வருடத்தின் 320 நாட்கள் சூரிய வெளிச்சம் உத்தரவாதம்!- உலகம் சுற்றி பார்ப்போம் 02

சாள்ஸ் ஜே போர்மன்

சரித்திர ஏடுகளில் ரோடோஸ் கி.மு 1600 அளவில் முதன்முதலாகக் குறிப்பிடப்படுதாகச் சொல்லப்படுகிறது. அச்சமயத்திலேயே இத்தீவில் குடியிருந்த அடையாளங்கள் இருக்கின்றன.

அக்காலத்தில் கடற்கொள்ளைக்குப் பெயர்பெற்ற கிறீஸைச் சேர்ந்த காரிஸ் பிராந்தியத்து மக்கள்தான் முதல்முதலாக ரோடோஸுக்கு வந்து குடியேறியவர்கள் என்று கருதப்படுகிறது. அவர்களைத் தவிர எகிப்தைச் சேர்ந்த கடலோடிகளும் இப்பிரதேசத்தைக் கிட்டத்தட்ட அதேகாலத்தில் வந்தடைந்ததார்கள்.

கிரேக்க கடவுள்கள், உலகம் எப்படி ஆரம்பித்தது பற்றிய எத்தனையோ பூர்வீக கதைகள் இருக்கும்போது அந்த நாட்டின் ஒரு பாகமான ரோடோஸ் எப்படி படைக்கப்பட்டது என்பது பற்றிக்கதையொன்றும் இல்லாமலிருக்குமா?

அப்படியொரு கதையைப் பிறகு சொல்கிறேன்.

முதல் நாளன்று காலையில் ஆறுதலாக எழும்பி பிற்பகல்தான் வெளியே போவது என்று திட்டம். வழக்கமாக விடியற்காலையிலேயே எழுந்துவிடும் பழக்கமிருந்ததாலும், ரோடோஸின் சூரியத்தேவன் ஒளிக்கதிர்களை வீச ஆரம்பித்து விட்டதாலும் நாலைந்து மணித்தியாலங்களுக்கும் அதிகமாக என்னால் தூங்க முடியவில்லை.

மகன் கதிர் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான். எட்டு வயதுப் பிள்ளைக்கு நிறையத் தூக்கம் அவசியம். அவன் எழும்புவதற்குள் நாங்கள் வசிக்கும் இடத்தைச் சுற்றிவர என்னவெல்லாம் இருக்கிறதென்று தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டேன்.

என்னைத் தயார் செய்துகொண்டு மகனை அணைத்துக் காதுக்குள் நான் வெளியே போவது பற்றிச் சொல்ல, அவனும் கண்ணை மூடியபடியே தலையை ஆட்டினான். கதவைப் பூட்டிக்கொண்டு புறப்பட்டேன்.

மூன்றாம் மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தேன். விடுதி வரவேற்பறையில் இப்போது ஒரு பெண் இருந்தார். அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அவர் அங்கிருக்கும் வசதிகள் பற்றிச் சொன்னார். அவசியமான நாளாந்தப் பொருட்களை வாங்கிக்கொள்ள விடுதியின் முதல் மாடியிலேயே ஒரு கடை இருப்பதாகவும் அங்கே முடியும் என்றார்.  நகரம் சுமார் ஒன்றரை கி.மீதூரத்தில் இருப்பதாகவும் அங்கு போக வசதிகள் செய்து தரலாம் என்றும் தெரிவித்தார்.

ரோடோஸின் அனேகமான ஹோட்டல்களிலும் இதேபோன்று சகல வசதிகளும் கிடைக்கும். அங்கு வருபவர்களின் சௌகரியத்துக்காக தீவின் முக்கியமான இடங்களுக்கெல்லாம் போக விடுதிகளிலேயே ஒழுங்கு செய்து கொடுக்கிறார்கள். தவிர, இங்கே வரும் இளசுகள் பலரும் தங்களிஷ்டப்படி சுற்ற ஸ்கூட்டர்கள், சிறிய நான்கு சக்கர வண்டிகளும் வாடகைக்குக் கிடைக்கும். அதனால் தீவின் பிரபல கடற்கரை வீதிகளிலெல்லாம் கூட்டம் கூட்டமாக இப்படியான வண்டிகளில் போகிறவர்களைக் காணலாம்.

