விவாதத்தில் எம்.பியின் குழந்தையை கவனித்துக் கொண்ட நியூசிலாந்து சபாநாயகருக்கு குவியும் பாராட்டு!


நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் விவாதத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரது கைக் குழந்தையை சபாநாயகர் கவனித்துக் கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டுதலை பெற்றுள்ளது.

குழந்தை வளர்ப்பில் பணிக்கு செல்லும் தாய் – தந்தை இருவருக்கும் சம பொறுப்பு வேண்டும் என்ற விவாதங்கள் உலகம் முழுவதும் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், பணி இடங்களுக்கு குழந்தைகளை அழைத்து செல்வது பல்வேறு இடங்களில் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் பங்கேற்ற ஆண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரது கைக்குழந்தையை விவாதத்தின்போது சபாநாயகர் கவனித்து கொண்ட நிகழ்வு நடந்துள்ளது.

நியூசிலாந்து எம்.பி. தமாட்டி காஃபி என்பவர் வாடகை தாயின் மூலம் கடந்த ஜூலை மாதம் தந்தையாகி இருக்கிறார். இந்த நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட பிரசவ கால விடுப்பு முடிந்தப் பிறகு, முதல் நாளில் தனது மகனுடன் நாடாளுமன்றம் வந்தார். மகனுடன் நாடாளுமன்ற அவைக்கு வந்தது குறித்து, “ எனது மகன் எங்கள் வாழ்வில் அற்புதத்தை ஏற்படுத்தி இருக்கிறார்’ என்று தனது உரையில் குறிப்பிட்டார் தமாட்டி.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற விவாதம் தொடர்ந்தது. அப்போது தமாட்டியின் கைக்குழந்தையை சபா நாயகரான ட்ரிவர் மல்லார்ட் கவனித்துக் கொண்டார். குழந்தைக்கு புட்டி பாலில் பால் கொடுப்பது என விவாத நிமிடங்களில் தமாட்டிக்கு குழந்தையால் இடையூறு எற்படாத வண்ணம் குழந்தையை கவனித்து கொண்டார் ட்ரிவர்.

ட்ரிவரின் இந்தச் செயல் அனைவரின் பாராட்டையும் பெற்று தந்தது. மேலும் குழந்தையுடன் சபாநாயகர் நாற்காலியில் ட்ரிவர் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அதில், “பெரும்பாலும் சபாநாயகர் நாற்காலியில் அமர உயர் அதிகாரிகளே அனுமதிக்கப்படுவர். ஆனால் தற்போது நம்மோடு சிறப்பு விருந்தினர் ஒருவர் இருக்கிறார். உங்கள் குடும்பத்தில் புதிய உறுப்பினர் வருகைக்கு வாழ்த்துகள் தமாட்டி” என்று தெரிவித்துள்ளார்.

ட்ரிவரின் இந்த செயலை சமூக வலைதளங்களில் அனைவரும் பரவலாக பாராட்டினர்.

கடந்த 2018-ம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த ஐக்கிய நாடு சபையின் பொதுக் கூட்டத்தில் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா தனது மூன்று மாதக் குழந்தையையுடன் பங்கேற்றார் .

அதே நேரத்தில் கென்ய நாடாளுமன்ற உறுப்பினர் சுலைக்கா ஹசன் என்பவர், கென்ய நாடாளுமன்றத்தில் தனது குழந்தையுடன் வந்ததற்காக துணை சபாநாயகரால் வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here