களும், தவிசாளர் கதிரவேற்பிள்ளை அவர்களும் மக்களிடம் பின்வருமாறு கூறினர்-  தங்களுக்கு இவ்வாறான தொழிற்சாலை அமைப்பது தெரியாது எனவும் தங்களிடம் இங்கு கட்டப்படும் தொழிற்சாலைக்கான கட்டிடங்களுக்கு அனுமதி பெறவில்லை என்று கூறி பொலீசாருடன் தொழிற்சாலை வளாகத்திற்குள் சென்று அங்கு நடைபெற்ற பணிகளை உடனடியாக நிறுத்துமாறு கூறி தடை உத்தரவை பிறப்பித்தார். இதனால் உடனடியாக கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டு பணியாளர்கள் வீடுகளுக்கு சென்றனர்.

பிரதேச சபை தவிசாளரை தாக்க முற்பட்ட மக்கள்!

சிறிது நேரத்தில் தாங்கள் அனைத்திற்கும் அனுமதி பெற்றுள்ளோம் எனக் கூறி தொழிற்சாலை செயற்றிட்ட புத்தகத்தை ஒருவர் கொண்டு வந்து செங்கலடி பிரதேச சபை செயலாளரிடம் காட்டிய போது அதில் அவர் அனுமதி வழங்கி கையொப்பம் இட்டிருந்ததை காண கூடியதாக இருந்தது.

ஏற்கனவே தான் அனுமதி வழங்கவில்லை என்று கூறி தடைவிதித்த பிரதேச சபை செயலாளர் தற்போது அனுமதி வழங்கி கையொப்பமிட்டுள்ளார் என்பதை அறிந்து அதனால் குழப்பம் அடைந்த ஆர்ப்பாட்ட காரர்கள் செயலாளருடன் முரண்பட்டு அவரை தாக்க முற்பட்ட வேலையில் பொலீசார் அவரை பாதுகாப்பாக வெளியேற்றினர்.

ஆனால் செயலாளர் தன்னிடம் பொய் கூறி குறித்த திட்டத்திற்கு அனுமதி வாங்கியுள்ளதாக சிலரிடம் கூறிச் சென்றதை காணக்கூடியதாக இருந்தது.

இதனிடையே ஏறாவூர் பற்றின் தவிசாளர் இது குறித்து தனக்கு தெரியாது எனவும் இதில் சம்பந்தப்பட்ட அமைச்சர் தனது கட்சியாக இருந்தாலும் தங்களது சபையில் எடுக்கப்படும் தீர்மானத்திற்கு அமைய இதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

தொழிற்சாலை காணி யாருடையது?

குறித்த தொழிற்சாலை சுமார் நூறு ஏக்கர் காணிக்குள் அமைந்திருந்தாலும் அந்த தொழிற்சாலைக்கான காணியாக 25 ஏக்கர் காணியையே உறுதி எழுதி கொடுக்கப்பட்டுள்ளது.

மாகா என்ற தனியார் கம்பெனியின் பெயரிலேயே அந்த காணி உள்ளது. மீதி ஏக்கர் காணிகள் யாருடைய பெயரில் உள்ளது என்ற விபரங்கள் கிடைக்கவில்லை.
குறித்த காணி மற்றும் தொழிற்சாலை அமைப்பதற்கு பின்னால் காத்தான்குடியை சேர்ந்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறியபோதும்.

குறித்த கொம்பனியின் முகாமைத்துவ பணிப்பாளராக காத்தான்குடியை சேர்ந்த மும்தாஜ் மௌளவி என்பவரும், பணிப்பாளராக என்பவரும் உள்ளனர்.

இதற்கு அனுமதி வழங்கியது யார்?

மட்டக்களப்பு மாவட்டத்தில் சாதாரண மதில் கட்டுவதாக இருந்தாலும், மலசலகூடம் கட்டுவதாக இருந்தாலும், சிறு தொழில் வீட்டில் செய்வதாக இருந்தாலும் அதற்கு சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளிடம் அனுமதி பெறவேண்டிய கட்டாயம் உள்ள நிலையில் மட்டக்களப்பில் எந்த அதிகாரிகளுக்கும் தெரியாமல் இப்படி ஒரு தொழிற்சாலையை அமைக்க முடியுமா? என்ற கேள்வி எழுகிறது?

மட்டக்களப்பில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியாமல், அபிவிருத்தி குழு கூட்டங்களில் அனுமதி பெறப்படாமல் அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர் ஆகியோரின் அனுமதியை பெறாது அங்குள்ள மக்களுடன் கலந்தாலோசிக்காது எவ்வாறு கட்டுமானப் பணிகளை ஆரம்பித்தார்கள் என்று பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர்.