அது ஒரு திங்கள் கிழமை. வெயில் சூடாக இருந்தாலும் கண்ணுக்கெட்டிய தூரத்தில் தெரிந்த கடல் காற்று சுகமாக வீசியது. விடுதி வாசலில் நின்று முன்னால் தெரிந்த வீதிகளில் எதைத் தேர்ந்தெடுத்து நடக்கலாம் என்று ஒரு நிமிடம் யோசித்து நேராக முன்னாலிருந்த வீதியைத் தெரிந்தெடுத்து நடக்க ஆரம்பித்தேன். காரணம் அவ்வீதியில் அருகிலேயே ஒரு சிறிய கடை இருந்தது.

அப்போதுதான் திறக்கபட்டுக் கொண்டிருந்த கடையில் அத்தனை கூட்டமில்லை. காலை விற்பனைக்காக ரொட்டிகளை ஏற்றிக் கொண்டு வந்திருந்த ஒரு வான் முன்னால் நிற்க அதிலிருந்து விதம்விதமான ரொட்டிகளை உள்ளே இறக்கிக் கொண்டிருந்தார் ஒருவர்.

அதே வீதியில் சற்று நடந்து வலது பக்கமாகத் தெரிந்த இன்னொரு வீதியில் இறங்கி நடந்து விட்டு சுமார் அரை மணி நேரமானதும் மீண்டும் இன்னொரு வழியிலே திரும்பி தங்கியிருந்த விடுதியை நோக்கித் திரும்பி வந்தேன். இப்படியாக சில சாலைகளை அறிமுகப்படுத்திக் கொள்வது மூலம் புதியதாகத் தங்கியிருக்கும் இடத்தை ஓரளவு பரிச்சயம் செய்து கொள்வது என் பழக்கம்.

திரும்பி வரும்போது மீண்டும் அதேகடை வழியாக வந்து உள்ளே நுழைந்தேன். சில சிற்றுண்டிகளும் காலையில் சாப்பிடுவதற்கான உள்ளே சீஸ், மரக்கறி போன்றவகள் உள்ளடக்கிய பணிசும் வாங்கிக் கொண்டேன். எவ்ரோ நாணயம்தான் அங்கே பாவிக்கப்படுகிறது. பழக்கமில்லாத நாணயம் என்பதால் கையிலிருந்த நோட்டைக் கொடுத்து மிச்சமாகக் கிடைத்த சில்லறையை வாங்கி அவை என்னென்ன என்று கவனித்துக் கொண்டேன்.

திரும்ப விடுதி அறைக்கு வந்தபோதும் கதிர் நித்திரையாகவே இருந்தான். கீழே இருக்கும் உணவு விடுதிக்குப் போய்க் கோப்பியை எனக்காக எடுத்துக் கொண்டு வந்து அறை பல்கனியில் இருந்து ரோடோஸ் பற்றிய ஒரு சுற்றுலாப் புத்தகத்தை வாசித்தபடி காலைச் சாப்பாட்டை முடித்துக் கொண்டேன்.

திடீரென்று குதித்துக் கொண்டு ஓடிவந்தான் கதிர். “எப்போது நீச்சல்குளத்துக்குப் போவோம்?” என்பது அவனது முதலாவது கேள்வி. நாங்கள் தங்கும் விடுதியிலே நீச்சல்குளம் இருக்கிறது என்பதை முன்பே சொல்லியிருந்ததால் ஒவ்வொரு நாளும் அதில் குளிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் வந்திருந்தான் அவன்.

“முதலில் காலைக் கடன்களையெல்லாம் முடித்துக் கொண்டு, வந்து சாப்பிடு. அதன் பின்பு போய்க் குளிப்போம். வெயில் ஏறி நீச்சல்குளம் முழுவதும் வெயிலாக முதல் போவோம் வா!” என்றேன். சந்தோசக் குதியலுடன் ஓடிப் போனான் அவன்.

அன்றைய திட்டத்தின்படி நீச்சல்குளத்தில் ஆசைக்கு நீச்சலடித்து விட்டு பிற்பகல் வரை ஓய்வெடுத்துவிட்டு வெயில் வெம்மை குறையும் நேரமாக நகருக்குப் போகப் புறப்பட்டோம். அப்போது சுமார் நான்கு மணியாகி விட்டது.

