குழந்தையின் மனுவும் நிராகரிப்பு: எப்பொழுதும் நாடு கடத்தப்படும் அபாயத்தில் ஈழத்தமிழ் குடும்பம்!

அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களான தமிழ் குடும்பத்தின் குழந்தையின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளதையடுத்து, அந்த குழந்தையும் குடும்பமும் விரைவில் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளனர்.

கடந்த இரண்டு வருடங்களாக மெல்பேர்னில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நடேசலிங்கம்-பிரியா தம்பதியின் குழந்தையான தருணிகாவின் மனுவையே, அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சு நிராகரித்துள்ளது.

நடேசலிங்கமும் பிரியாவும் தனித்தனியாக கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் படகு மூலம் புகலிடம் கோரி அவுஸ்திரேலியாவிற்கு சென்றனர். இத்தம்பதிக்கு அவுஸ்திரேலியாவில் பிறந்த இரு சிறு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

நடேசலிங்கம் மற்றும் பிரியாவின் புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருந்தது. இவர்களுக்கு வழங்கப்பட்ட இடைக்கால வீசாவும் கடந்த வருட ஆரம்பத்துடன் காலாவதியாகிவிட, அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை இறங்கியது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இக் குடும்பம் பல காலமாக வாழ்ந்து வந்த குயின்ஸ்லாந்திலிருந்து அவர்களை பலவந்தமாக அழைத்துச் சென்று நாடுகடத்த முற்பட்ட வேளையில் சட்ட நடவடிக்கை காரணமாக அம்முயற்சி இறுதி நேரத்தில் தடுக்கப்பட்டது. பின்னர், இவர்கள் மெல்பேர்ண் குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர்.

நடேசலிங்கம்-பிரியா குடும்பம், நாடுகடத்தப்படக் கூடாதென வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கடந்த ஆண்டு ஜூன் 21 அன்று மெல்பேர்ன் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மீண்டும் இக் குடும்பத்தை நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்கிய குடிவரவுத்துறை அதற்கான கடிதத்தையும் தீர்ப்பு வெளியான அடுத்தநாளே கையளித்தது. ஆனால் நீதிமன்றின் தீர்ப்பிற்கெதிராக நடேசலிங்கம்-பிரியா குடும்பம் மேன்முறையீடு செய்திருந்ததால் நாடுகடத்தப்படுவது இரண்டாவது தடவையாகவும் தடுக்கப்பட்டது.

ஆனால் இக் குடும்பத்தின் மேன் முறையீட்டு மனுவை கடந்த டிசம்பர் 21ம் திகதி விசாரித்த ஃபெடரல் நீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்ததுடன் இக் குடும்பத்தை நாடுகடத்துமாறும் உத்தரவிட்டிருந்தது. அதையடுத்து, உயர் நீதிமன்றில் இக் குடும்பம் தாக்கல் செய்திருந்த மனுவும் மே மாதம் 14ம் திகதி நிராகரிக்கப்பட்டது.

நடேசலிங்கம்-பிரியா குடும்பம் வாழ்ந்து வந்த பிலோலா பகுதி மக்கள் இக் குடும்பத்தை தமது பகுதியில் தொடர்ந்தும் வாழ அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். அங்கு பிரமாண்ட பேரணி நடத்தி, கையெழுத்து வேட்டையிலும் ஈடுபட்டனர். எனினும், இது எதையும் அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கணக்கில் எடுக்கவில்லை.

இறுதியாக, கடந்த ஜூன் 12ம் திகதி தருணிக்காவின் பெயரில், உள்துறை அமைச்சிடம் முன்வைத்த கோரிக்கையை, அமைச்சரின் அதிகாரம் குறித்த அமைச்சரின் வழிகாட்டுதல்களுக்கு எதிராக இந்தக் கோரிக்கை மதிப்பிடப்பட்டுள்ளதால், இந்தக் கோரிக்கையை அமைச்சரிடம் அனுப்ப முடியாது என்று உள்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது. இதனையடுத்து குழந்தையும் நடேசலிங்கம்-பிரியா குடும்பமும் விரைவில் நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here