ப.சிதம்பரத்தை சிபிஐ காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு


ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை வரும் 26ம் தேதி வரை 5 நாட்கள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு சட்டவிரோதமாக முதலீடு பெற அனுமதித்த வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ, அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

இதையடுத்து, முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நாளை விசாரணை செய்யப்படும் என உச்ச நீதிமன்றம தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் சிதம்பரம் நேற்று இரவு டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டுக் கதவு மூடியிருந்ததால் சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறிக்குறித்து உள்ளே சென்று அவரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் நேற்று இரவு முழுவதும் அரசியல் பரபரப்பு காணப்பட்டது.

இதைத்தொடர்ந்து விசாரணைக்காக சிதம்பரம் இன்று பிற்பகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது மனைவியும் மூத்த வழக்கறிஞருமான நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் நீதிமன்றத்துக்கு வந்துள்ளனர். மேலும் சிதம்பரத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, கபில் சிபல் உள்ளிட்டோரும் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டனர்.

சிதம்பரத்திடம் கேட்ட கேள்விகளையே சிபிஐ அதிகாரிகள் கேட்கிறார்கள், அவர்களிடம் கேட்பதற்கு கேள்விகளே இல்லை என அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் வாதங்களை முன் வைத்தார். அதுபோலவே 10 ஆண்டுகளாக நடைபெறும் வழக்கில் தற்போது சிதம்பரத்தை கைது செய்தது ஏன் என சிங்வி கேள்வி எழுப்பினார்.

அதுபோலவே சிபிஐ தரப்பு வாதமும் முன் வைக்கப்பட்டது. சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை எனவே அவரை காவலில் எடுத்து விசாரணை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பை சிறிது நேரம் நீதிபதி ஒத்தி வைத்தார். பின்னர் சிபிஐ கேட்டப்படி வரும் 26ம் தேதி (திங்கட்கிழமை) வரை 5 நாள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

இதையடுத்து அவர் சிபிஐ அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுவார். விசாரணைக்குப்பின் வரும் திங்கட் கிழமை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here