முதல்தரம் நகருக்குப் போகும்போது வழியிலிருப்பவைகளையும் பார்த்துக்கொண்டு போவோம் என்ற எண்ணத்துடன் நடந்தே போனோம். வழியிலே அழகான பூந்தோட்டங்களுடன் கூடிய வீடுகள், ஓரிரு சிறுவர் விளையாட்டிடங்கள், கடைகள் இருந்தன. வீதிகள் விசாலமானவையாக இல்லை. நாங்கள் நடந்த வழியாலேயே பேருந்துகளும் போனதைக் கவனித்தோம். அவைகள் எங்கிருந்து எவ்வழியாகப் போகின்றன, எங்கள் விடுதிக்கருகில் ஏதாவது பேருந்து நிறுத்தம் இருக்கிறதா என்றெல்லாம் தெரிந்து  கொண்டால் ரோடோஸைச் சுற்ற இலகுவாக இருக்கும் என்று எங்களுக்குள் யோசித்துக் கொண்டோம்.

நகரத்தை நெருங்கும்போது பாரிய விருட்சங்கள் இரண்டு பக்கங்களிலும் அடர்ந்திருந்தன. அவற்றினூடாக அகலமில்லாத ஒரு சாலையினூடாகவே நகருக்குள் நுழைந்தோம். உயரமான மூன்று வில் வளைவுகள் எங்களை வரவேற்றன.

வலது பக்கமாகத் தெரிந்தது புராதன ரோடோஸ் என்றழைக்கப்படும் கோட்டை நகரம். இடது பக்கமாக நகரின் நவீனகாலக் கட்டடங்கள் இருந்தன. இன்னொரு வீதி கடற்கரைக்குப் போகும் வழியென்று அடையாளமிடப்பட்டிருந்தது.

இத்தீவின் தலைநகரமான இந்த நகரம் கடற்கரைக் குளியல், பொழுதுபோக்கு, கொள்வனவுச் சந்தை, சரித்திரம் போன்ற எல்லாவற்றையும் கொண்ட கலவை. சுமார் 80 000 பேர் வாழும் இந்த நகரில் நிச்சயமாக ஓரிரு பத்தாயிரம் சர்வதேசச் சுற்றுலாப் பயணிகளை எப்போதும் காணலாம்.

சுற்றுலாக்களின் போது நாங்கள் காலைச் சாப்பாட்டின் பின்பு மாலையில்தான் எங்கள் இரண்டாவதும் கடைசியானதுமான உணவு நேரம். இடையில் பசித்தால் ஏதாவது சிற்றுண்டியை மட்டும் சாப்பிடுவோம். அவ் வழக்கம் எங்களை நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க உதவுகிறது.

நகருக்குள் சுற்ற முன் பசியைத் தீர்த்துக்கொள்ள ஒரு உணவகத்தைத் தேடித் தெரிந்தெடுத்துக் கொண்டோம். எங்கள் பசியை ஆற்றிக்கொள்ள முன்பு ரோடோஸின் கதையின் மிச்சம்………

கிரேக்க பூர்வீக நம்பிக்கைகளில் பனிரெண்டு முக்கிய கடவுள்கள். அவர்களில் ஒருவர் ஸியஸ், சொர்க்கத்தின் தலைவன், மற்றக் கடவுள்களெல்லாவருக்கும் அதிபர்.

எல்லாரும் சேர்ந்து தாங்கள் படைத்த உலகத்தைப் பங்குபோட்டுக் கொண்டார்கள் கடவுள்கள். ஆனால், இறுதியில்தான் தெரியவந்தது அவர்கள் ஹீலியோஸுக்காக ஒரு பாகத்தைப் பிரித்துக் கொடுக்க மறந்துவிட்ட விடயம்.

எனவே அவர்களெல்லாரும் சேர்ந்து நீருக்குள்ளிருந்து முதலில் வெளியே வருகின்ற நிலப்பகுதியை ஹீலியோஸுக்குக் கொடுப்பதென்று முடிவு செய்தார்கள். அதன்படியே நீருக்குள்ளிருந்து தலைகாட்டிய தீவான ரோடோஸ், சூரியத்தேவன் ஹீலியோஸுக்குக் கொடுக்கப்பட்டது.

அதனால்தான் ரோடோஸ் வருடத்தின் பெரும்பகுதி – சுமார் 320 நாட்கள் – சூரிய வெளிச்சத்துடன் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறது.

[தொடரும்]

 

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here