258 ரன்களுக்குச் சுருண்ட இங்கிலாந்து; பொறி பறக்கவிட்ட அவுஸ்திரேலிய வேகங்கள்!

லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் ரொஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார் அவுஸ்திரேலிய கப்டன் டிம் பெய்ன், அதற்கான பலன் கிடைத்தது. இங்கிலாந்து அணி 2ம் நாள் ஆட்டத்தில் 258 ரன்களுக்குச் சுருண்டது. அவுஸ்திரேலியா டேவிட் வோர்னர் (3) விக்கெட்டை பிராடிடம் இழந்து 30/1 என்று 2ம் நாள் ஆட்டத்தை முடித்தது.

அவுஸ்திரேலியா டெஸ்ட் அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்ட ஜோஷ் ஹேசில்வுட் முதல் ஸ்பெல்லை பிரமாதமாக வீசி 58 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் பாட் கமின்ஸ் 61 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் நதன் லயன் 68 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்ற இங்கிலாந்து 258 ரன்களுக்குச் சுருண்டது.

முதலில் ஆட அழைத்தது பிரமாதமான முடிவாக அமைய இங்கிலாந்து அணி 138/6 என்று சரிந்தது, பிறகு பேர்ஸ்டோ, வோக்ஸ் ஆகியோர் ஸ்கோரை 250 ரன்களைக் கடக்க உதவி செய்தனர்.

தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸ் அரைசதம் எடுத்தாலும் அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களின் தொடர் பவுன்சர் ‘குண்டு’வீச்சுத் தாக்குதலில் ஏகப்பட்ட அடி வாங்கினார். கிறிஸ் வோக்ஸ் (32) ஹெல்மெட்டில் வாங்கினார்.

ஹெசில்வுட் பந்துகள் குட் லெந்திலிருந்து எழும்பி விக்கெட் கீப்பர் தன் கண்களுக்கு சற்று கீழே பிடிக்குமாறு வந்தன. ஜேசன் ரோயை ஷோர்ட் ஒஃப் லெந்த் பந்தை ஆட வைத்து டக்கில் வீழ்த்தினார், ரோய் தன் உடலுக்குத் தள்ளி மட்டையால் பந்தை இடித்தார் இதில் எட்ஜ் ஆகி பெய்னிடம் கட்ச் ஆனது. ஜோ ரூட் இறங்கி 14 ரன்களில் 3 பவுண்டரிகள் அடித்தார், ஆனால் நீடிக்க முடியாமல் ஹேசில்வுட் இன்ஸ்விங்கரை காலில் வாங்கி வெளியேறினார். 26/2 என்ற நிலையில் ரோரி பர்ன்ஸுடன் ஜோ டென்லி இணைந்தார். இருவரும் சேர்ந்து போராடி ஸ்கோரை 92 ரன்களுக்குக் கொண்டு சென்றனர்.

பிட்சில் பெரிய அரக்கத்தனம் எதுவும் இல்லை என்பது டென்லி, பர்ன்ஸ் ஆட்டத்தில் தெரிந்தாலும் 16ல் பர்ன்ஸுக்கு கவாஜா கல்லியில் கட்ச் ஒன்றை விட்டார். அதிர்ஷ்டம் கெட்ட பந்துவீச்சாளர் சிடில். டென்லி ஒருமுறை லயன் பந்தில் எல்.பிஆவதிலிருந்து ரிவியூவில் தப்பினார்.

உணவு இடைவேளைக்குப் பிறகு ஜோ டென்லி 30 ரன்களுக்கு ஹேசில்வுட் பந்தில் பெய்னிடம் கட்ச் ஆனார், இது அருமையான லேட் அவுட் ஸ்விங்கர் ஆகும். 47ல் இருக்கும் போது பர்ன்சுக்கு மீண்டும் பீட்டர் சிடில் பந்தில் பெய்ன் இடது புறம் ஒரு கை கட்சை விட்டார். 119பந்துகளில் போராடி உடலில் விழுப்புண்களுடன் அரைசதம் எடுத்த பர்ன்ஸ், கமின்ஸ் பந்தில் ஷோர்ட் லெக்கில் பேங்கிராப்டின் அதிர்ச்சிக் கட்சுக்கு வெளியேறினார்.

ஜோஸ் பட்லர் (12), பென் ஸ்டோக்ஸ் (13) ஆகியோர் விரைவில் வெளியேறினர், பட்லர், சிடில் பந்தில் கட்ச் ஆக, ஸ்டோக்ஸ் தேவையில்லாமல் ஒரு ஸ்வீப் ஷொட்டை ஆடி எல்.பி. ஆகி லயன் பந்தில் வெளியேறினார்.

பிறகு பேர்ஸ்டோ (52; 7 பவுண்டரிகள்) , கிறிஸ் வோக்ஸ் (32; 3 பவுண்டரி 1 சிக்ஸ்) இணைந்து ஸ்கோரை தேநீர் இடைவேளை தருணத்தில் 200 ரன்களுக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அதன் பிறகு அவுஸ்திரேலியா மீண்டும் பவுன்சர் உத்திகளுக்கு மாறியது. வோக்ஸ், கமின்சின் ஷோர்ட் பிட்ச் பந்தை கிளவ்வில் தொட்டு விக்கெட் கீப்பர் கட்ச் எடுக்க வெளியேறினார். பிறகு இன்னொரு ஷோர்ட் பிட்ச் பந்துக்கு கமின்ஸ் ஜோப்ரா ஆர்ச்சரையும் வெளியேற்றினார். ஸ்டூவர் பிராட், லயன் பந்தில் போல்ட் ஆனார். கடைசியாக பேர்ஸ்டோ, லயன் பந்தில் 52 ரன்களுக்கு ஆட்டமிழந்த கையோடு இங்கிலாந்து கதை 258 ரன்களுக்கு முடிந்தது.

அவுஸ்திரேலியா கடினமான சூழ்நிலையில் விளக்கொளியில் ஆட நேரிட்டது, இதில் வோர்னரின் உத்தி ரீதியான பலவீனத்தைப் பயன்படுத்தி சங்கக்காரா கூறியது போல் பிராட் வீசி போல்ட் செய்தார். இதன் மூலம் தொடர்ச்சியாக இந்தத் தொடரில் 3வது முறையாக பிராடிடம் அவுட் ஆனார் வோர்னர். ஏற்கெனவே ஆர்ச்சர் ஓவரில் இதே போல் அவர் பந்தைத் தொட்டார். ஆனால் இங்கிலாந்து அப்பீல் செய்யவில்லை.

ஜோப்ரா ஆர்ச்சரும் பிராடும் தீப்பொறி பறக்க வீசினர். பேங்கிராப்ட், பிராட், கவாஜா ஆகியோர் திணறினர். ஆட்ட முடிவில் 30/1 என்ற நிலையில் கவாஜா 18 ரன்களுடனும் பேங்கிராப்ட் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here