ஊரெல்லாம் துரோகி, கஜேந்திரன் மட்டும் தியாகி… தமிழ் சமூகத்திற்கு சாபமாகும் கஜேந்திரனின் அரசியல்!

©தமிழ்பக்கம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் நேற்று மாலை அவசரகதியில் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார். அதில் அவர் தெரிவித்த கருத்தொன்று சர்ச்சைக்குரியதாகியுள்ளது.

தமிழ் சமூகத்தின் ஒரு பகுதியிடமுள்ள தட்டையான, வரட்சியான அரசியல் பார்வையை கஜேந்திரன் அந்த சந்திப்பில் வெளிப்படுத்தியுள்ளார். இந்தவகையான பார்வையுடையவர், ஒரு கட்சியின் செயலாளர் என்பது அதிர்ச்சிக்குரியது.

“சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், டக்ளஸ் தேவானந்தா, வரதராஜ பெருமாள், கருணா, பிள்ளையான் எல்லோரும் எம்மைப் பொறுத்தவரை துரோகிகள். விடுதலைப் புலிகளை போல தாமும் விடுதலைக்காக போராடியதாக இப்பொழுது மக்களை ஏமாற்ற முனைகிறார்கள்“ என தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் நீண்ட விளக்கத்திற்கும், விவாதத்திற்கும் உரியது. ஒன்றிலிருந்து ஒன்று கிளை பிரிந்து பல விவகாரங்களிற்கு செல்வது. அதனால் மிக சுருக்கமாக சில விசயங்களை சொல்லலாம்.

முதலாவது, மேற்படி உள்ளவர்களின் கடந்த விடுதலைப் போராட்ட வரலாற்றை யாராலும் கேள்வி கேட்க முடியாது. இன்றைய தமிழ் சமூகத்தில் அதற்கான தகுதி யாருக்கும் கிடையாது. குறிப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கோ, தமிழ் காங்கிரசிங்கோ, செல்வராசா கஜேந்திரனிற்கோ அந்த தகுதி துளியளவும் கிடையாது.

ஆனால் இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் அரசு கட்சி இளையவர்கள் இந்தவகையான மனநிலையுடன்தான் தமிழ் அரசியல் பரப்பிற்குள் நுழைகிறார்கள். செயற்பாட்டு அரசியல் என்பது விடுதலைப்புலிகளுடன் முடிந்து விட்டதன் பின்னான தமிழ் அரசியலில் ஏற்பட்ட பெரிய அவலம் இது.

யாரும், எதுவும், எதையும் விமர்சிக்கலாம் என்ற நிலைமையை புலிகளின் பின்னான காலம் உருவாக்கியுள்ளது. விமர்சிக்கப்படுபவரின் கடந்த காலம் கருத்தில் கொள்ளப்படுவதில்லையென்பதுடன், விமர்சிப்பதற்கும் எந்த தகுதியும் தேவையில்லையென்ற நிலைமை உருவாகியுள்ளது.

இன்று தமிழ் தேசிய அரசியலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் அரசு கட்சியின் இளையவர்கள் தமக்கிருக்கும் தகுதியாக கருதிக் கொள்வது, இராணுவக்கட்டுப்பாட்டிற்குள் போஸ்டர் ஒட்டினோம், ஈ.பி.டி.பி மிரட்டலிற்குள் கூட்டம் வைத்தோம், கட்சியின் எம்.பிக்களும் வெளிநாட்டுக்கு ஓடிய பின்னர் நாம்தான் கட்சியை வளர்த்தோம் என்பதுதான்.

உண்மையில், அரசுக்கோ, இராணுவத்திற்கோ இவையெல்லாம் பிரச்சனைகளே கிடையாது. அந்த நேரம் இதற்காக பயப்பிடுவதாக இந்த தரப்பினர் கூறியிருந்தால் இராணுவமே பாதுகாப்பளித்திருக்கும். காரணம், எப்பொழுதும் செயற்பாட்டரசியலுக்குத்தான் அரசு அஞ்சும். அவர்கள்தான் குறியாக இருந்தனர்.

செல்வராசா கஜேந்திரன் தனக்கிருக்கும் பிரதான தகுதியாக எதை கருதுகிறார்?

