கோட்டாபய ஜனாதிபதியானால் தமிழர்களிற்கு இருண்ட காலம்: எச்சரிக்கிறார் விக்னேஸ்வரன்!


பொதுஐன பெரமுனவின் ஐனாதிபதி வேட்பாளராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஐபக்சவை அவரது சகோதரரும் எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஐபக்ச ஏன் நியமித்தார் எனக் கேள்வியெழுப்பியிருக்கும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளருமான க.வி.விக்னேஸ்வரன், கோட்டாபய போன்றவர்கள் ஐனநாயக ரீதியாகச் சிந்திக்கக் கூடியவர்கள் அல்ல. அவர்கள் எப்போதும் வன்முறையைப் பாவிக்கக் கூடியவர்கள் என்பதால் அவரைப் போன்றவர்கள் வருவது தமிழ் மக்களுக்கு இருண்ட காலமாகவே மாறுவது நிச்சயம் என்றார்.

ஐனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோட்டபாய ராஐபக்சவை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

கோட்டாபய ராஜபக்சவிற்கு உண்மையான எந்தத் தமிழனும் வாக்களிக்க கூடாது. ஏனென்றால் போர்க்காலத்தின் இறுதிக் கால கட்டத்தில் நடந்ததைப் பார்த்தீர்களானால் வெள்ளைக் கொடி ஏந்திக் கொண்டு சரணடையசென்றவர்களே சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். அவ்வாறு சரணடையச் செல்லும் போது அங்கிருந்த படையினர் இவர்களை என்ன செய்வது என்று மேலிடத்தில் கேட்டிருக்கின்றனர்.

அதற்கு மேலிடத்தில் இருந்த அவர்கள் எல்லோரையும் சுட்டுத் தள்ளுமாறு செய்தி கிடைத்தது. இது யாரிடம் இருந்த வந்தது என்பது பற்றி எனக்கு கூற முடியாது. ஆனால் எனக்கு தெரிந்த அளவிலே ஆகக் கூடுதலான அதிகாரம் பெற்றிருந்த நபர் கோட்டபாய தான். ஆகவே அவர் கூறித் தான் இது நடந்திருக்க வேண்டும்.

அவ்வாறு வெள்ளைக் கொடி ஏந்தி சரணடைய வரும் மக்களை உடனே கொன்று குவியுங்கள் என்று சொல்லக் கூடிய ஒருவர் ஐனாதிபதியாக வந்தால் எங்களுக்கு என்னென்ன நடக்குமென்று நாம் யோசிக்க வேண்டும். வெள்ளை வான் எல்லாம் அவருடைய காலத்திலே நடந்தது. அதனால் என்ன நடந்தது என்பதும் அனைவருக்கும் தெரியும்.

இதனால் அவருக்கு எதிராக இரண்டு மூன்று வழக்குகளும் இருக்கின்றன. ஆகவே இவ்வாறு எல்லாம் இருக்கும் போது எதற்காக மகிந்த ராஐபக்ச அவரைப் போட்டியில் இருக்க விடுகின்றாரோ என்று தெரியவில்லை. ஆனால் அவர் வருவதால் தமிழ் மக்களுக்கு இருண்ட காலமாக மாறும் என்பது மட்டும் நிச்சயம்.
ஏனென்றால் அவரைப் போன்றவர்கள் இந்த இலங்கை சிங்கள பொளத்த நாடு என்கின்ற அந்த எண்ணத்தில் இருக்கின்ற நபர்கள் தான். அதனை வலியுறுத்துவதற்காக வன்முறையைப் பாவிக்கக் கூடியவர்கள அவர்கள். ஆகவே அவர்கள் ஐனநாயக ரீதியாக சிந்திக்க கூடியவர்கள் அல்ல. எனவே தான் கோத்தபாயவிற்கு ஆதரவை வழங்குவதாக நான் ஒரு நாளும் கூறவும் இல்லை. ஆதரவு தெரிவிக்கவும்;கூடாது என்பது தான் என்னுடைய நிலைப்பாடு ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here