விந்து விரைவாக வெளியேறுவதற்கான காரணம் என்ன?: டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள் 10


ஜி.பிரகாஷ் (32)
ஏழாலை

பெண்களிற்கும் பாலியல் பிரச்சனை இருப்பதாக கடந்த வாரங்களில் குறிப்பிட்டிருந்தீர்கள். நான் திருமணம் செய்து நான்கு வருடங்களாகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆனால், இப்பொழுது கொஞ்ச நாளாக என் மனைவி உறவில் ஆர்வம் காட்டுவதில்லை. இயன்றவரை தவிர்க்கவே விரும்புகிறார். பெண்களின் பாலியல் பிரச்சனைகளை எப்படி அடையாளம் காண்பது? அவற்றின் அறிகுறிகள் ஏதாவது உள்ளதா?

டாக்டர் ஞானப்பழம்: தம்பி… ஆண்களிற்கு பெண்கள் ஒத்துழைக்காததையெல்லாம் பாலியல் பிரச்சனையாக நீங்கள் புரிந்துகொள்ளக்கூடாது. உங்களிடம் ஒரேயொரு கேள்வி, எப்பொழுதாவது உங்கள் மனைவியிடம் தாம்பத்யம் குறித்து முழுமையாகப் பேசியிருக்கிறீர்களா?. தாம்பத்ய உறவில் முழு திருப்தி அடையும் எந்த ஆணாவது, தனது துணையின் திருப்தி பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டிருப்பாரா?

இல்லை. ஆண்களிற்கு “மூட்“ ஏற்படும்போது, பெண்கள் ஒத்துழைக்க வேண்டுமென நினைக்கிறார்கள். பெண்களிற்கும் பாலியல் உணர்விருக்கும் என்பதை புரிந்து கொள்வதில்லை. இதில்தான் நீங்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.

இனி, பெண்களின் பாலியல் பிரச்சனைகள் பற்றி சொல்கிறேன்.

அறிகுறிகள், வகைகள்

பாலியல் உணர்வு சுழற்சியின் (Sexual Response Cycle) அடிப்படையில்தான் பெண்களுக்கான பாலியல் பிரச்னைகளின் வகைகள் அமைகின்றன. இவற்றில் எந்த ஒரு நிலையை அடைய முடியாமல் போவதும், உறவில் திருப்தி ஏற்படுவதைத் தடுத்துவிடும். பாலியல் வாழ்க்கையில் திருப்தி ஏற்படாதநிலையில், உறவில் விரிசல் விழுவதற்குக்கூட வாய்ப்பிருக்கிறது.

பாலியல் உணர்வின்மை

தாம்பத்யத்தில் இருபாலருக்குமே பாலியல் உறவுக்கான நாட்டமும் ஆசையும் மிகவும் அவசியம். சமயங்களில் இருவருக்கும் இது இல்லாமல் போகலாம். பாலியல் உறவில் நாட்டமின்மை என்பது, பாலியல் உறவு சுழற்சி தொடங்குவதற்கு முன்னரே அதை நிறுத்திவிடும். இது சிலருக்குத் தற்காலிகமாகவும், சிலருக்கு நீண்ட நாள்களுக்கும் இருக்கும்.

எழுச்சித் தடை

ஆண்களைப்போலவே பெண்களுக்கும் எழுச்சி உண்டு. சில நேரங்களில் தாம்பத்ய உறவில் நாட்டமின்மை காரணமாக, அவர்கள் எழுச்சி அடைய முடியாமல் போகலாம். இல்லையென்றால், ஆணின் செயல்பாடு அவர்களை முழுதிருப்தி அடையச் செய்யாமல் போகலாம். இவையும் அவர்களின் தாம்பத்ய உறவு நாட்டத்தைக் குறைத்துவிடும்.

உறவின்போது வலி

சில பெண்களுக்கு உறவில் ஈடுபடும்போது வலி (Dyspareunia) ஏற்படலாம். முதன்முறை உறவுகொள்ளுதல், இலகுவற்ற தன்மை, மனத்தடை போன்ற பல காரணங்களால் அவர்களால் தாம்பத்யத்துக்கு ஒத்துழைக்க முடியாத சூழலில் இப்படி நிகழும். இதன் காரணமாகவும், பாலியல் உறவில் நாட்டமில்லாமல் போகலாம்.

காரணத்தைக் கண்டறிந்தால், மேற்கண்ட பிரச்னைகள் அனைத்தும் மிக எளிதாகச் சரிசெய்யக் கூடியவையே. வந்த பிறகு சரிசெய்வதைவிட, வரும்முன் காப்பது இன்னும் நல்லது.