பல்கலைகழக மாணவர் ஒன்றியத் தலைவராக இருந்ததையா? அல்லது பொங்குதமிழ் நிகழ்வின் ஏற்பாட்டில் பங்கேற்றதையா? அல்லது, மாணவர் ஒன்றியம் மூலம் சமாதான காலத்தில் புலிகளின் நடவடிக்கைகளை ஆதரித்ததையா?, உரத்த குரலில் புலிகளை ஆதரித்ததையா? அல்லது, இப்போது வாராந்தம் மைக்கின் முன்னால் உட்கார்ந்து செய்தியாளர் சந்திப்பை நடத்துவதா?

பொங்குதமிழ் நிகழ்வை தவிர்த்தால், உள்ளூரில் உள்ள சாதாரண வெறிக்குட்டி கூட கஜேந்திரன் செய்த மற்ற அனைத்தையும் செய்கிறார். அதற்காக வெறிக்குட்டிகள் எல்லாம் இந்த உலகத்தையே நிராகரித்தது கிடையாது. தமது எல்லையெதுவென்பது அவர்களிற்கே தெரியும்.

பொங்குதமிழ் நிகழ்வை ஏற்பாடு செய்ததில் பங்கெடுத்தது ஒன்றுதான், ஒப்பீட்டளவில் மற்ற யாழ்ப்பாண இளைஞர்களை விட கஜேந்திரன் அதிகமாக செய்த அதிகபட்ச நடவடிக்கை. நன்றாக கவனிக்கவும்- ஏனைய யாழ்ப்பாண இளைஞர்களை விடவேதான் அவர் அதிகமாக செய்திருந்தாரே தவிர, எந்த அமைப்பின் போராளியையும் விட அவர் இந்த தேசத்திற்கு அதிகமாக எதையும் செய்துவிடவில்லை. புலிகள், புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் என தமிழீழ விடுதலைக்காக போராடிய பல இயக்கங்களின் போராளிகள் எவரையும்விட இந்த தேசத்திற்காக கஜேந்திரன் எதையும் அதிகபட்சமாக செய்துவிடவில்லை.

மாணவர் ஒன்றியத்தின் மூலம் கஜேந்திரன் புலிகளின் அரசியல்துறையின் பிரசார பணிகளிற்கு ஏதாவது ஒத்தழைத்தார் என்று வைத்தாலும், அந்த பணியை குடாநாட்டில் இருந்த நூற்றுக்கணக்கானவர்கள் செய்தார்கள். அதில் பெரும்பாலானவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டு விட்டனர்.

எல்லா இயக்க போராளிகளும் தமது அர்ப்பணிப்பிற்கு எந்த பிரதியுபகாரத்தையும் பெறவில்லை. எதிர்பார்க்கவுமில்லை. கல்வியை, வாழ்க்கையை, உயிரை, அங்கங்களை இழந்துதான் இந்த இலட்சியத்திற்காக தம்மை அர்ப்பணித்தார்கள். பின்னாளில் துரோகிகள் என குறிப்பிடப்பட்டவர்களும் ஆரம்பநாட்களில் இப்படித்தான் இருந்தார்கள். ஆனால், புலிகளிற்கு ஆதரவாக செயற்பட்டதன் பலனை கஜேந்திரன் பெற்றார். கள்ளவாக்குகள் மூலம் என்றாலும் எம்.பியானார். அப்போது குடாநாட்டில் புலிகளிற்கு ஆதரவாக செயற்பட்ட நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட, எம்.பி சிறப்புரிமையுடன் தப்பித்ததுமல்லாமல், பின்னர் நாட்டைவிட்டு பாதுகாப்பாக தப்பித்து சென்றார்.

