அமெரிக்க குடியுரிமையை துறந்தவர்களின் பிந்தைய பட்டியலிலும் கோட்டாபயவின் பெயர் இல்லை!

அமெரிக்க குடியுரிமையை இழந்த அல்லது துறந்தவர்கள் பற்றிய அமெரிக்க அரசின் பிந்திய அறிவிப்பிலும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் பெயர் இடம்பெறவில்லையென்ற தகவல் வெளியாகியுள்ளது.

இப்பொழுது அமெரிக்க குடிமகன் இல்லையென கோட்டாபய ராஜபக்சவும், பெரமுனவினரும் பகிரங்கமாக கூறி வந்தாலும், அதை இதுவரை உத்தியோகபூர்வமாக அமெரிக்க ஆவணங்கள் உறுதிசெய்யவில்லை.

குடியுரிமையை கைவிட்டதாக கோட்டாபய தரப்பு கூறி வந்தாலும், 2019இன் முதல் காலாண்டில் அமெரிக்க குடியுரிமையை கைவிட்டவர்கள் பட்டியலிலும் கோட்டாபயவின் பெயர் இடம்பெற்றிருக்கவில்லை. மார்ச் மாதம் வரையான காலப்பகுதியில் கோட்டாபய குடியுரிமையை கைவிட்டிருக்கவில்லையென்பதை அமெரிக்க ஆவணங்கள் உறுதி செய்திருந்தன.

ஏப்ரல் 17, 2019 அன்று அமெரிக்க குடியுரிமையை கைவிடுவதற்கான ஆவணங்களை கோட்டாபய கையளித்ததாகக் கூறப்படுகிறது. அதனால் அரையாண்டு அறிக்கையில் கோட்டாபயவின் பெயர் இடம்பெறுமென அவர் தரப்பில் கூறப்பட்டு வந்தது.

எனினும், அமெரிக்கா வெளியிட்ட பிந்தைய ஆவணத்திலும் குடியுரிமையை கைவிட்டவர்கள் பட்டியலில் கோட்டாபய இல்லை. ஓகஸ்ட் 7, 2019 வரை குடியுரிமையை துறந்தவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

கோட்டாபயவின் அமெரிக்க குடியுரிமையை துறந்ததாக ஒரு ஆவணத்தை, அவரது ஊடகப்பிரிவு அண்மையில் வெளியிட்டிருந்தது. அந்த ஆவணத்தின்படி, மே 3ம் திகதி அவரது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. எனினும், குடியுரிமையை துறந்தவர்கள் பற்றிய அரையாண்டு அறிக்கையிலும் கோட்டாபயவின் பெயர் இடம்பெறவில்லை.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் இலங்கை கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டையை பெற்ற விதம் தொடர்பான சர்ச்சை அண்மையில் உருவாகியிருந்தது. அவர் முறைப்படி இரட்டை குடியுரிமையை பெறவில்லையென குறிப்பிட்டு, அது தொடர்பில் விசாரணை நடத்த சிவில் சமூக ஆர்வலர்களான காமினி வியங்கொட மற்றும் பேராசிரியர் சந்திரகுப்த தேனுவாரா ஆகியோர் பொலிஸ் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.

19வது அரசியல் திருத்தத்தின் 91 வது பிரிவின்படி, இலங்கையைத் தவிர வேறு எந்த நாட்டினதும் குடிமகனாக இருந்தால் எந்தவொரு நபரும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடவோ அல்லது ஜனாதிபதியாக பணியாற்றவோ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here