ஆனால் இதற்கான அனுமதிகள் அனைத்தும் பெறப்பட்டதற்கான செயற்றிட்ட புத்தகம் அவர்களிடம் உண்டு.

இந்த தொழிற்சாலையின் ஊடாக நாள் ஒன்றுக்கு 20,000 லீற்றர் தண்ணீரை உறிஞ்சி அதனை குடிநீராக மாற்றி அதை போத்தல்களில் அடைத்து விற்பதற்கான திட்ட வரையப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதிகளை மாகாண மற்றும் மாவட்ட பிரதேச திணைக்களங்களிடம் இருந்து அவர்கள் பெற்றுள்ளதற்கான சான்றுகள் உண்டு.

கட்டிடங்கள் கட்டுவதற்கான வரைபடங்களில் செங்கலடி பிரதேச சபை செயலாளர் கையொப்பமிட்டுள்ளார்.

மத்திய, மாகாண சுற்றாடல் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட நீர்பாசன திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.

மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து தொழிற்சாலை தொடர்பான பல ஆய்வுகள் செய்யப்பட்டு அனுமதி வழங்கப்பட்ட சான்றிதழ்கள் அவர்களிடம் உண்டு.

இத்தனையும் பெறப்பட்டுள்ள நிலையில் காடுகளை அழிப்பதற்கான அனுமதியை யார் வழங்கினார்கள் என்று தெரியவில்லை?

அத்துடன் மாவட்ட அரசாங்க அதிபரிடம் இந்த செயற்றிட்ட த்திற்கும் அனுமதி பெற்றதாக தெரியவில்லை.

ஆனால் ஒரு மாவட்ட அரசாங்க அதிபருக்கு தெரியாது அவரது அனுமதியை பெறாது ஒரு செயற்திட்டத்தை இந்த மாவட்டத்தில் எவ்வாறு நடைமுறைப்படுத்த முடியும் என்ற கேள்வி எழுகிறது?

பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரனின் முயற்சி!

குறித்த காணி மற்றும் தொழிற்சாலையின் பின்னனியில் ஒரு முஸ்லீம் இராஜாங்க அமைச்சர் உள்ளார் என்று அறிந்து பல தமிழ் அரசியல் வாதிகள் அதை எதிர்க்க தயங்கிய போதும் பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் அவர்கள் அந்த தொழிற்சாலைக்கு எதிராக அந்த மக்களுடன் இணைந்து செயல்பட்டதை காணக்கூடியதாக இருந்தது.

இந்த விடயம் தொடர்பாக தான் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்ப உள்ளதாகவும் தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் குவிக்கப்பட்ட பொலீசார்!

குறித்த தொழிற்சாலைக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தப்போகின்றார்கள் என்று அறிந்த பணிப்பாளர்கள் அதற்கு எதிராக பொலீசில் முறைப்பாடு செய்ததன் காரணமாக தொழிற்சாலைக்கு முன் பொலீசார் குவிக்கப்பட்டு உள்ளே யாரும் செல்ல கூடாது என தடை விதித்திருந்தனர்.

ஒரு வருட காலமாக பெறப்பட்ட அனுமதிகள்!

குறித்த தொழிற்சாலை அமைப்பதற்கான அனுமதிகளை பெற ஒரு வருட காலமாக தாம் அழைந்து திரிந்ததாகவும் மக்கள் சொல்லுவதை போல் இதில் சுற்றுச்சூழல் பிரச்சினை ஏதுமில்லை மத்திய சுற்றாடல் திணைக்களம் அதனை உறுதிப்படுத்தி தந்துள்ளது என்றும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காரணம் மக்களை சிலர் குழப்புகிறார்கள் மக்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் அதை எங்களிடம் பேசி தீர்த்து கொள்ளலாம். நாங்கள் இந்த பகுதி மக்களுக்கு இலவசமாக குடிநீர் கொடுக்க தீர்மானித்துள்ளோம் என கம்பெனியின் பணிப்பாளர் எம். எஸ். மொஹமட் நௌஷார்த் தெரிவித்தார்.

மக்கள் விரும்பாத திட்டத்தை அந்த பகுதியில் திணிக்க முற்படுவது சரியானதா?

இதற்கு மத்திய சுற்றாடல் திணைக்களம் எவ்வாறு அனுமதி வழங்கியது?

இந்த திட்டத்தால் நிலத்தடி நீர் வற்றி போகாதா?

மட்டக்களப்பில் இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கியது யார்?

இது தடுத்து நிறுத்தப்படுமா? போன்ற பல கேள்விகளுடன் தொடர்கிறது மக்களின் எதிர்பார்ப்புகள்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here