கஜேந்திரன் நேர்மையானவர் எனில், தனது பல்கலைகழக சகபாடிகள் சுட்டுக்கொல்லப்பட்டுக் கொண்டிருக்க, குடாநாட்டில் தமிழர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்க, வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றிருக்க கூடாது. இந்த போராட்டத்தால் தமது வாழ்க்கையை இழந்த ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். அதிகமேன், புலிகளை போலவே ஈ.பி.டி.பி அமைப்பில் இணைந்து கல்வியை, எதிர்காலத்தை இழந்து அமைப்பை தவிர வேறெந்த நம்பிக்கையுமில்லாமல் நூற்றுக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். புலிகள் கொண்டிருந்த அரசியல் வழியை போலவே, ஈ.பி.டி.பியும் தனக்கென அரசியல் வழியொன்றை வைத்திருந்தது. ரெலோ வைத்திருந்தது. புளொட் வைத்திருந்தது. இந்த அமைப்பின் எந்த போராளியும், போராடியதால் வசதி வாய்ப்பை பெற்றுக்கொள்ளவில்லை. ஆனால், கஜேந்திரன் பெற்றுக்கொண்டார். அதை பயன்படுத்தி, ஆபத்தான சமயத்தில் நாட்டை விட்டு தப்பி சென்று பாதுகாப்பாக இருந்து விட்டு, ஆபத்து முடிந்ததும் திரும்பி வந்தார்.

கண்ணை மூடிக்கொண்டு 360 பாகையும் அறக்கத்தியை சுழற்றுவதற்கு முன்னர், தன்னை அறிந்து கொள்ள வேண்டும் கஜேந்திரன். அப்படியென்றால்தான், அவரால் ஆரோக்கியமான அரசியல் செய்ய முடியும். துரதிஸ்டம் என்னவென்றால், கஜேந்திரனை போலவே கட்சியில் இணையும் தம்பிகள் எல்லோரும் அரசியல் சிந்தனையை வறட்சியானதாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். தியாகி, துரோகி அரசியலுக்கு அப்பால் இவர்கள் யாராலும் சிந்திக்க முடியவில்லை.

புலிகள் மற்ற இயங்கங்களை தடை செய்தது, துரோகிகளாக கற்பிதம் செய்ததன் விமர்சனங்களை தவிர்த்து, அதை செய்யும்போது யாரும் கேள்வி கேட்க முடியாத நிலைமையை உருவாக்கியிருந்தார்கள். எல்லா இயக்கங்களை விடவும் அவர்கள் செயல்வீரர்களாக இருந்தார்கள். ஏனைய இயக்கங்களை தடைசெய்தது அரசியல்ரீதியாக தவறான முடிவாக அப்போது இருந்தாலும், அவர்களின் செயல்வீரம் அதை ஊதிப்பெருப்பித்து காண்பிக்கவில்லை.

புலிகளை தவிர்ந்த ஏனைய இயங்கங்கள் இராணுவத்துடன் இணைந்திருந்தது என்பதை மேலோட்டமாக புரிந்துகொள்ள முடியாது. இயக்கங்களிற்கிடையிலான புரிந்துணர்வற்ற தன்மையால் உருவாக மோதலே அந்த நிலைமைக்கு இட்டு சென்றது. அந்த மோதலே, ஏனைய இயக்கங்களை இராணுவத்தை நோக்கி தள்ளிச் சென்றது. இவை ஆழமான பார்வைக்குரியவை.

இந்தியப்படைகள் இலங்கை வந்தபோது, விடுதலைப்புலிகள் இலங்கை இராணுவத்துடன் நெருக்கமாக இருந்தனர். புலிகளால் தடைசெய்யப்பட்ட இயக்கங்கள் சில சுயாதீனமாக செயற்பட முனைந்தபோது, கொழும்பில் இலங்கை இராணுவத்துடன் இணைந்து விடுதலைப் புலிகளின் போராளிகளும் அவர்களை வேட்டையாடினர். அப்போது புலிகளின் அணியொன்று இரத்மலானை முகாமில் தங்கியிருந்ததை இன்றைய இளைஞர்கள் அறிந்திருக்க வாய்ப்பேயில்லை. கொழும்பிலும் ஆபத்தின்றி செயற்பட முடியாத நிலைமையில் பல இயக்கங்கள் இந்திய படைகளை நோக்கி சென்றன. இயக்க மோதலை இனி போஸ்மோர்டம் செய்து கொண்டிருப்பதில் பலனில்லை.

தமது கடந்தகாலத்திற்காக இயங்கங்கள் தம்மை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும், பொதுத்தளத்தில் அதை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதெல்லாம் கட்டாயமானவை. ஆனால், அதை பேசுவது இன்னொரு தளம். அந்த தளத்தை காரணமாக கொண்டு, முன்னணியின் இளைஞர்கள் போன்றவர்களின் வாய்ப்பேச்சு அரசியலை நியாயம் செய்ய முடியாது.

