திமுத் காவிய சதம்… காலியில் இலங்கை மகத்தான வெற்றி!

காலி டெஸ்டில் நியூசிலாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மகத்தான வெற்றி பெற்றது இலங்கை.

திமுத் கருணாரத்னவின் காவிய சதத்துடன், இலங்கை இலக்கை விரட்டி அடித்தது. திமுத்தின் 9வது டெஸ்ட் சதம் இது. ஆனால் நீண்ட காலத்திற்கு நினைவில் கொள்ளப்படும் சதம் இதுவாகத்தான் இருக்கும். பிசிறற்ற இன்னிங்ஸ். அணித்தலைவராக பொறுப்பை தோளில் சுமந்து அணியை வெற்றிக்கு அருகில் அழைத்து சென்று ஆட்டமிழந்தார்.

அணித்தலைவரான பின்னர் திமுத் ஒரு முழுமையான சர்வதேச வீரராக பொறுப்புடன் ஆடி வருகிறார். அவரது ஆட்டத்தில்- குறிப்பாக டெஸ்டில்- காவியத்தனமான இன்னிங்ஸ்கள் வெளிப்படுகிறது. சமகால டெஸ்ட் வீரர்களில் தலைசிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துபவர்களில் ஒருவராக அவர் மாறி வருகிறார்.

நேற்றைய 4ம் நாள் முடிவில் 133ஃ0 என்ற நிலையில் ஆட்டத்தை இன்று ஆரம்பித்த இலங்கை, 4 விக்கெட் இழப்பிற்கு 268 ஓட்டங்கள் பெற்று முதல் செசனிலேயே வெற்றியை பெற்றது.

இன்று ஆட்டத்தை ஆரம்பித்த போது, திரிமன்னவை 64 ஓட்டங்களிற்கு இழந்தது. அப்போது அணியின் ஸ்கோர் 161. இதன்பின்3 விக்கெட்டை விரைவாக இழந்தது. குசல் மெண்டிஸ் 10, திமுத் 122, குசல் பெரேரா 23 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

மெண்டிஸ், பெரேராவின் ஆட்டமிழப்புக்கள் தேவையற்றவை. டெஸ்ட் முதிர்ச்சியின்மையை காட்டியது. வெற்றியை நெருங்கி விட்டோம் என்ற மிதப்பில் டி 20 பாணியில் ஆட முயன்று ஆட்டமிழந்தார்கள். வெற்றியிலக்கு அண்மித்தபடியால் இப்படியான ஆட்டமிழப்பு இலங்கையை பாதிக்கவில்லை. ஆனால் பெரிய இலக்கை விரட்டும்போது, முமுமையான டெஸ்ட் மனநிலை இல்லாத வீரர்களை வைத்திருப்பது ஆபத்தானது!

மத்யூஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 25 ஓட்டங்கள், டி சில்வா 8 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர்.

சௌதி, போல்ட், சோமர்விலே, பட்டேல் தலா ஒவ்வொரு விக்கெட்.

இலங்கை இன்று வெற்றி உறுதியென்ற நிலையில், காலையில் காலி அரங்கின் ஒரு நுழைவாயில் இலவசமாக திறந்து விடப்பட்டது.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here