தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஒரு தரப்பாக நின்று தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும்

வருகின்ற ஐனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் பேரம் பேசுகின்ற நிலையில் ஒரு தரப்பாக நின்று தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் அமைப்பின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பாளர் திருமதி . யோகராசா கனகரஞ்சினி

நேற்று(14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

யுத்தம் முடிவுற்று பத்தாண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் இன்று வருவார்கள், நாளை வருவார்கள் என்ற எதிர்பார்ப்போடு நாம் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றோம். இந்த போராட்டத்தின் மூலம் பன்னாட்டு தலைவர்கள், அதிகாரிகள் உட்பட்ட பலரைச் சந்தித்திருக்கின்றோம்.ஜனாதிபதியைக் கூட நாம் பல தடவைகள் சந்தித்து எமக்கான நீதியினைக் கேட்டிருந்தோம். இதுவரையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

நல்லாட்சி அரசாங்கத்தின் ஐந்து வருடகால ஆட்சி முடிவுக்கு வருகின்ற இந்த தருவாயில், ஜனாதிபதித் தேர்தலிலே களமிறங்குவதற்கு தமிழ் மக்கள் மீது கொடூர யுத்தத்தை அரங்கேற்றியவர்கள் இறுதி யுத்தத்தை நாம் முடிவுக்கு கொண்டுவந்துவிட்டோம் என வெற்றிவிழாக் கொண்டாடியவர்கள் இன்று ஜனாதிபதித் தேர்தல் களத்தில் இறங்கியிருக்கின்றார்கள்.

கடந்த கால மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சியும் சரி, நல்லாட்சியும் சரி தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் எந்த அக்கறையும் செலுத்தவில்லை. காலங்கள் மட்டும் கடந்து செல்கிறது. ஐந்தாண்டுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் மாத்திரமே இடம்பெற்று வருகிறது.

இந்த நிலையில் பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் மீண்டும் ஜனாதிபதியாக தேர்தலில் களமிறங்குவதற்கு முனைந்திருக்கின்றார். இறுதி யுத்தத்தக் காலத்தில் அவர்களிடம் எமது உறவுகளைக் கையளித்தோம். ஆனால், இன்றுவரை அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.

ஐனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றவர்கள் தேர்தலுக்கு முன் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட எங்களது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது. அவர்களை எங்கே மறைத்து வைத்திருக்கின்றார்கள். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன தீர்வு போன்ற விடயங்களுக்கு பதிலளிக்க வேண்டும்

காணாமல் ஆக்கப்பட்டவர்களிள் பிரச்சினைக்கு தீர்வு உள்ளிட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக் கூடிய வகையில் இந்த ஐனாதிபதி தேர்தலை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஒரு தரப்பாக நின்று பேரம் பேச வேண்டும். என இந்த இடத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பாக கோரிக்கை விடுகின்றேன். எனத் தெரிவித்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here