அந்த தவறுகளை இயக்கங்களே புரிந்து கொண்டன. அதனால்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவானது. ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ கூட்டமைப்பில் இணைந்தன. புளொட் அந்த பேச்சுக்களில் ஈடுபட்டாலும், புலிகளை ஏக பிரதிநிதிகளாக அங்கீகரிப்பதிலுள்ள சிக்கல்களை சுட்டிக்காட்டி, அப்போது இணைவதை தவிர்த்திருந்தது.

போராட்டத்தில் பங்கெடுக்காத, வரலாறு தெரியாத இன்றைய இளைஞர்கள், தமது வரையறையை தெரிந்து, செழிப்பான அரசியல் பார்வைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டுமே தவிர, கஜேந்திரன் வகையறாக்கள் உருவாக்கும் வறண்ட, தட்டையான அரசியலை பின்பற்றுவது இந்த சமூகத்தை மேலும் நெருக்கடிக்குள் தள்ளும்.

புலிகளும் சில கறாரான அரசியல் கருத்துக்களை உருவாக்கினாலும், மகத்தான செயற்பாட்டு பாரம்பரியத்தில் இருந்து அதை உருவாக்கினார்கள். இந்த வித்தியாசத்தை முன்னணி புரிந்து கொள்ள வேண்டும்.

கஜேந்திரன் அன்று குறிப்பிட்டதை போல, ஏனைய இயக்க தலைவர்களின் போராட்ட பங்களிப்பையும், அன்றைய போராட்ட வரலாற்றையும் யாரும் நிராகரிக்க முடியாது. அப்படி நிராகரிக்க முயற்சிப்பதால், வரலாறு அழியாது. வரலாறு குறித்த போதிய அறிவின்மைதான் அப்படியான முயற்சிகளிற்கு இட்டு செல்லும்.

சில வரலாற்று தகவல்களை இந்த வகையானவர்களிற்காக குறிப்பிட வேண்டும். பிரித்தானியாவில் கல்வி கற்றுக்கொண்டிருந்த போது, அதையெல்லாம் உதறிவிட்டு போராட வந்தவர்கள் சுரேஸ் பிரேமச்சந்திரனும், பத்மநாபாவும். டக்ளஸ் தோனந்தாவின் சகோதரி சோபாதான் தமிழீழ விடுதலை போராட்டத்தில் உயிர்நீத்த முதல்பெண் போராளி. தனிப்பட்ட முரண்பாடு ஒன்றில் டக்ளஸ் தேவானந்தாவின் சகோதரர் ஒருவரை 80களின் தொடக்கத்தில் கிட்டு வாளால் வெட்டிக் கொன்றார்.

70களின் தொடக்கத்தில் தங்கத்துரை போன்றவர்களுடன் பிரபாகரன் சேர்ந்து செயற்பட தொடங்கினார். அப்போது தீவிரமாக இயங்கியவர்களில் கேடி போன்ற பலரிருந்தனர். ரெலோ தடைசெய்யப்பட்டபோது, ஏன் என தெரியாமலே கேடி போன்ற போராட்ட முன்னோடிகளும் கொல்லப்பட்டனர்.

80களின் தொடக்கத்தில் பிரபாகரன் விடுதலைப்புலிகள் அமைப்பை விட்டு ஒதுங்கி, தங்கத்துரையுடன் ரெலோவுடன் செயற்பட்டார். அப்போது புலிகளின் அணியை மாத்தையா வழிநடத்தினார்.

விடுதலைப்புலிகளின் பிரித்தானியா அலுவலகத்தை முதன்முதலில் ஆரம்பித்தவர் சித்தார்த்தன். அப்போது லண்டனில் இருந்த அன்ரன் பாலசிங்கம், ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்புடன்தான் அதிக தொடர்பில் இருந்தார்.

விடுதலைப்புலிகளின் மகளிர் அணி தளபதிகளான சோதியா, விதுஷா இருவரும் ஆரம்பத்தில் ரெலோ மகளிர் அணி செயற்பாட்டாளர்களாக இருந்தனர். பின்னர், ரெலோவில் ரமேஷ், சுதன் பிரிவின் போது, மகளிர் அணியின் கணிசமானவர்கள் புலிகளிடம் வந்தனர். அதிலேயே மேற்படி இருவரும் புலிகளிடம் வந்தனர்.

