பிள்ளையானை சிறையில் சந்தித்தார் திலகராஜ் எம்.பி: இலக்கியம் பற்றி பேசினேன் என்கிறார்!

மட்டக்களப்பு சிறைச்சாலையில் முன்னாள் கிழக்கு முதலமைச்சர் சந்திரகாந்தனை (பிள்ளையான்) சந்தித்து இலக்கியம் தொடர்பாக பேசினேன் என தெரிவித்துள்ளார் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ்.

“கிழக்கு தொடர்பில் அவர் எழுதியுள்ள விடயங்கள் எங்களுக்கு கிழக்கு தொடர்பில் புதிய பார்வையினை தந்துள்ளது. அதேபோன்று மலையகம் தொடர்பான பார்வையினையும் அவர் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அவருடன் மலைய இலக்கியம் தொடர்பில் உரையாடிய பின்னர் நூல்களையும் வழங்கிவைத்தேன்“ என தெரிவித்தார்.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனை இன்று சிறைச்சாலைக்கு சென்று நாடாளுமன்ற உறுப்பினர் ம.திலகராஜ் சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர். அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவித்தார்.

“இலக்கியங்கள் ஊடாக பல தொடர்புகள் எனக்கு கிழக்கில் இருக்கின்றது. அண்மையில் நான் வாசித்த நூல்களில் சந்திகாந்தனின் வேட்கை ஒரு வித்தியாசமான நூலாக தெரிந்தது. அவரை ஒரு விடுதலைப் போராட்டக்காரராக- ஒரு முதலமைச்சராக பார்க்கின்ற தருணத்தில் அவரின் எழுத்துக்களின் மூலமாக அவரின் எழுத்தாளுமையும் அவரின் பயணங்களை சொல்லுகின்ற விதமும் அந்த நூல் மீதான ஒரு ஈர்ப்பினை ஈர்த்துள்ளது. அந்தவகையில் மட்டக்களப்புக்கு வந்த இந்தநேரத்தில் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

கிழக்கு தொடர்பில் அவர் எழுதியுள்ள விடயங்கள் எங்களுக்கு கிழக்கு தொடர்பில் புதிய பார்வையினை தந்துள்ளது. அதேபோன்று மலையகம் தொடர்பான பார்வையினையும் அவர் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அவருடன் மலைய இலக்கியம் தொடர்பில் உரையாடிய பின்னர் நூல்களையும் வழங்கி வைத்தேன்.

நாங்கள் எந்த தேர்தலையும் பகிஸ்கரிப்பதாக இல்லை. இலங்கையில் தேர்தல்களை பகிஸ்கரித்தன் அனுபவங்கள் பல நிகழ்ந்துள்ளன. அவ்வாறான பகிஸ்கரிப்புகள் பின்னாளில் நாங்கள் செய்த தவறுகள் என்று ஒப்புக்கொண்ட சம்பவங்களும் உள்ளன.

மலையக மக்களை பொறுத்தவரையில் இந்த நாட்டில் பறிக்கப்பட்டிருந்த வாக்குரிமை காரணமாக நாங்கள் அதிகளவில் இழந்துள்ளோம். கிடைத்துள்ள வாக்குரிமையினை பயன்படுத்தி எந்தளவு தூரம் எங்களுக்கு சாதகமான சூழ்நிலையினை ஏற்படுத்தலாம் என்று பார்க்கலாமே தவிர அந்த ஜனநாயக வாய்ப்பினை புறக்கணிப்பதற்கு நாங்கள் தயாராகயில்லை“ என்றார்.

இதேவேளை, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அண்மையில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் பிள்ளையானை சந்தித்து பேசியிருந்தார். அப்போது கூட்டாக செயற்படுவது பற்றிய கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக செய்திகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here