செக்ஸில் மனைவி ஏன் அச்சமடைகிறார்?: டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள் 11

எஸ்.கிருபா (31)
கிளிநொச்சி

டாக்டர், நான் தனியார் வங்கியில் நல்ல பொறுப்பில் இருக்கிறேன். திருமணமாகி நான்கு மாதங்களாகிறது. உடலுறவு சமயத்தில் எனது மனைவி ஒத்துழைக்கிறார் இல்லை. உடலுறவிற்கு முன்னதாக கட்டிப்பிடிக்கும் போதே, முத்தமிடும் போதே மகிழ்ச்சியாக, ஆர்வமாக இருக்கிறார். ஆனால் உடலுறவு சமயத்தில் பதற்றமடைகிறார், பற்களை கடிக்கிறார். பயப்பிடுகிறார். தொடைகளை இறுக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறார். எவ்வளவோ சொல்லியும் அவரை மாற்ற முடியவில்லை. ஏன் அவர் இப்படி?…எப்படி இதை மாற்றலாம்?

டாக்டர் ஞானப்பழம்: இந்தப் பிரச்னைக்குப் பெயர் ‘வஜைனிஸ்மஸ்’ (Vaginismus). உறவில் ஈடுபடும்போது, வலிப்பதாலோ, வலிக்குமோ என்ற பயத்திலோ சில பெண்கள் இப்படி நடந்துகொள்வார்கள். இதை அவர்கள் உணர்ந்து செய்வதில்லை. தன்னை அறியாமலேயே செய்வார்கள்.

வஜைனிஸ்மஸ்… புதிதாகத் திருமணமான பெண்களுக்கு மட்டுமல்ல, திருமணமாகிச் சில வருடங்கள் கழித்தும்கூட ஏற்படலாம். இந்த பயம் வருவதற்கான முக்கியக் காரணங்கள்… ‘முதலிரவின்போது, பெண்ணுறுப்பின் கன்னித்திரை கிழிந்து கடுமையான வலி இருக்கும், இரத்தப்போக்கு அதிகமாக இருக்கும்’ என்று சுற்றியுள்ளவர்கள் பேசுவது; சினிமாக்களில் இதுபோன்ற காட்சிகளைப் பார்த்து, அதை நம்புவது. சிறு வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்களுக்கும் இந்தப் பிரச்னை ஏற்படலாம். ,செக்ஸ் என்பது குழந்தை பெற்றுக்கொள்ள மட்டும்தான். இன்பத்துக்காக உறவுகொள்ளக் கூடாது. அது தவறு, பாவம்’ என்ற மூடநம்பிக்கையாலும் ஏற்படலாம்.

திருமணத்துக்குப் பிறகு இந்தப் பிரச்னை ஏற்பட வேறு காரணங்கள் இருக்கின்றன. பெண்ணுறுப்பில் நோய்த்தொற்று, காயம், கர்ப்பப்பை அறுவைசிகிச்சையைச் சரியாகச் செய்யாமல் போவது, இடுப்பெலும்பின் இணைப்புகளில் வலி போன்றவை. இந்த பாதிப்பு ஏற்பட்டால், மனைவி வேண்டுமென்றே இப்படிச் செய்கிறாள் என்று நினைத்துக்கொண்டு, கோபத்தில் காயப்படுத்தும் விதமாகப் பேசுவார் கணவர். சில ஆண்கள் வேறு பெண்களிடம் உறவு வைத்துக்கொள்வார்கள்.  இதனால் கணவன்-மனைவி உறவில் விரிசல் ஏற்படும்.

மனரீதியாக இது ஏற்பட்டால், செக்ஸ் தெரபி (Sex Therapy) மூலம், கொஞ்சம் கொஞ்சமாகப் பெண்ணுக்குப் புரியவைத்துச் சரிசெய்து விடலாம். உடல்ரீதியான காரணங்களாக இருந்தால், அவற்றுக்கு ஏற்ற சிகிச்சையை மேற்கொள்ளலாம். இந்தப் பிரச்னை குறித்து ஆணுக்கு எடுத்துச் சொல்லிப் புரியவைக்க வேண்டியது அவசியம். இதற்கு நல்ல மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.