தாம்பத்யத்தில் முழு திருப்தி அடையாமல் இருப்பது, தாம்பத்ய உறவில் ஆசைகொண்ட, உணர்ச்சிகள் எழுச்சியடையும் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தும். இது தொடர்ச்சியாக நிகழும்போது, உறவின் பரவசநிலையை (Orgasm) அடைய முடியாத காரணத்தால், ஒரு கட்டத்தில் அவர்களுக்குப் பாலியல் உறவுமீது நாட்டம் குறைந்துவிடும். இப்படிப்பட்ட பிரச்னைகளால் ஏறத்தாழ
7 சதவிகிதம் முதல் 10 சதவிகிதம்வரையிலான பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது. இந்தப் பெண்கள் பல ஆண்டுகளாகக் கணவனுடன் வாழும் குடும்பத்தலைவிகள் என்பது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது.

பி.நிவேதராஜ் (27)
செட்டிக்குளம்

எனக்கு திருமணமாகி ஒரு மாதம்தான் ஆகிறது. உடலுறவில் விரைவாக விந்து வெளியேறிவிடுகிறது. சில சமயங்களில் உறவை ஆரம்பிக்கும்போதே விந்து வெளியேறி விடுகிறது. மனைவி என்ன நினைப்பாரோ என்ற சங்கடம் இப்பொழுது, உறவு கொள்ளவே பயமான சூழலை ஏற்படுத்துகிறது. இதற்கு உடனடி பரிகாரம் ஏதுமுண்டா டாக்டர்?

டாக்டர் ஞானப்பழம்: தம்பி இந்தப்பிரச்சனை நீங்கள் பயப்படுவதை போல அரிதான… பயப்பிடும் விடயம் கிடையாது. செக்ஸின்போது விந்து சீக்கிரம் வெளியேறும் (Premature Ejaculation) பிரச்னை ஆண்களுக்குப் பரவலாக இருக்கத்தான் செய்கிறது. பொதுவாகவே, விந்து வெளியேறிய பிறகு பல ஆண்களுக்கு செக்ஸில் நாட்டம் இல்லாமல் போய்விடும். ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகே மீண்டும் அந்த உணர்வு தலைதூக்கும். இதன் காரணமாகப் பெண்களுக்கு இன்பம் கிடைக்காமலேயே போய்விடும். இப்படிப் பெண்களுக்குத் தொடர்ந்து செக்ஸில் ஏமாற்றம் ஏற்படும்போது, எனக்கு எதற்கு செக்ஸ்? என்று கணவன் அழைத்தாலும் ஈடுபட மாட்டார்கள்.

விந்து சீக்கிரத்தில் வெளியேறுவதற்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் காரணங்கள் இருக்கின்றன. பைமோசிஸ் (Phimosis) என்ற ஆணுறுப்பின் முன்புறத் தோலைப் பின்னோக்கித் தள்ள முடியாமல் இருப்பது; ஆணுறுப்பின் முன்புறத்தின் அடியில் இருக்கும் இணைப்புத்தோல் கூர்மையாக இருப்பது; சிறுநீர்ப்பாதையில் தொற்றுகள் இருப்பது; புராஸ்டேட் தொற்று; நரம்பு மண்டலங்களில் கோளாறு; நீரிழிவு நோய்; அதிக நாள்கள் இடைவெளிவிட்டு செக்ஸில் ஈடுபடுவது… இவையெல்லாம் முக்கியமான காரணங்கள்.

கணவன் – மனைவி இடையே சண்டை; மனக் கசப்பு; பெண்கள் மீதிருக்கும் வெறுப்பு மனநோய்; பதற்றம்; விந்து சீக்கிரமாக வந்துவிடுமோ என்ற பதற்ற மனநிலை போன்றவை மன ரீதியான காரணங்கள்.

செக்ஸ் வைத்துக்கொள்வதற்கு முன்னர், உணர்ச்சிகளைத் தூண்டும்விதமான விளையாட்டுகளில் ஈடுபடுவதை (Sex Foreplay) ஆண்கள் செய்வதில்லை, பலருக்குத் தெரிவதுமில்லை. ஃபோர்ப்ளேயில் ஈடுபட்டால் பெண்களின் உணர்ச்சிகள் தூண்டப்பட்டு, அவர்களுக்கு இன்பம் கிடைக்க வழி கிடைக்கும். ஆண்களுக்கு விந்து சீக்கிரத்தில் வெளியேறும் பிரச்னையும் குறைய வாய்ப்பிருக்கிறது.

உடல் பிரச்னைகளுக்கான சோதனைகளைச் செய்து, அதற்கான மாத்திரைகளை உட்கொள்ளலாம். மனரீதியான பிரச்னைகளுக்கு செக்ஸ் தெரபி (Sex Therapy), நடத்தை தெரபி (Behavioural Therapy) போன்ற சிகிச்சைகள் உதவுகின்றன. இந்தப் பிரச்னைக்காக மருந்துக்கடைகளில் கிடைக்கும் மாத்திரைகளை வாங்கி உட்கொண்டால் பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மருத்துவரின் பரிந்துரைப்படிதான் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.

முந்தைய பகுதி: டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள் 09

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here