கோட்டபாய மட்டுமல்ல புலிகளும் போர்க்குற்றத்தில் ஈடுபட்டனர்; மறப்போம் மன்னிப்போம்; கோட்டாவிற்கு வாக்களிப்போம்: ஓடிப்போன முதலமைச்சர்!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச மீதான போர்க் குற்றச் சாட்டுக்களை தமிழ் மக்கள் மன்னித்து மறக்க வேண்டும். தமிழ் தேசியத்தை கோட்டாபய அழித்தவர் எனவும், ரணில் விக்கிரமசிங்க அதை காப்பாற்றியவர் போலவும் இங்கு சிலர் உருவாக்க முயலும் கருத்து ஐ.தே.கவின் பச்சை அரசியலேயாகும் என தெரிவித்துள்ளார் வடக்கு கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள்.

யாழ்ப்பணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்றுஅவர் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

கோட்டாபய மட்டும் போர்க்குற்றச்சாட்டில் ஈடுபடவில்லை. விடுதலைப்புலிகளும் சம அளவில் போர்க்குற்றச்சாட்டில் ஈடுபட்டதாக விமர்சனங்கள் உள்ளன என்றும் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மீதான போர்க் குற்றச் சாட்டுக்கள் தொடர்பாக தமிழ் மக்கள் இனி அக்கறை செலுத்த வேண்டியதில்லை. ஏனெனில் ஐக்கிய தேசியக்கட்சியும் இதேபோல பெரிய போர்க்குற்றங்களில் ஈடுபட்டது. போர்க் குற்றத்தில் கோத்தபாய மட்டும் ஈடுபடவில்லை. போர் நடைபெற்றபோது தமிழீழவிடுதலைப் புலிகளும் சரிசமமாக போர்க் குற்றத்தில் ஈடுபட்டதாக சர்வதேசம் குறிப்பிட்டுள்ளது.

இதையெல்லாம் திரும்பத் திரும்ப பேசிக் கொண்டிருப்பதால் இந்த நாட்டுக்கு, மக்களிற்கு எந்தவித பலனுமில்லை. சர்வதேச நாடுகள் எதையும் சொல்லட்டும். ஆனால் அவை எதையும் செய்யப்போவதில்லை. இது முழுக்கமுழுக்க அரசியல் ரீதியான குற்றச்சாட்டு. இவற்றை மறந்து மன்னித்து முன்னோக்கி நகர்பவர்களிற்கு தடையாக இருக்கிறதே தவிர, ஒரு உருப்படியான, முற்போக்கான செயற்பாட்டை இந்த நாட்டுக்கோ, வடக்கு கிழக்கிற்கோ வரவிடவில்லை.

தமிழ்த் தேசிய இனத்திற்கு தனிநாடு தேவையென்ற காலம் இருந்தது. ஆனால் அந்த காலம் முடிந்து, ஒன்றுபட்ட இலங்கைக்குள்தான் வாழ வேண்டுமென்பது இன்று எல்லோருக்கும் தெரியும். தமிழ் தேசிய போர்வையை தூக்கி போர்த்துக்கொண்டு திரியும் யாரும், தமிழ் மக்கள் தனிநாடாக வேண்டுமென்று கூறுவதில்லை. இலங்கைக்குள் தமிழ் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படுத்துவது, நாட்டை விட்டு ஓடாமல் இந்த நாட்டில் வாழ்வதிலேயே தமிழ் தேசியம் தங்கியுள்ளது. தமிழ் தேசியம் என்ற போர்வையில் தேர்தல் வியாபாரம் நடத்துவதல்ல தமிழ் தேசியம்.

இப்போது போலித் தமிழ் தேசியம் பேசுபவர்கள் இந்த சமூகத்தை சொறிபிடித்ததாக மாற்றி வைத்திருக்கிறார்கள். தேசியம் என்பது முற்போக்கானது. அதையே நாம் செய்கிறோம்.

ரணில் விக்கிரமசிங்க தேசியத்தை காத்தவர் போலவும், கோத்தபாய தமிழ் தேசியத்தை அழித்தவர் போலவும் சித்திரத்தை ஏற்படுத்துவதில் எந்த பலனுமில்லை. அது வெறும் ஐ.தே.க பச்சை அரசியலேயாகும்.

நாட்டில் அடுத்த ஜனாதிபதியாக வரப் போறவர் தனி சிங்கள வாக்குகளினால் மட்டும் வந்தால் அது தமிழ் மக்களை பாதிக்கும். எனவேதான் நாம் ஆதரவு கூடவுள்ள தரப்புக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளோம். தமிழ் மக்களின் ஆதரவு கோத்தபாயவுக்கு கிடைக்க வேண்டும்.

மஹிந்த ராஜபக்சவை கருத்தல் கொண்டுதான் எமது ஆதரவை தெரிவித்துள்ளோம். மஹிந்த கோத்தவை அறிவித்துள்ளார். வேட்பாளர் தொடர்பான பல வாதப்பிரதிவாதம், சட்ட விவகாரம் தொடர்பாக பல வாதப்பிரதிவாதங்கள் நடக்கின்றன. அவர் ஆட்சிக்கு வந்தால் மஹிந்த ராஜபக்சவிற்கு கட்டுப்பட்டுத்தான் நடப்பார்.

ராஜபக்சவின் ஆட்சியின் பொருளாதார அபிவிருத்தி பெருமளவில் நடக்கும். கடந்த ஐந்தாண்டில் அபிவிருத்தி பணிகள் நடக்கவில்லை. தேர்தல் நெருங்கியதும்தான் கம்பெரலிய என எதையோ செய்கிறார்கள்

வடக்கு கிழக்கு மாகாணங்களிற்கு தேவையான குறுகிய, சிறிய தொழிற்சாலைகள் தேவை, பட்டதாரிகளிற்கு வேலை தேவை, பல்லாயிரக்கணக்காணவர்கள் கணவர்களை இழந்து கஸ்ரமான நிலையில் உள்ளனர். அந்த பெண்கள் கௌரவமாகவும், வருமானம் பெறும் வகையிலும் இருக்க வேண்டும். குடிநீர், கல்வி தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். எமக்கு மஹிந்த ராஜபக்சவின் உறுதியான நம்பிக்கையாக இருக்கிறது. அவர் எமக்கு வாக்குறுதுி தந்துள்ளார். அதில் எமக்கு நம்பிக்கை உள்ளது. மாகாண அதிகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்திலும், எம்முடனும் பேசியிருக்கிறார். பொலிஸ் அதிகாரத்தை வழங்குவதாக சொல்லியுள்ளார். மகிந்த நம்பிக்கைக்குரிய ஒருவராக இருப்பார்.

நாம் மஹிந்த ராஜபகசவில்தான் நம்பிக்கை வைத்து செயற்படுகிறோம். அவர் தனக்கு பொருத்தமானவரை வேட்பாளராக்கியுள்ளார். நாம் மஹிந்த ராஜபக்சவுடனேயே பேசி செயற்படுவோம்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here