எண்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா நிதி யாருக்கு விடுவிக்கப்படுகின்றது?: டக்ளஸ் கேள்வி!


‘எண்டர்பிரைசஸ் ஸ்ரீ லங்கா’ என்கின்ற திட்டம் தொடர்பிலும் பாரிய அளவில் நிதி விடுவிக்கப்பட்டு வருவதாகவும், இது எதுவரையில் போய் நிற்குமோ தெரியாது என்றும், இதன் காரணமாகவும் வங்கிக் கட்டமைப்புகள் சிதைவுறும் நிலை உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஆனால், எங்களது பகுதிகளைப் பொறுத்தவரையில், மேற்படி திட்டத்திற்கென வங்கிக்கு போனால், அங்கே நிதிக்குப் பதிலாக எமது மக்களை இழுத்தடிக்கின்ற நடவடிக்கைகளே தொடர்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே, மேற்படி பாரியளவிலான நிதி யாருக்கு விடுவிக்கப்படுகின்றது என்ற கேள்வி எழுகின்றது. இது தேர்தல் நடவடிக்கைக்கான முதலீடா? அல்லது பொறுப்பானவர்களது உற்றார், உறவினர்கள், நண்பர்களுக்கானதா? என்ற சந்தேகமே எமது மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்றது. நீங்கள் என்னென்ன திட்டங்களைக் கொண்டு வந்தாலும், எமது மக்களுக்கு அவற்றில் மாற்றாந்தாய் மனப்பான்மையே இன்னும் தொடர்ந்து காட்டப்பட்டு வருகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபை கீழான கட்டளைகள் தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டபின் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

எமது பிரச்சினைகளை நாம்தான் தீர்க்க வேண்டும். எமது மக்களது பிரச்சினைகளை அரசுதான் தீர்க்க வேண்டும். அதைவிடுத்து, சர்வதேச சமூகம் தீர்க்க வேண்டும் என இடித்துரைத்துக் கொண்டும், எடுத்துரைத்துக் கொண்டும் இருக்க முடியாது. அது சாத்தியமும் இல்லை.

இதுரையில், கிடைத்திருந்த நல்ல சந்தர்ப்பங்களை எல்லாம் கைநழுவ விட்டுவிட்டு, இந்த அரசாங்கத்தைக் கொண்டு வந்ததாகக் கூறிக் கொண்டு, இந்த அரசாங்கத்திற்கே முட்டுக் கொடுத்துக் கொண்டு, இந்த அரசே எல்லாவற்றையும் தமிழ் மக்களுக்கு செய்து கொடுக்கும் எனக் கூறிக் கொண்டு, இந்த அரசைக் கொண்டு, தங்களது சுயநலன்களை மாத்திரம் நிறைவேற்றிக் கொண்டு இன்று தேர்தலென வரும்போது, அரசாங்கத்தை நம்ப முடியாது என்றும், சர்வதேச சமூகமே அழுத்தங் கொடுக்க வேண்டும் என இந்தப் பணப் பெட்டி தமிழ் அரசியல்வாதிகள் இன்று மீண்டும் கூறத் தொடங்கிவிட்டார்கள்.

பல்வேறு இக்கட்டான நிலைமைகளில்கூட வெறும் பார்வையாளர்களாகவே சர்வதேச சமூகம் இருந்துள்ளதை எமது மக்கள் மறந்துவிடவில்லை. அரசியல் என்பது தமிழ்த் தரப்புப் பணப்பெட்டி அரசியல்வாதிகளுக்கு வாழ்வாதாரமாகவும், எமது மக்களுக்கு இவர்களது இந்த அரசியலே சாவாதாரமாகவும் இருக்கின்றது.

சர்வதேச சமூகத்திற்கு இடித்துரைக்கின்ற இந்தப் பணப்பெட்டி தமிழ்த் தரப்பு அரசியல்வாதிகள், இவர்கள் பங்கெடுத்திருக்கின்ற இந்த அரசை முதலில் பிடித்துரைத்திருக்க வேண்டும்.

அரசிடம் போய் தங்களுக்கென நிதி பெற்றுக் கொண்டு, அரசு தமிழ் மக்களுக்கு நீதி வழங்கவில்லை எனக் கூறிக் கொண்டிருப்பதில் எவ்விதமான பயனும் இல்லை என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here