பெண் (32)
கொக்குவில்

எனக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். எனக்கும் கணவருக்குமிடையில் எந்த மனஸ்தாபமும் இல்லை. ஆனால், அண்மைக்காலமாக எனக்கு உடலுறவில் நாட்டமில்லாமல் உள்ளது. ஞானப்பழம் ஐயாவின் மருத்துவ குறிப்புக்களை தொடர்ந்து படித்தேன். அதில் குறிப்பிட்டபடி எந்த காரணமும், அறிகுறியும் எனக்கு தெரியவில்லை. ஆனால், உடலுறவில் ஈடுபட ஆர்வமில்லாமல் உள்ளது. சில சமயங்களில் வலி இருக்கிறது. இதனால் கணவருக்கும் என்னில் அதிருப்தியாக இருக்கிறார். எனக்கு என்ன பிரச்சனையாக இருக்கும்?

டாக்டர் ஞானப்பழம்: உங்கள் நீண்ட கடிதம் படித்தேன். முதலில் ஒரு விசயத்தை உங்களிற்கு சொல்ல வேண்டும். பாலியல் சிக்கல் என்றல்ல, எல்லா சிக்கல்களிற்கும் இது பொருந்தும். நமக்கு ஏதாவது ஒரு சிறிய உடல் பிரச்சனையிருக்கலாம். அப்போது, படிக்கும் எல்லா மருத்துவ குறிப்புக்களிலும் நமது பிரச்சனைக்கான அறிகுறி இருப்பதை போலத்தான் தெரியும். ஆகவே, இதுவா, அதுவா என மனதை போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம்.

பெண்களுக்கு ஏற்படும் பாலியல் சிக்கல்களில் பிறப்புறுப்பில் உண்டாகும் நோய்களும் முக்கியமானவை. பல இளம் பெண்களுக்கு இந்தச் சிக்கல் ஏற்படக் காரணம், போதிய துண்டுதல் இல்லாமல் போவது. வயது முதிர்வடையும் பெண்களுக்கு, மெனோபாஸ் சமயத்தில் ஏற்படும் ஈஸ்ட்ரோஜென் குறைபாடுகள், ஹார்மோன் கோளாறுகள் மற்றும் பிற உடல் பிரச்னைகளும் காரணமாக இருக்கலாம்.

சில பெண்களுக்கு பெண்ணுறுப்பைச் சுற்றியுள்ள தசைகள் இறுக்கமடைவதால் வலி உண்டாகும். அறுவை சிகிச்சை காரணமாக ஏற்படும் காயம், பிரசவித்தின்போது தொற்று ஏற்படுதல், துணை அணிந்திருந்த ஆணுறையால் உண்டாகும் அலர்ஜி காரணமாகவும் இந்தச் சிக்கல்கள் ஏற்படும். கொனோரியா, ஹெர்பிஸ், பிறப்புறுப்பில் ஏற்படும் மருக்கள், கிளமிடியா, சிபிலிஸ் ஆகிய நோய்கள் பாலுறவின் மூலமாகப் பரவுகின்றன. இவை பிறப்புறுப்பில் மாற்றத்தை ஏற்படுத்தி, பாலுறவை வலி மிகுந்ததாக மாற்றிவிடுகின்றன. தொற்று அல்லது பிற காரணங்களால் பிறப்புறுப்புத் திசுக்களில் ஏற்படும் வீக்கம், எரிச்சல் ஆகியவையும் பாலுறவுச் சிக்கலில் முக்கியக் காரணங்களாகின்றன.

உங்களிற்கு பாலுறவில் சிக்கலிருப்பதாக உணர்ந்தால், உங்கள் மனதை குழப்பாமல், ஒரு திசையில் வழிகாட்டி விடவே இந்த பகுதியில் எழுதுகிறேன். ஏற்படக்கூடிய அண்ணளவான சிக்கல்களையே அடையாளப்படுத்தியுள்ளேன். இப்பொழுது நீங்கள் செய்ய வேண்டியது, நல்ல ஒரு வைத்தியரை நாடுவதே.

முந்தைய பகுதி: டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள் 10

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here