விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய தம்பதியிடம் நகை, பணம் பறித்த 3 பேர் கைது


ஆண்டிப்பட்டி அருகே விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய தம்பதியிடம் இருந்து நகை, பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை பகுதியை சேர்ந்தவர் சிவன்பாண்டி (32). அவருடைய மனைவி கங்கம்மாள் (24). இவர்கள், தங்களது இல்ல விழாவையொட்டி உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக மோட்டார்சைக்கிளில் வைகை அணையில் இருந்து ஆண்டிப்பட்டிக்கு சென்றனர்.

வைகை அணையை அடுத்துள்ள சேடப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்ட அலுவலகம் அருகே மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த ஆட்டோ, சிவன்பாண்டியின் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் கணவன், மனைவி படுகாயமடைந்து உயிருக்கு போராடினர்.

அப்போது ஆட்டோவில் வந்த 3 பேர், கங்கம்மாளிடம் இருந்து 13 பவுன் நகை மற்றும் சிவன்பாண்டியிடம் இருந்து ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை பறித்து விட்டு ஆட்டோவில் ஏறி தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து வைகை அணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் ஆண்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணதெய்வேந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

விபத்து நடந்த நேரத்தில் அந்த பகுதியில் சென்ற ஆட்டோக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதற்காக அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. ஆண்டிப்பட்டியில் இருந்து வைகை அணை வழியாக பெரியகுளம் சென்ற ஆட்டோக்கள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்தனர்.அப்போது சந்தேகப்படும்படியாக சென்ற ஒரு ஆட்டோ குறித்து விசாரணை நடத்தினர். அந்த ஆட்டோவில் பயணம் செய்த பெரியகுளம் மூன்றாந்தல் பகுதியை சேர்ந்த முருகேசன் (21), முத்துப்பாண்டி(27), ஆட்டோ டிரைவர் ராமகிருஷ்ணன்(23) ஆகியோர் தம்பதியிடம் நகை, பணத்தை பறித்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 13 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here