கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் முகாம் அமைந்திருந்த 23 ஏக்கரை விடுவித்தது இராணுவம்!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகப்பிரிவுக்கு உட்பட்ட கிருஸ்ணபுரம் பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த 23 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

இன்று (15) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் காணிகளை விடுவிப்பதற்கான ஆவணங்களை, மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய கையளித்தார்.

காணி விடுவிப்பு தொடர்பாக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், படையினர் வசமுள்ள ஏனைய காணிகளையும் விடுவிப்பதற்காக முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்தார்.

இதேவேளை குறித்த காணி விடுவிப்பு தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், விடுவிக்கப்பட்ட காணிகள் தொடர்பாக மக்கள் தமது ஆவணங்களை சமர்ப்பித்துள்ளதாகவும் குறித்த ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு கரைச்சி பிரதேச செயலகம் ஊடாக கையளிப்பதற்கான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இந்த காணியில் விடுதலைப்புலிகள் தமது அமைப்பிலிருந்து காயமடைந்தவர்களிற்கு கல்வி மற்றும் தொழில்பயிற்சி வழங்குவதற்காக உருவாக்கிய நவம் அறிவுக்கூடம் இயங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here