வரதராஜ பெருமாள் பொருளாதாரரீதியாக மிக பின்தங்கிய குடும்பம். எல்லா போராளிகளும்- பிரபாகரன் உட்பட- அவரது வீட்டுக்கு சென்றார்கள். எல்லோருக்கும் அவரது தாயார் அம்மாதான். நோயுற்ற உடம்புடனும் எல்லோருக்கும், நேரகாலமில்லாமல் இடியப்பம் அவித்து கொட்டிக் கொண்டிருந்தார். தியாகி திலீபன், வரதராஜ பெருமாள் வீட்டிலேயே அடிக்கடி உணவு உண்டார்.

இதையெல்லாம் ஏன் குறிப்பிட்டேன் என்றால், யாரையும் குறை கூறவோ, யாருக்கும் குடை பிடிக்கவோ அல்ல. எல்லா சரி, பிழைகளுடனும் எல்லா போராளிகளும் தமிழீழ விடுதலை ஒன்றையே குறியாக கொண்டு களத்திற்கு வந்தார்கள். செயற்பட்டார்கள். அப்போது யாரும் மகானுமல்ல, பாவியுமல்ல. எல்லோரும் போராளிகள். கஜேந்திரன் பிறப்பதற்கு முன்பாகவே அவர்களில் பலர் தமது வாழ்க்கையை துறந்து போராட்டத்திற்கு வந்து விட்டனர்.

இந்த விவகாரத்திற்கு இன்னொரு பார்வையும் உள்ளது.

இயக்கங்களை தர நிர்ணயம் செய்வதற்கு முன்னர், கஜேந்திரன் தான் சார்ந்த கட்சியை எப்பொழுது தர நிர்ணயம் செய்வார்?

அகில இலங்கை தமிழ் காங்கிரசின் வரலாற்றில் முன்னெப்பொழுதுமே சமூகரீதியான முன்னோக்கிய பார்வை இருக்கவில்லை. மலையக தமிழ் மக்களின் குடியுரிமையை பறித்த கறை தமிழ் காங்கிரசின் கைகளில் உள்ளது. சமூகரீதியாக ஒடுக்கப்பட்டவர்களின் கட்சியாக எப்பொழுதும் காங்கிரஸ் இருக்கவில்லை. யாழ் மேட்டுக்குடி வெள்ளாள சிந்தனை மரபை பேணியதுடன், அந்த மரபை தவிர்ந்தவர்களிற்கு கட்சியின் முக்கிய பொறுப்பில் இடமளிக்கப்படவில்லை. ஒப்பீட்டளவில் தமிழ் அரசு கட்சி இந்த விவகாரத்தில் முன்னோடியாக இருந்தது.

சமூகரீதியில் மட்மல்ல, அரசியல்ரீதியாகவும் முன்னோடி பாத்திரமெதையும் அது காங்கிரஸ் வகிக்கவில்லை. செல்வநாயகம் நாடாளுமன்றத்தில் சமஷ்டி கோரி ஒருமுறை உரையாற்றியபோது, ஜி.ஜி.பொன்னம்பலம் அதை மறுத்தார். சமஷ்டி கொடுத்தால் நாடு பிரியும் என்றார்.

1977 இல், குமார் பொன்னம்பலம், “தமிழீழமா? அது என்ன சமான்? கடையில் வாங்கலாமா?“ என்றார்.

1982 ஜனாதிபதி தேர்தலில் தமிழீழ கோரிக்கையை நிராகரித்து, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார்.

தனது கட்சியின் அரசியல் கறைகளை பட்டியலிட்டு, அதை என்றேனும் அந்த கட்சியின் இன்றைய பிரமுகர்கள் மன்னிப்போ, வருத்தமோ தெரிவித்தார்களா? தமது கடந்தகால வரலாற்றைப் பற்றி மூச்சுவிடாமல், கடந்தகாலத்தை மறைத்து, புதிய பெயரில் அந்த கட்சியின் இளைய உறுப்பினர்களால், “அக்மார்க் தமிழ் தேசியவாதிகளாக“ உருவாக முடியுமென்றால், போராட்ட இயக்கங்கள் கடந்தகால தவறுகளை பேசாமல் இன்று புதிய அரசியல் செய்வதில் என்ன தவறு?

