
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் விபத்து சிகிச்சைப் பிரிவிற்கான கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இதற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
தேர்தல் பிரச்சாரமாகவே இந்த நிகழ்வு நடந்து முடிந்தது. வடக்கு முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தை நீங்கள் எல்லோரும் சேர்ந்து முதலமைச்சராக்க வேண்டும் என ராஜித இதன்போது வேண்டுகோள் விடுத்தார்.
அவரது உரை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. சத்தியலிங்கத்தை முதலமைச்சராக்க வேண்டுமென ராஜித குறிப்பிட்டதை, மொழிபெயர்த்த போதும், மருத்துவத்துறை தொடர்புடையவர்களின் அந்த கூட்டத்தில் ஆழ்ந்த நிசப்தம் நிலவியது.
வடக்கு முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கமும், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவும் நெருக்கமான நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சத்தியலிங்கம் வடக்கு சுகாதார அமைச்சராக பதவியில் இருந்தபோது, வவுனியா பொது வைத்தியசாலை பதில் பணிப்பாளரின் நிர்வாக மோசடிகள் குறித்த குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு, அதற்கான ஆதாரங்களும் வெளியாகியிருந்தன. எனினும், அப்போது அவர் பாதுகாக்கப்பட்டிருந்தார். அப்போதைய வடக்கு சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆகியோர் மீது மருத்துவத்துறையில் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
