இந்தியாவிற்கு ராஜதந்திர பின்னடைவு: காஷ்மீர் விவகாரத்தை 40 ஆண்டுகளின் பின் விவாதிக்கிறது ஐ.நா!


40 வருடங்களுக்குப் பிறகு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இன்று இரகசிய கூட்டம் நடக்கிறது. இலங்கை நேரப்படி இரவு 7.30 மணியளவில் இந்த கூட்டம் நடக்கிறது. காஷ்மீர் தொடர்பாக ஐ.நா இரகசிய கூட்டத்தை கூட்டியது, இந்தியாவிற்கு இராஜதந்திர ரீதியில் நெருக்கடியான விவகாரமாக நோக்கப்படுகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு உரிமைகள் ரத்து செய்யப்பட்டு, அரசியலமைப்பின் 370வது பிரிவை இந்திய அரசு திரும்பப் பெற்றது. மாநிலத்தை இரண்டாகப் பிரித்து லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என யூனியன் பிரதேசங்களாக மாற்றியது.

அத்துடன் கடந்த 4ம் திகதியிலிருந்து இந்தியப் பாதுகாப்புபடையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் கட்சித்தலைவர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட வெளியுலக தொடர்புகள் துண்டிக்கப்பட்டு, மிகப்பெரிய சிறைச்சாலையாக காஷ்மீர் மாற்றப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட அறிவிப்புக்குப் பின் அம்மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் காஷ்மீருக்கு இந்தியா அளித்துள்ள சிறப்பு அங்கீகாரத்தை ரத்து செய்யுமாறு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு பாகிஸ்தான் கடிதம் எழுதி இருந்தது. சீனாவும் இது தொடர்பாக ரகசிய ஆலோசனை நடத்த ஐ.நாவை கேட்டுக் கொண்டது.

இதனைத் தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.

சுமார் 40 வருடங்களுக்குப் பிறகு, காஷ்மீர் தொடர்பாக முக்கிய ஆலோசனை கூட்டம் இன்று ஐ . நா. பாதுகாப்புச் சபையில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் மக்மூத் குரேஷி கூறும்போது, “இது இரு நாடுகளுக்கிடையேயான நிலம் தொடர்பான பிரச்சனை அல்ல. இது மனிநேய பிரச்சினை என்பதை உலக நாடுகள் உணர வேண்டும்.

40 வருடங்களுக்குப் பிறகு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் காஷ்மீர் குறித்து ஆலோசிக்க இருப்பது சாதனையாகும் ” என்று தெரிவித்துள்ளார்.

ஐ. நாவுக்கான பாகிஸ்தான் பிரதிநிதி லோதி கூறும்போது, ”ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை நடத்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் நிலையை கருத்தில் கொண்டு ஐ. நா. பொதுச் செயலாளர் ஆண்டோனியோ குத்ரெயிஸ் தனது குரலை வெளிப்படுத்துவார் என்று நம்புகிறோம்” என்றார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் 15 பேர் கொண்ட குழு இடப்பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஐ. நா.சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளில் சீனா மட்டும் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கும் என்றும் மிதமுள்ள இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சு வார்த்தை மூலம் காஷ்மீர் விவகாரத்தை தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here