அப்போது அழகால்… இப்போது அடாவடியால்: சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆகிய இளம்பெண் அரசியல்வாதி!


“நானெல்லாம் யார் தெரியுமா?… ஓவர் த போனிலேயே ஒபாமாவுடன் பேசுவேன்“ பாணியில் பில்டப் விட்ட, வென்னப்புவ பிரதேசசபையின் இளம்பெண் உறுப்பினர் ஒருவரின் வீடியோதான் நேற்று இலங்கையில் ட்ரெண்டிங்கான வீடியோ.

சமோதரி பெர்னாண்டோ (21) என்ற வென்னப்புவ பிரதேசசபையின் இளம்பெண் உறுப்பினர் இப்பொழுது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பொலிஸ் அதிகாரிகளிற்கு பில்டப் கொடுத்த அம்மணியின் வீடியோவை மாரவில நீதிவானிடம் பொலிசார் சமர்ப்பித்ததையடுத்து, அவரையும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மூவரையும் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

நேற்று முன்தினம் (20) சமோதரி பெர்னாண்டோவும், அவரது சகோதரி நவன்ஜலி பெர்னாண்டோ (16)வும் நேற்று முன்தினம் (20) கைதாகினர். அவர்களது தந்தையும், 18 வயதான இன்னொரு சகோதரியும் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.

சமோதரியையும், நேற்று முன்னிலையான சகோதரியையும் எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தந்தையையும், நவன்ஜலியையும் விடுவித்தது.

சமோரியின் சகோதரியொருவர் மோட்டார் சைக்கிளில் அதி வேகமாக பறந்து சென்றுள்ளார். வீதிச்சோதனையில் ஈடுபட்ட பொலிசார் மறித்தும் நிற்கவில்லை. “ஏம்மா… மின்னலு“ பாணியில் ஒரு இளம்பெண் பறந்து சென்றதை பார்த்த பொலிசாரும் விரட்டி சென்று, மின்னலை மடக்கிப்பிடித்தனர்.

மின்னலிடம் சாரதி அனுமதிப்பத்திரமோ, வேறு ஆவணங்களோ எதுவும் இல்லை. இருந்தது ஒன்றேயொன்றுதான். கைத்தொலைபேசி. அக்காவிற்கு (சமோரி) அழைப்பேற்படுத்தி, நடந்ததை சொல்லியுள்ளார்.

மற்றைய சகோதரியையும் ஏற்றிக்கொண்டு அக்கா அந்த இடத்திற்கு வந்து செய்த அளப்பறைதான், நேற்று இலங்கையின் ட்ரென்டிங் வீடியோ.

இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விசயமுண்டு.

சமோரி இப்போது மட்டும் ட்ரெண்டிங் ஆகவில்லை. கடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலின்போதும், சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆனார்.

உள்ளூராட்சி தேர்தல் என்றால், அரச உத்தியோகத்திலிருந்து ஓய்வுபெற்றவர்கள், பஞ்சத் தலையும், தொந்தியுமாக இருப்பவர்கள்தான் போட்டியிடுவார்கள் என இருக்கும் நிலைமையில், 20 வயது இளம்பெண்ணொருவர் ஐதேக சார்பில் களத்தில் குதித்தார். அவர் அழகாகவும் இருக்கிறார் என இளைஞர்கள் கொண்டாடினர். பிறகென்ன, சமூக ஊடகத்தில் அவரை ட்ரெண்டாக்கினார்கள்.

அந்த சமயத்தில் சமூக ஊடகத்தில் அவரது புகைப்படங்கள் தாராளமாக உலாவின.

அப்போது, அம்மணிக்கு ஒரு ஆர்மிதான் உருவாக்காத குறையிருந்தது. இப்போது, பொலிஸ் கஸ்டடியில் இருக்கிறார்.

அதாகப்பட்டது, இதிலிருந்து சொல்லப்படும் நீதி யாதெனில்- சட்டம் எல்லோருக்கும் பொதுவானது என்றும் சொல்லலாம். அல்லது, பொலிசிடம் சிக்கினால் வில்லங்கத்தை விலைக்கு வாங்காமல் ஐஸ் வைத்தாவது தப்பி விடுங்கள் என்பதே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here