மட்டு போதனா வைத்தியசாலை கழிவுகள் வாகனத்திலேயே தேக்கம்: கொட்ட இடமில்லாததால் வைத்தியசாலை ஸ்தம்பிக்கும் அபாயம்!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை அகற்றுவது பெரும் சவாலான விவகாரமாக உருவெடுத்துள்ளது. இதே நிலைமை நீடித்தால், அவசர சிகிச்சை நடவடிக்கைகளை தவிர வேறு சிகிச்சைகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுமென வைத்தியசாலை வட்டாரங்கள் எச்சரித்துள்ளன.

மட்டக்களப்ர் போதனா வைத்தியசாலையின் தொற்று மற்றும் கூரான கழிவுகளை திராய்மடு இல் உள்ள நிலையத்தில் எரியூட்டி ஓரளவுக்கு கழிவு முகாமைத்துவம் செய்யப்பட்டு வந்தது. எனினும், முழுமையான கழிவு முகாமைத்துவம் செய்ய்ப்படாததால் அந்த பகுதி மக்கள் பாதிப்புக்களை எதிர்கொண்டனர். இதையடுத்து, பிரதேச மக்கள் வெளியிட்டு வரும் எதிர்ப்புடிகாரணமாக கடந்த ஆறு மாதங்களாக கழிவுகளை எரிக்கும் செயற்பாடு முற்றாக நிறுத்தப்பட்டிருந்தது.

இதனால் வைத்தியசாலை கழிவுகளை தற்காலிகமாக திராய்மடுவில் சேமிக்கப்பட்டது. நாளாந்தம் வைத்தியசாலையிலிருந்து 400 கிலோ அளவிலான கழிவுகள் அகற்றப்படும் நிலையில், தற்போது திராய்மடுவில் சுமார் 70 மெட்ரிக் தொன் கழிவுகள் சேர்ந்துள்ளன.

இந்த கழிவுகளை இறுதியகற்றல் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் கடும் சிக்கலை எதிர்நோக்கியுள்ளது. மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அனுமதியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைக்கு, செங்கலடி பிரதேச செயலர் பிரிவிலுள்ள வேப்பவெட்டுவான் பகுதி தேர்வு செய்யப்பட்டிருந்தது. இதற்கு செங்கலடி பிரதேச செயலாளரும் அனுமதியளித்திருந்தார்.

வைத்தியசாலை நிர்வாகத்துடன், Micro biologyist consultant நிறுவனமும் இணைந்து கழிவுகளை இறுதியழிப்பு செய்வதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், இந்த நடவடிக்கையும் முழுமையான கழிவு முகாமைத்துவ செயற்பாடு அல்லவென்ற விமர்சனங்களும் கிளம்பியிருந்தன. வேப்பவெட்டுவான் மக்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கழிவு வாகனங்களை மக்கள் திருப்பி அனுப்பினர்.

இதேவேளை, கழிவுகளை தற்காலிகமாக தமது பகுதிகளில் குவிப்பதற்கு திராய்மடு மக்களும் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். இறுதியழிப்பு செய்ய 5 பாரஊர்திகளில் ஏற்றப்பட்ட கழிவுகளை கொட்ட வேப்பவெட்டுவான் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, மீண்டும் திராய்மடுவிற்கே கொண்டு வந்தபோது, அந்த பகுதி மக்களும் எதிர்ப்பு தெரிவித்து குப்பை கொட்டுவதை தடுத்துள்ளனர்.

இதனால் குப்பைகளை இறக்க முடியாத 5 பாரஊர்திகளும் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கழிவுகளை கொட்ட இடமில்லாததால் கடந்த சில தினங்களாக வைத்தியசாலையின் குப்பைகள் அகற்றப்படவில்லை. இது சிகிச்சை பெற வரும் நோயாளர்களிற்கு ஆபத்தானது என வைத்தியர்கள் எச்சரித்துள்ளன. அதேவேளை, குப்பை அகற்றலிற்கு நிரந்தர தீர்வு தருமாறு கோரி போராட்டத்தில் குதிக்க வைத்தியசாலை தொழிற்சங்கங்கள் தயாராகி வருகின்றன.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here