அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இலங்கையர்கள் கைது!


மெக்சிக்கோவில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் 65 பேரை அந்த நாட்டு பொலிசார் கைது செய்துள்ளனர். இவர்கள் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் நாடுகளை சேர்ந்தவர்கள்.

கட்டாரிலிருந்து புறப்பட்ட இவர்கள் துருக்கிக்கு சென்று பின்னர் அங்கிருந்த பல நாடுகள் ஊடாக மெக்சிக்கோவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அங்கு அவர்களை பொறுப்பேற்ற மனிதக்கடத்தல்காரர்கள் இவர்களை அமெரிக்க எல்லைக்கு கொண்டு செல்வார்கள் என கூறியிருந்தனர். எனினும், அவர்களை ஏமாற்றி, நிராதராவாக கைவிட்டு கடத்தல்காரர்கள் தப்பித்துள்ளனர்.

கடலோர மாநிலமான வெராக்ரூஸில் ஒரு நெடுஞ்சாலையில் இவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். பல நாட்களாக உணவு நீரின்றி இருந்தனர்.

ஏப்ரல் 24 அன்று கட்டார் விமான நிலையத்திலிருந்து துருக்கிக்கும் பின்னர் கொலம்பியாவிற்கும் விமானத்தில் சென்றனர். பின்னர் அவர்கள் ஈக்வடார், பனாமா மற்றும் குவாத்தமாலா வழியாக மெக்ஸிகோ சென்றனர்.

மெக்ஸிகோவுக்கு வந்ததும், அவர்கள் கோட்ஸாகோல்கோஸ் நதி வழியாக நாட்டின் வடக்கு எல்லைக்கு படகு மூலம் பயணம் செய்தனர். அமெரிக்க எல்லைக்கு அவர்களை அழைத்து செல்வதாக கூறிய கடத்தல்காரர்கள் அவர்களை கைவிட்டு சென்றுள்ளனர்.

ஆற்றைக்கடந்து நெடுஞ்சாலையை கடந்து அமெரிக்க எல்லையை அடைவதே அவர்களின் நோக்கம். எனினும், அமெரிக்காவுடன் எல்லை கடக்கும் புகலிட கோரிக்கையாளர்களை தடுக்கும் உடன்பாட்டை செய்துள்ள மெக்சிக்கோ பாதுகாப்பு துறையினர் அந்த பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு துறையினர், அவர்களை கைது செய்து, அங்குள்ள அகதிகள் மையமொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விரைவில் சொந்த நாடுகளிற்கு அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here