
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கழிவகற்றல் பிரச்சினைக்கு நீதிமன்ற உத்தரவின் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கையெடுப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று நீதிமன்றம் இது குறித்த தீர்ப்பை அறிவிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கழிவகற்றலில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவு தவிர்ந்த அனைத்து பிரிவுகளும் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுவரும் நிலையில், இந்த விவகாரம் குறித்த உயர்மட்ட கலந்துரையாடல் நேற்று மாலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில், மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வியாழேந்திரன், சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கலாராணி, வைத்திய அதிகாரிகள், செங்கலடி பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரிகள், செங்கலடி பிரதேச செயலாளர், செங்கலடி பிரதேச சபை தவிசாளர், செங்கலடி பிரதேச செயலக பிரிவு கிராம சேவை உத்தியோகத்தர்கள், கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர், மாவட்ட செயலக சுற்று சூழல் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நேற்று முன்தினம் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேப்பவெட்டுவான் பகுதியில் போதனா வைத்தியசாலையின் கழிவுகளை புதைப்பதற்கு நடவடிக்கைகள் எடுத்தபோதிலும் அப்பகுதி மக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக புதைக்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து கழிவுகளை ஏற்றிச்சென்ற ஆறு வாகனங்கள் மீண்டும் மட்டக்களப்புக்கு திரும்பிய நிலையில் அவற்றினை மீண்டும் திராய்மடுவில் களஞ்சியப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கையும் பிரதேச மக்களினால் எதிர்க்கப்பட்டதை தொடர்ந்து கழிவு வாகனங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக கொண்டுவரப்பட்டு நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
வேப்பவெட்டுவான் பகுதியில் குப்பை கொட்டுமிடத்தை யார் தீர்மானித்தது என கூட்டத்தில் கேட்கப்பட்டபோது, மாவட்டத்தின் எம்.பிக்களிற்கு இந்த விடயம் தெரியவில்லை. மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலும் கலந்துரையாடப்பட்டிருக்கவில்லை. வைத்தியசாலை நிர்வாகம் அவசரகதியில் கழிவுகளை கொட்ட முனைந்தது வெளிச்சத்திற்கு வந்தது. கழிவு முகாமைத்துவத்திலும் குறைபாடுகள் இருந்தது குறிப்பிடப்பட்டது. முழுமையாக கழிவுகளை முகாமைத்துவம் செய்யும் பொறிமுறையொன்றை கண்டடைய வேண்டுமென வைத்தியசாலை நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டது.
இதேவேளை, கழிவுகளை புதைப்பதற்கு அனுமதி வழங்குமாறு கோரி கரடியனாறு பொலிஸ் ஊடாக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நேற்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. எனினும், கழிவகற்றல் தொடர்பாக வழங்கப்பட்ட ஆவணங்களில் நீதிமன்றம் திருப்தியடையாத நிலையில், மேலதிக ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்டு, இன்று வரையும் வழக்கை ஒத்தி வைத்தது.
