கல்முனை தரவை பிள்ளையார் ஆலய பெயர் மாற்றப்பட்டு விட்டது: அடம்பிடிக்கும் முஸ்லிம்கள்!


கல்முனையில் பன்னெடுங்காலமாக தரவை கோவில் வீதி என்ற பெயரில் அழைக்கப்பட்ட வீதிப்பெயரை, கடற்கரை பள்ளி வீதி என்ற மாற்றம் செய்தது சரியே என அடம்பிடிக்கிறார் கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப்.  கல்முனை மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டு இருப்பதனால் பழைய பெயர் செல்லுபடியற்றது ஆகிவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

கல்முனை மாநகர சபையின் மாதாந்த பொதுச் சபை அமர்வின் போது மேற்படி வீதியின் பெயர் தொடர்பில் தமிழ், முஸ்லிம் உறுப்பினர்களுக்கு இடையே வாய்த்தர்க்கம் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

நம்மில் பெரும்பாலானோர் தத்தம் அரசியலுக்காக சமூக விவகாரங்களில் உரத்து கோசம் எழுப்புகிறோம். இவ்வாறான பேச்சுக்கள் இன ஐக்கியத்திற்கு ஊறு விளைவிப்பதை எவரம் கருத்தில் கொள்வதில்லை. அவ்வாறே இந்த வீதியின் பெயர் தொடர்பிலும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

உண்மையில் ஒரு காலத்தில் இந்த வீதிக்கு தரவைக் கோவில் வீதி என்ற பெயரை சூட்டுகின்றபோது அவ்வீதியில் வசிக்கின்ற மக்களின் விருப்பம் அறியப்படாமல், அவர்களுக்கு தெரியாமல், உரிய விதிமுறைகள் பின்பற்றப்படாமல் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த சபையில் நமக்குள் உண்மையை பேசுவோம். அந்த வீதியில் நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் வாழ்கின்ற நிலையில் ஒரு தமிழ் குடும்பமாவது வாழ்கின்றதா என தமிழ் உறுப்பினர்களிடம் கேட்க விரும்புகின்றேன். நிச்சயமாக இல்லை என்பீர்கள்.

இந்த வீதியில் தான் முஸ்லீம்களின் பிரசித்தி பெற்ற கடற்கரை பள்ளி அமைந்திருக்கிறது. அதனால் தான் முஸ்லிம்கள் இந்த வீதியை கடற்கரை பள்ளி வீதி என அழைத்து வருகிறார்கள். ஆனால் இந்த வீதியில் தரவை கோவில் அமைந்திருக்கவில்லை. வீதிக்கு மறுபுறத்தில் கல்முனை அக்கரைப்பற்று நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

இதனை கருத்திற்கொண்டே கல்முனை தரவை கோவில் வீதி என்று பதிவாகியுள்ள பெயரை கடற்கரை பள்ளி வீதி என மறு பெயராக மாற்றும் பிரேரணை கல்முனை மாநகரசபையில் 2014-01-14 அன்று அப்போதைய முதல்வர் நிசாம் காரியப்பர் தலைமையில் நிறைவேற்றப்பட்டது. கிழக்கு மாகாணசபைக்கு தீர்மானம் அனுப்பப்பட்டபோதும், முதல்வரினால் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவில்லை.

ஒரு வீதிக்கு பெயர் சூட்டும் அல்லது பெயர் மாற்றும் அதிகாரத்தை கொண்டிருக்கின்ற எமது மாநகர சபை தீர்மானம் தீர்மானம் நிறைவேற்றியதில் இருந்து தரவை கோவில் வீதி என்ற பழைய பெயர் செல்லுபடியற்றதாகி விட்டது என்பதை எல்லோரும் புரிந்து கொள்ளவேண்டும். தொடர்ந்தும் இந்த விடயத்தில் நாம் மோதிக் கொள்ளத் தேவையில்லை. வேண்டுமானால் இரு தரப்பினருக்கும் பொதுவாக சமாதான வீதி என பெயர் சூட்டுவது பற்றி பரிசீலிப்போம் என்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here