ஒரே நாடு ஒரே அரசியல் சட்டம்: மோடி

370வது சட்டப்பிரிவு திருத்தத்தின் மூலம் ஒரே நாடு ஒரே அரசியல் சட்டம் என்பது இன்று நடைமுறைக்கு வந்துள்ளது என பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டார்.

73வது சுதந்திர தினம் இன்று நாடுமுழுவதும் கொண்டாடப்படும் நிலையில், டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றி வைத்தார். பின்னர் அவர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

அனைவருக்கும் முதலில் ரக்ஷா பந்தன் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நாடுமுழுவதும் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டின் பல பகுதிகளில் தற்போது கடுமையான மழை பெய்து மக்கள் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 10 வாரங்களில் பல முக்கிய முடிவுகளை மத்திய அரசு எடுத்துள்ளது.அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவு, 35 ஏ பிரிவு ஆகியவற்றில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

முத்தலாக் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் இஸ்லாமிய சகோதரிகள் நன்மைகள் ஏற்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் 21-ம் நூற்றாண்டில் இந்தியர்களின் கனவுகள் நனவாகி வருகின்றன. இந்தியா தற்போது தண்ணீரின் தேவையை நன்கு உணர்ந்துள்ளது. இதனால் தான் மத்திய அரசு தண்ணீருக்காக ஜல்சக்தி துறையை உருவாக்கியுள்ளது. அதுபோலவே மருத்துவ துறை மக்கள் நலன் சார்ந்து பல மாற்றங்களை கண்டு வருகிறது.

2014ம் ஆண்டு இந்த அரசின் மூலம் பெரிய மாற்றங்கள் வரும் என மக்கள் நம்பினார்கள். அவர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் விதமாக இந்த அரசு கடுமையாக உழைத்தது. ஓய்வின்றி உழைத்தோம். இதனை மக்கள் அங்கீகரித்துள்ளார்கள். இதனால் தான் 2019ம் ஆண்டு தேர்தலில் மக்கள் எங்களுக்கு ஆதரவாக வாக்களித்து, மீண்டும் பெரும்பான்மையுடன் அரசு அமைய வாய்ப்பு தந்தார்கள். இந்த நாடு மாறியுள்ளது என மக்கள் நம்புகிறார்கள். அதன் வெளிப்பாடு தான் 2019ம் ஆண்டு தேர்தல் வெற்றி.

மக்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு தீர்வையே நாங்கள் சிந்திக்கிறோம். எங்கள் முன்பு பல தடைகள் உள்ளன. இருந்தாலும் வெற்றிகரமாக அதனை தகர்த்து செயல்பட்டு வருகிறோம். முத்தலாக் நடைமுறையால் முஸ்லிம் சகோதரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஆனால் நாங்கள் இந்த நடைமுறையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். இரண்டாம் முறையாக அரசு அமைந்து 70 நாட்களில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் முன்பு செய்யப்பட்டு இருந்த ஏற்பாட்டால் என்ன துயரம் எல்லாம் நடந்தது. ஊழல், வாரிசு அரசியல், சுயநலம், இதனால் மக்கள் உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தன. பெண்கள், குழந்தைகள், தலித்துகள், பழங்குடி மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டன. துய்மை பணியில் ஈடுபடும் சுகாதார பணியாளர்கள் கனவுகள் கூட முடக்கப்பட்டு இருந்தது. இதுபோன்ற நிலைமையை நாம் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.

370வது சட்டப்பிரிவை ஆதரிப்பவர்களிடம் நாடு கேட்பது இது தான், மக்கள் வாழ்க்கைக்கு 370வது பிரிவு முக்கியம் என்றால் அது ஏன் முன்பாகவே நிரந்தர ஏற்பாடாக செய்யப்படவில்லை என்பது தான். மக்களின் ஆதரவுடன் 370வது பிரிவு மாற்றப்பட்டுள்ளது. அரசியல் இன்று இருக்கும், நாளை போகும். ஆனால் நாட்டின் நலன் அப்படியல்ல, அது என்றும நிலையானது. ஒரே நாடு ஒரே அரசியல் சட்டம் என்ற எண்ணம் இன்று நனவாகியுள்ளது. ஜிஎஸ்டி வரி மூலம் இன்று ஒரே நாடு ஒரே வரி என்ற கனவும் நடைமுறைக்கு வந்துள்ளது. இதுபோலவே ஒரே நாடு ஒரே மின்பகர்மானம் என்ற இலக்கும் சாத்தியமாகியுள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here