பெரும்பான்மை பலமிருந்தால் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவேன்; கூட்டமைப்பின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டுள்ளேன்: யாழில் ரணில் அதிரடி அறிவிப்பு!


புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறோம். ஏனைய இனங்கள் அனுபவிக்கும் சகலவிதமாக அரசியல் உரித்துக்களையும் பெற்று, தமிழர்கள் சுயமரியாதையுடனும். சுய கௌரவத்துடனும் வாழ வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. புதிய அரசியலமைப்பின் மூலம் அந்த நிலைமையை உருவாக்குவோம் என தெரிவித்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

யாழ் குருநகரில் மீன்பிடி துறைமுகத்திற்கான அபிவிருத்தி பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய எம்.ஏ.சுமந்திரன், தமிழ் மக்களின் பிரச்சனை தொடர்பாக ரணில் விக்கிரமசிங்கவின் நிலைப்பாட்டை கட்சி தலைவராக அறிவிக்கும்படி கோரியிருந்தார். இதற்கு பதிலளித்த போதே, மேற்படி கருத்தை தெரிவித்தார்.

“இனப்பிரச்சனைக்கு தீர்வாக அரசியலமைப்பு மாற்றத்தை ஏற்படுத்துவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அரசியலமைப்பு உருவாக்கத்திற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்மொழிவுகள் அனைத்தையும் நாங்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். வழிநடத்தல் குழுவில் நானும் அங்கத்தவராக இருக்கிறேன். தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்மொழிவுகள் எல்லாம் எனக்கு தெரியும்.

அவற்றில் சில விடயங்கள் பேசித் தீர்க்கப்பட வேண்டியவை. அவற்றை பேசித் தீர்ப்போம்.

தமிழர்கள் சுய மரியாதையுடனும், சுய கௌரவத்துடனும் வாழ வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பு. புதிய அரசியலமைப்பின் மூலம் அதனை ஏற்படுத்தலாம். ஆனால், அதனை ஏற்படுத்துவதில் எமக்குள்ள ஒரேயொரு பிரச்சனை,  நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாததுதான். அதை ஏற்படுத்தினால், உடனடியாக புதிய அரசியலமைப்பை ஏற்படுத்தலாம்.

இந்த விவகாரத்துடன் தொடர்புபட்ட இன்னொரு பிரச்சனை ஜனாதிபதி முறைமை. அதை ஒழிப்பதில் மற்ற அனைத்து கட்சிகளிற்கும் சம்மதமுண்டு. ஆனால் சுதந்திரக்கட்சிக்கும், பெரமுனவிற்கும் அதில் உடன்பாடில்லை.

ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்தால் தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும். ஏனெனில், நிலையான நாடாளுமன்றம் தேவை. இந்த நடவடிக்கைகளின் மூவம், அதிகார பரவலாக்கலை ஏற்படுத்தலாம்.

நாம் எதிர்பார்க்கும் அதிகார பரவலாக்கலில் அரசாங்கம் 3 அதிகார படிநிலைகளை கொண்டதாக அமையும். மத்திய அரசு, மாகாண அரசு, உள்ளூராட்சி அமைப்பு. உள்ளூராட்சி அமைப்புக்களை பலப்படுத்தி, அதிக அதிகாரத்தை வழங்குவதன் மூலம் மக்கள் பலமடைவார்கள். உங்கள் அன்றாட நடவடிக்கைகளை நீங்களே தீர்மானிக்கும் விதமாக உள்ளூர் அதிகாரசபை பலப்படுத்தப்படும்.

மாவட்டரீதியாக சிறுபான்மையினராக உள்ளவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். வடக்கு கிழக்கிற்கு வெளியில் வாழும் தமிழர்களினதும், வடக்கு கிழக்கில் வாழும் சிங்களவர்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கேற்ற விதத்தில் எமது அதிகார பரவலாக்கம் அமையும்.

எமது அரசாங்கத்தில் தமிழ் மொழியை எல்லா அமைச்சிலும், அதிகார மட்டத்திலும் நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறோம். எனினும், சில குறைபாடுகள் உள்ளன. முக்கியமாக மொழிபெயர்ப்பு பிரச்சனை. தமிழில் இருந்து சிங்களத்திற்கும், சிங்களத்தில் இருந்து தமிழுக்கும் மொழிபெயர்ப்புக்கள் செய்யப்பட வேண்டும் என்றார்.

பிரதமர் தனது உரையை ஆங்கிலத்திலேயே நிகழ்த்தினார்.

ஆங்கிலத்தில் உரை நிகழ்த்திய பின்னர், இந்த விடயங்களை சிங்களத்திலும் மொழிபெயர்த்து தெரிவித்தார். ஆங்கிலத்தில் மட்டும் இதனை தெரிவித்தால், சிங்கள் ஊடகங்கள், ரணில் விக்கிரமசிங்க தனிநாட்டை வழங்க வாக்குறுதி வழங்கி விட்டார் என செய்தி வெளியிடுவார்கள் என தெரிவித்தே, சிங்களத்தில் உரையாற்றினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here