ஜனாதிபதி வேட்பாளரை விரைவாக அறிவிக்காவிட்டால் நாம் மாற்று முடிவு எடுப்போம்: சம்பிக்க எச்சரிக்கை!

புதிய கூட்டணி உருவாக்குவதை விரைவுபடுத்தி உடனடியாக ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்குமாறு ஐ.தே.கவின் தலைமையை வலியுறுத்தியுள்ளார் ஜாதிக ஹெல உருமய கட்சியின் தலைவர் சம்பிக்க ரணவக்க. நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது இதனை தெரிவித்தார்.

கூட்டணியை அமைப்பதில் மேலும் காலதாமதமானால், அது ஜனநாயக தேசிய முன்னணியை பலவீனப்படுத்தும் என்பதுடன், தாம் மாற்று வழியை சிந்திக்க வேண்டியேற்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

“இது நாங்கள் விடுக்கும் அரசியல் வேண்டுகோள். ஒரு குடும்பம் அதிகாரத்தை பிடிக்கும் வரை காத்திருப்பதைத் தவிர நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம் என்று நினைக்க வேண்டாம். புதிய கூட்டணி தாமதமானால் மாற்று முடிவை எடுக்க நாங்கள் கட்டாயப்படுத்தப்படுவோம்” என்றார்.

கடந்த சனிக்கிழமையன்று நையாக தேசிய முன்னணியின் தலைவர்களுடனான சந்திப்பின்போது, புதிய கூட்டணியின் பெயர், சின்னம், அலுவலகம், செயலாளர் மற்றும் கூட்டுத் தலைமை பற்றிய உடன்பாட்டை எட்டியதாகவும், ஆனால் அதன்பின்னர் என்ன நடந்தது என்பது தெரியவில்லையென்றும் தெரிவித்தார்..

புதிய கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த ஒப்பந்தம் இன்னும் வரவில்லை என்றும், இது ஒரு அரசியல் கால்பந்தாட்டமாக மாற்றப்படக்கூடாது என்றும் கூறினார்.

“ஐ.தே.கவிற்குள் நடக்கும் உள்ளக மோதல்கள் அவர்களை ஒரு அரசியல் தோல்விக்கு இட்டுச்செல்லக்கூடும் என்பதோடு ஒட்டுமொத்த ஐ.தே.முன்னணியையும் பாதிக்கும். ஐ.தே.க வேட்பாளரை நியமனம் செய்வதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. எவ்வாறாயினும், ஜனநாயக தேசிய முன்னணியின் பரந்த கூட்டணியால் அந்த வேட்பாளர் ஆதரிக்கப்படாவிட்டால் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவது சாத்தியமில்லை. புதிதாக பதிவுசெய்யப்பட்ட 1 மில்லியன் இளம் வாக்காளர்களையும், சுமார் 4 மில்லியன் கட்சி சாராத வாக்காளர்களையும் நாம் ஈர்க்க வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புகளை வழங்க எங்களுக்கு ஒரு புதிய நம்பிக்கை, புதிய திட்டம், புதிய குழு மற்றும் புதிய வேட்பாளர் தேவை” என்று அவர் குறிப்பிட்டார்.

“கடந்த ஐந்து ஆண்டுகளில், ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை விரிவுபடுத்துதல் போன்ற சில அம்சங்களில் அரசாங்கம் வெற்றிகரமாக இருந்தது. ஆனால் அது ஊழல் தடுப்பு மற்றும் ஊழல்வாதிகளை தண்டிப்பதில் தோல்வியுற்றது. இது மக்களிடையே விரக்திக்கு வழிவகுத்ததுடன், அவர்களின் கோபத்தை அரசாங்கத்தின் பக்கம் செலுத்தியது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் மத கலவரங்களின்போது அரசாங்கம் வேகமாக செயல்படவில்லை. தேவையான சட்டங்கள் இன்னும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை. மக்களின் அச்சங்களும் சந்தேகங்களும் இன்னும் நீடிக்கின்றன. மறுபுறம், ராஜபக்ஷ முகாமில் இருந்து மக்கள் புதிதாக எதையும் எதிர்பார்க்க முடியாது. அதே பழைய குழு மற்றும் மூலோபாயம்தான் அங்குள்ளது. 52 நாள் அரசியல் சதித்திட்டத்தில் முக்கிய மந்திரி அமைச்சர்களுக்கு யார் நியமிக்கப்பட்டார்கள் என்பதை மக்கள் கண்டனர். இந்தச் சூழலில், 2015 ல் ஜனநாயக முகாமைச் சுற்றி திரண்ட வாக்காளர்கள் கவலையுடனும், அவநம்பிக்கையுடனும் உள்ளனர். இந்த கட்டத்தில், ஒரு அச்சமற்ற அரசியல் தியாகம் என்பது காலத்தின் தேவை” என்று தெரிவித்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here