1989 தொடக்கம் பல வருடங்கள் குமார் பொன்னம்பலத்தின் கொழும்பு வீட்டிற்கு ரெலோ, புளொட் இரண்டு இயக்கங்கள்தான் பாதுகாப்பு அளித்து வந்தன. குமார் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவை பாதுகாப்பளித்தன. அரச தரப்பின் சில அலகுகள், புலிகள் தனக்கு ஆபத்தை தரலாமென்பதால், குமாரே அந்த இயக்கங்களிடம் கேட்டு பாதுகாப்பை பெற்றிருந்தார். அந்த நேரத்தில், புலிகள் தாக்குதல் நடத்தலாமென்பதால் வீட்டின் அமைப்பையும் மாற்றியிருந்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது, சின்னம் விவகாரத்தில் இழுபறி ஏற்பட்டு, அதில் கையெழுத்து வைக்க அப்போதைய காங்கிரஸ் தலைவர் அ.விநாயகமூர்த்தி கையொப்பமிட மறுத்தார். அவரை தொலைபேசியில் தொடர்புகொண்ட சிவராம், “இரண்டு துப்பாக்கி ரவைகள் உங்களிற்காக காத்திருக்கிறது என புலிகள் சொன்னார்கள்“ என தெரிவித்த பின்னரே, ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார்.

களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிட டக்ளஸ் தேவானந்தா சென்றபோது, அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. களுத்துறைக்கு டக்ளஸ் செல்வதற்கு முன்பாக, குமார் பென்னம்பலம் அவரை தொடர்பு கொண்டு, அங்கு செல்ல வேண்டாமென கூறியிருந்தார். தாக்குதலின் பின்னர், டக்ளஸை பார்வையிட சென்றபோது, “அங்கு புலிப்பொடியள் இருக்கிறார்கள். போக வேண்டாமென சொன்னேன் அல்லவா?“ என குமார் அன்பாக கடிந்து கொண்டிருந்தார்.

சில காலத்தின் முன்பாக மின்னல் நிகழ்ச்சியொன்றில், டக்ளஸ் தேவானந்தாவும், கஜேந்திரகுமாரும் கலந்து கொண்டிருந்தனர். அப்போது, படப்பிடிப்பு இடைவேளையின்போது, களுத்துறை சம்பவத்தை நிகழ்ச்சியில் பேச வேண்டாமென டக்ளசிடம் வினயமாக கேட்டுக் கொண்டிருந்தார் கஜேந்திரகுமார்.

சிவாஜிலிங்கம் விடுதலைப்புலிகளின் கொலைப்பட்டியலில் இருந்தவர். அவரை “போட“ சென்றபோது, அங்கு அவர் இல்லாததால் மோதிலால் நேருவை “போட்டு“விட்டு வந்தனர். அதே சிவாஜிலிங்கம் பின்னர் புலிகளால் அங்கீகரிக்கப்பட்டார். அவரே, பிரபாகரனின் தாயாரை அதிகம் கவனித்துக் கொண்டார். ரெலோ துரோகிகளினால் பார்வதியம்மாளை கவனிக்கப்பட ஏன் முன்னணி அனுமதித்தது? முன்னணியே அவரை கவனித்திருக்கலாமே? இப்படியான சின்னச்சின்ன பொறுப்புக்களைக்கூட செய்ய தயாரில்லாதவர்கள், சகட்டுமேனிக்கு மற்றவர்களை விமர்சிப்பதன் மூலமே அரசியல் செயற்பாட்டை முன்னெடுக்க முயற்சிக்கிறார்களா?

இவையெல்லாம் வரலாற்றின் போக்கில் சில தகவல்கள். இன்று கொள்கைக்குன்றுகளாக தம்மைத்தாமே பிரகடனம் செய்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற போர்வையின் பின்னாலுள்ள கறுப்பு பக்கங்கள்.

வரலாறு முழுவதும் கறைபடிந்த பக்கங்களுடைய கட்சி, மைக் முன்பாக பேசியதை தவிர வேறு எதுவுமே செய்யாத உறுப்பினர்கள்… எல்லாம் செய்து களைத்துப் போனவர்களையெல்லாம் விமர்சிப்பது அரசியல் விநோதமன்றி வேறென்ன?

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here