தமிழ் எம்.பிக்கள் கவனிக்காத இந்த பிரச்சனையை தீர்ப்பவருக்கே எமது வாக்கு: மீனவர் சங்கங்கள் அறிவிப்பு!


வடக்கு மாகாண மீனவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பவர்களிற்கே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்போம் என தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் வடமாகாண கடற்றொழிலாளர்கள் இணையமும் இணைந்து வவுனியா விருந்தினர் விடுதியில் நேற்று (19) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தனர்

“வடபகுதி மீனவர்கள் போரிற்கு முன்னரும் சரி அதற்கு பின்னரும் சரி நிம்மதியான வாழ்வை வாழ்கின்றார்களா என்றால் அதற்கான பதில் கேள்விகுறியானதாகவே இருக்கிறது. வடக்கில் நடைபெற்று வரும் சட்டவிரோதமான மீன்பிடி முறை மற்றும் தென்னிலங்கை மீனவர்களின் வருகை தொடர்பாக பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளிற்கு பலமுறை நாம் தெரியபடுத்தியும் உரிய தீர்வுகள் இதுவரை கிடைக்கவில்லை.

குறிப்பாக முல்லைதீவின் நாயாறு, அளம்பில் போன்ற பகுதிளில் சிலாபம், நீர்கொழும்பு, கற்பிட்டி, வென்னப்புவ போன்ற பகுதிகளில் இருந்து வருகை தந்துள்ள மீனவர்கள் நிரந்தரமான வாடிகளை அமைத்து மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாம் அனைத்து தரப்புகளுடனும் கலந்துரையாடி தென் இலங்கையை சேர்ந்த 32 படகுகளிற்கு தொழிலில் ஈடுபட அனுமதி வழங்கியிருந்தோம். அது தற்போது 500 ஆக பெருகியுள்ளது. அதில் 200 ற்கும் மேற்பட்டவர்கள் எந்தவித பதிவுகளும் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்டுவருகின்றார்கள்.

இது தொடர்பாக நாம் ஆளுனருக்கு தெரியப்படுத்திய நிலையில் அவர் அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை அழைத்து கடற்றொழில் அமைச்சுடன் கலந்தரையாடி அடுத்தமுறை நடைபெறவுள்ள முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தின்போது தெளிவான முடிவை ஒன்றை தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

எனினும் இதுவரை எங்களை எந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் அணுகாத நிலையில் முடிவில்லாமல் இந்த பிரச்சினை இருக்கிறது. அத்துடன் எமது கடற்பரப்பில் சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டுவருகின்றது.

அத்துடன் சுண்டிகுளம் தொடக்கம் நாயாறு வரையான ஆற்றுப்பகுதியை பறவைகள் சரணாலயமாக பிரகடனப்படுத்தபட்டுள்ளது. இதனால் எமது தொழில் மேலும் பாதிப்பை சந்தித்துள்ளது. அத்துடன் கிளிநொச்சியின் சிறு கடற்பரப்புகளில் இழுவை படகுகளை பயன்படுத்தி மீன் பிடிக்கபட்டு வருவதுடன் டைனமற்றும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் கிளிநொச்சி மாவட்ட மீனவர்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்து நிற்கின்றனர்.

ஒருபக்கம் கடல் வளம் மறுபக்கம் நிலவளம் என இந்த அரசாங்கம் திட்டமிட்டு அனைத்தையும் சூறையாடி வருகின்றது. இதனை கண்டும் காணாதது போல எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். எனவே எமது கோரிக்கையை நீதியான முறையில் தீர்பவர்களிற்கே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வடக்கின் கடற்றொழிலாளர் சமூகம் வாக்களிக்கும்“ என்று தெரிவித்தனர்.

இந்த ஊடகசந்திப்பில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு கிழக்கு இணைப்பாளர் அன்டனி ஜேசுதாஸ், வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.எம்.ஆலம், கிளிநொச்சி கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் ஜோசப் பிரான்சிஸ் மற்றும் முல்லைதீவு மாவட்ட மீனவ சமாசங்களின் தலைவர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here