
ஹட்டன் நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய ரக லொறி ஒன்றை கொள்ளையிட்ட சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். லொறியும் அவரிடமிருந்து மீட்கப்பட்டது.
ஹட்டன் பொலிஸ் நிலைய குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹட்டன் மல்லியப்பு பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியை திருடி சென்று மறைவிடம் ஒன்றில் மறைத்து வைத்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (14) காலை 6.45 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.
முன்னதாப, பேக்கரி உற்பத்தி பொருட்களை விநியோகிக்கும் சிறிய ரக லொறியிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் கதவினை திறக்க முயற்சித்தார். எனினும், அது தோல்வி அடைந்ததால் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் கதவினை திறந்து லொறியினை இயக்க முயற்சித்துள்ளார். எனினும், லொறி இயங்கவில்லை.
சற்றும் மனம் தளராத திருடன், தானே தள்ளி இயக்கி ஹட்டன் ஸ்டெடன் தோட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் லொறியின் உரிமையாளரினால் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் படி உடனடியாக செயற்பட்ட ஹட்டன் பொலிஸ் நிலைய குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள், லொறி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவினை பயன்படுத்தி சந்தேகநபரை இனங் கண்டு கைது செய்துள்ளனர்.
பின்னர் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக லொறி மறைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தினை பொலிஸார் கண்டு பிடித்துள்ளனர்.
37 வயதுடைய சந்தேகநபர் ஹட்டன் ரொதெஸ் தோட்டத்தை சேர்ந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
