அவதூறு ஏற்படுத்தியதற்காக அனந்தி மீது வழக்கு தொடரவுள்ளேன்: பா.டெனீஸ்வரன்


என் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி அவதூறு ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் மீது வழக்கு தொடரப்படும் என முன்னாள் வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண முன்னாள் முதலமைச்சருக்கு எதிரான நீதிமன்ற வழக்கு தொடர்பில் ஊடகவியலாளர் இன்று எழுப்பிய கேள்விக்கு ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

என்னை அமைச்சரவையில் இருந்து நீக்கியமை தொடர்பில் முதலமைச்சருக்கு எதிரான முறைப்பாட்டுக்கு இறுதித் தீர்ப்பு வந்திருக்கிறது. முதலமைச்சரால் விசாரணைக்குழு அமைத்த பின்னர் 2016ம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் திகதி தான் என்மீது முதன் முதல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. வெலி ஓயாப் பகுதியில் இருக்கின்ற சிங்கள குடும்பங்கள் வாழும் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் மீன்குஞ்சு விடப்பட்டமையில் மோசடி செய்தேன் என்றும், வீதி அபிவிருத்தி நடவடிக்கைளின் போது பஸ் தரிப்பிடம் அமைக்கும் போது மோசடி இடம்பெற்றது எனவும், மாவீரர் போரளிகளுக்கான வேலைத்திட்டத்தில் ஊழல் நடந்தது என்ற குற்றச்சாட்டையும் மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் முன்வைத்திருந்தார். ஆனால் நான் அந்த விசாரணைக்கு சென்றிருந்தேன். என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கான அனைத்து பதில்களையும் வழங்கியிருந்தேன்.

ஒவ்வொரு வருடமும் எனது மீன்பிடி அமைச்சுக்கு 30 மில்லியன் தொடக்கம் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. அதில் 5- 6 இலட்சம் ரூபாய் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருக்கின்ற சிங்கள கிராமத்திற்கு வழங்கினேன். அவ்வாறு நான் செய்தது பிழை என்பது தான் முதலாவது குற்றச்சாட்டு.

அந்த சிங்கள குடும்பங்கள் எமது வடமாகாணத்தில் இருக்கின்ற மக்கள். நான் வடமாகாணத்தில் இருக்கின்ற மூவின மக்களுக்கும் அமைச்சர் தான். அவர்களுக்கு செய்யக் கூடாது என்று ஒரு மாகாண சபை உறுப்பினர் செய்த முறைப்பாடு தான் அது. எமது மாகாணத்தில் சிறுபான்மையாக சிங்கள மக்கள் இருக்கின்ற ஒரு மாவட்டத்தில் ஒரு 100 தொட்க்கம் 200 பேர் வரையில் சிங்கள மக்கள் வசிக்கும் நிலையில் அந்த கிராமத்திற்கு நான் உதவி செய்யக் கூடாது எனில், மத்திய அரசாங்கம் வடக்கு, கிழக்கு மாகாணத்திற்கோ அல்லது தமிழ் மக்களுக்கோ உதவி செய்யவில்லை என்று எப்படி கேட்க முடியும். அப்படிப் பார்த்தால், அவர்கள் எம்மை அடக்கி ஆள்வது சரி.

இதற்கு நான் விசாரணை குழுவில் சரியான விளக்கம் கொடுத்துள்ளேன். அதேபோல் மாவீரர் போராளிகள் குடும்பங்களுக்கும், ஒதுக்கப்பட்ட நிதிகளில் ஒரு ரூபாய் என்றாலும் நான் எடுத்தேன் என்று நிரூபியுங்கள் நான் அரசியலில் இருந்து ஓதுக்குகிறேன். வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதி அந்த நிதிப் பிரமாணங்களுக்கு அமைய வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள் ஊடாகவே செலவு செய்யப்பட்டது. இவை எல்லாவற்றுக்கும் நான் சரியாக பதில் அளித்த பின்னரும் எனக்கு எதிரான பாரதூரமான குற்றச்சாட்டுக்களை கொடுத்த அனந்தி சசிதரன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. என்மீது விசாரணை இடம்பெற்ற போது யாழ் நுலாகத்திற்கு அருகில் உள்ள ஒரு இடத்தில் அனந்தி சசிதரன் நின்றிருந்தார். தான் கொடுத்த ஒரு முறைப்பாட்டுக்கு முகம் கொடுத்து அதனை நிரூபிக்க முடியாத அளவுக்கு தள்ளப்பட்டு விசாரணை குழு பல தடவைகள் அவருக்கு அறிவித்தல் கொடுத்தும், அவர் விசாரணை குழு முன் தோன்றவில்லை. இவ்வாறு பிழை செய்த ஒருவருக்கு முதலமைச்சர் எடுத்த நடவடிக்கை என்ன?

இந்தநிலையில், அடுத்த ஒரு வழக்கு அனந்தி சசிதரனுக்கு எதிராக போட இருக்கின்றேன். அவதூறு ஏற்படுத்தியமை தொடர்பில் அந்த வழக்கை தாக்கல் செய்யவுள்ளேன். முடிந்தால் அனந்தி சசிதரன் அந்த வழக்கில் வென்று காட்டட்டும். அனந்தி சசிதரன் செய்த முறைப்பாடு பொய் என்பதை விசாரணை குழு தெரிவித்துள்ளது. எனவே அடுத்த நகர்வு என்ன என்பதை முழுமையாக சட்ட நகர்வுக்காக சொல்ல முடியாது. இருந்தும் அனந்தி சசிதரன் மீது அடுத்த நடவடிக்கை தொடரும் என கூறுகின்றேன் எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here