சஜித்- தமிழ் அரசு கட்சி நள்ளிரவு கடந்தும் இரகசிய பேச்சு: 6 மாதத்தில் பிரச்சனையை தீர்ப்பேன் என சஜித் வாக்குறுதி!

ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும், தமிழ் அரசு கட்சிக்குமிடையில் நேற்றிரவு இரகசிய சந்திப்பு நடந்தது. அமைச்சர் மங்கள சமரவீரவின் ஏற்பாட்டில் நடந்த இந்த சந்திப்பு, நள்ளிரவு கடந்து இன்று அதிகாலை வரை நீடித்தது என தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது.

ஐக்கிய தேசியக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகுவதற்கு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ள, அந்த கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாச பல்வேறு தரப்புக்களின் ஆதரவை திரட்ட முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதேவேளை, உடனடியாக பிரதமர் பதவியை ஏற்பதன் மூலம் கட்சி தலைமையையும் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாமென்ற, ஐ.தே.கவின் சில மூத்த தலைவர்களின் ஆலோசனையையும் தீவிரமாக பரிசீலித்து வருகிறார்.

இந்த இரண்டு விவகாரங்களையும் முன்னிறுத்தி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில் நேற்று, இந்த சந்திப்பு இடம்பெற்றது. அமைச்சர் மங்கள சமரவீரவின் ஏற்பாட்டில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தமிழ் அரசு கட்சி சார்பில் கலந்து கொண்டனர். சஜித் பிரேமதாசவுடன் மங்கள சமரவீரவும் சந்திப்பில் கலந்து கொண்டார்.

ஜனாதிபதி தேர்தலில் தன்னை முழுமையாக ஆதரிக்கும்படி சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்திருந்தார். தான் அதிகாரத்தை கைப்பற்றினால், அடுத்த ஆறு மாதத்திற்குள் தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்த்து வைப்பேன் என இதன்போது வாக்குறுதியளித்தார் என்பதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது.

எனினும், எந்தவகையான தீர்வு, அதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்த திட்டங்கள் எதுவும் தற்போது தன்னிடமில்லையென்றும், அதிகாரத்திற்கு வந்ததும், ஆறு மாதத்தில் பிரச்சனையை தீர்ப்பது என்ற இலக்குடன் செயற்பட்டு, இறுதி இலக்கொன்றை அடையலாமென சஜித் தெரிவித்தார்.

எனினும், ரணில் ஆதரவு மனநிலையுடைய தமிழ் அரசு கட்சி தலைவர்கள், சஜித்தை ஆதரிக்க நீண்ட தயக்கத்தை வெளிப்படுத்தினர். இருந்தபோதும், தமிழ் அரசு கட்சி தலைவர்களை வழிக்கு கொண்டு வர அதீத பிரயத்தனத்தில் ஈடுபட்டார். ரணில் அரசாங்கத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குமிடையில் நெருக்கமான பிணைப்பு ஏற்பட்டதே தன்னால்தான் என்பதை குறிப்பிட்ட மங்கள, ரணில் வேட்பாளராகினால் தேர்தல் வெற்றி சாத்தியமில்லையென்பதை குறிப்பிட்டு, சஜித் அதிகாரத்திற்கு வந்தால் அரசியல் தீர்விற்கான உத்தரவாதத்தை தானும் தருவதாக குறிப்பிட்டார்.

நீண்ட கலந்துரையாடலின் பின்னர், இரண்டு தரப்பிற்குமிடையில் கொள்கையளவில் இணக்கம் ஏற்பட்டுள்ளது. விரைவில் மீண்டும் சந்தித்து பேசுவதென இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

நேற்று இரவு 8.30 மணியளவில் ஆரம்பித்த கலந்துரையாடல் இன்று அதிகாலை 1.30 மணிக்கு பின்னரே கலந்துரையாடல் முடிந்தது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here