10 விக்கெட் கைவசம்.. கையெட்டும் தூரத்தில் வெற்றி: காலி டெஸ்டில் இலங்கை கிடுக்குப்பிடி!


சொந்த மண்ணில் அசத்தலான ஒரு டெஸ்ட் வெற்றியை பெறும் அரிய தருணமொன்றை இலங்கை அணி அண்மித்துள்ளது. பத்து விக்கெட்டுக்கள் கைவசம் உள்ள நிலையில், இன்னும் 135 ஓட்டங்களே வெற்றிக்கு தேவை. நாளை ஆட்டத்தின் இறுதிநாள்.

நியூசிலாந்து நிர்ணயித்த 268 என்ற இலங்கை விரட்டி வரும் இலங்கை, இன்றைய நான்காம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 133 ஓட்டங்களை பெற்றுள்ளது.

நங்கூரமாக நின்று அணியை பாதுகாப்பான நிலைமைக்கு இட்டு சென்றனர் தொடக்க வீரர்கள் திமுத் கருணாரட்ன, லஹிரு திரிமன்ன. இருவரும் அரைச்சதமடித்துள்ளனர்.

கருணாரட்ன 71 (18 பந்துகள், 2 பௌண்டரிகள்), லஹிரு திரிமன்ன 57 (132 பந்து, 4 பௌண்டரி) ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர்.

நான்காவது இன்னிங்ஸில் இலங்கையின் தொடக்க ஜோடி பெற்ற அதிக ஓட்டம் இதுவாகும். முன்னதாக 2014 இல் டுபாயில் பாகிஸ்தானிற்கு எதிரான போட்டியில் கருணாரத்ன, குசல் சில்வா 124 ஓட்டங்களை பெற்றதே அதிக ஓட்டமாக இருந்தது.

நியூசிலாந்து முதல் இன்னிங்ஸ்249. இலங்கை 267 ஓட்டங்கள். நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்சில் 285 ஓட்டங்களிற்கு ஆட்டமிழந்தது. 98 ஓட்டங்களிற்கு 5 விக்கெட் இழந்தபோதும், பின்வரிசை வீரர்களின் சிறப்பான ஆட்டம் நியூசிலாந்தை கௌரவமான நிலைமைக்கு இட்டு சென்றது. வோல்ட்ரிங் 77, சௌதி 23, போல்ட் 26 ஓட்டங்களை பெற்றனர். 9வது விக்கெட்டிற்கு களமிறங்கிய சோமர்வெலதான் இலங்கைக்கு தண்ணீர் காட்டியவர். 118 பந்துகளில் 40 ஓட்டங்களை பெற்றார். இலங்கையில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் இந்த வரிசையில் நான்காவது இன்னிங்சில் அதிக பந்துகளை சந்தித்த இரண்டாவது வீரர் சோமர்வெல. இந்தியாவிற்கு எதிராக அஜந்த மென்டிஸ் 158 பந்துகளை சந்தித்துள்ளார்.

பந்து வீச்சில் எம்பல்தெனிய 99 ஓட்டங்களிற்கு 4, தனஞ்ஜெய டி சில்வா 25 ஓட்டங்களிற்கு 3 விக்கெட் கைப்பற்றினர்.

இதன்படி இலங்கைக்கு 268 என்ற வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வழக்கமான காலி ஆடுகளம் போல இல்லாமல், பந்துகள் மந்தமாக பிட்ச் ஆவதால் இலங்கை நாளை வெற்றிபெற பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அண்மைய தொடர் தோல்விகளால் துவண்டுள்ள இலங்கைக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்கும் நிலைமையை நான்காம் நாள் முடிவு ஏற்படுத்தியுள்ளது. எனினும், இலங்கையின் அண்மைய வழக்கப்படி, தொடக்க வீரர்கள் நன்றாக ஆடினால் பின்னால் வருபவர்கள் சொதப்பும் யதார்த்தமே அச்சுறுத்துவதாக உள்ளது.

நியூசிலாந்து 3வது இன்னிங்சில் 106 ஓவர்களை முகம் கொடுத்தது. காலி ஆடுகளத்தில் மூன்றாவது இன்னிங்சில் 100க்கும் அதிக ஓவர்களை சந்தித்த நான்காவது அணி நியூசிலாந்து. முன்னதாக அவுஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து ஆகியன மூன்றாவது இன்னிங்சில் 100 ஓவர்களிற்கும் அதிகமாக முகம் கொடுத்தது.

அதேபோல, இலங்கை ஆடுகளத்தில் அணியின் இரண்டாவது இன்னிங்சில் 5வது வரிசைக்கு கீழுள்ள வீரர்கள் அனைவரும் இரட்டை இலக்கத்தில் ஓட்டம் சேர்த்த இரண்டாவது சந்தர்ப்பம் இன்றைய நியூசிலாந்தின் இன்னிங்சே. முன்னதாக 1992இல் எஸ்.எஸ்.சி மைதானத்தில் அவுஸ்திரேலிய வீரர்கள் இப்படி ஓட்டம் சேர்த்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here