நாளை ரணிலின் கூட்டத்திற்கு வருபவர்களிற்கு மட்டுமே நியமனம்; பட்டதாரிகளை அலைக்கழிக்கும் அரசியல்!

யாழ் மாவட்டத்திலுள்ள வேலையற்ற வெளிவாரி பட்டதாரிகள், அரசிய நியமனத்தை பெற வேண்டுமெனில் நாளை ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்ளும் மயிலிட்டி துறைமுக திறப்பு விழாவில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தரப்பிலிருந்து கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வேலையற்ற பட்டதாரிகள் தமது சொந்த செலவில் பேருந்து ஏற்பாடு செய்து, மயிலிட்டிக்கு வந்து சேர வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

அண்மையில் வழங்கப்பட்ட நியமனங்களில் வெளிவாரி பட்டதாரிகள் புறக்கணக்கப்பட்டிருந்தனர். இது கடுமையான விமர்சனங்களை கிளப்பியிருந்தது. நேற்றைய தினம் கொழும்பிலும் வெளிவாரி பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்தநிலையில், பட்டதாரிகள் சங்கத்திலுள்ள ஐ.தே.க ஆதரவு அணியின் மூலமாக, இன்று பதிவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. யாழ்ப்பாணத்திலுள்ள வேலையற்ற வெளிவாரி பட்டதாரிகளில் 35 வயதிற்கும் மேற்பட்டவர்களில் சிலருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளதாகவும், இதற்கான பதிவு நடவடிக்கையில் ஈடுபடும்படியும் ஐ.தே.க ஆதரவு அணியால் வெளிவாரி பட்டதாரிகளிற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து இன்று யாழ் நகரில் 35 வயதிற்கும் மேற்பட்ட வெளிவாரி பட்டதாரிகள் பதிவு மேற்கொண்டனர். யாழ்ப்பாணத்தில் 35 வயதிற்கும் மேற்பட்ட வெளிவாரி பட்டதாரிகள் 198 பேர் உள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் 45 பேர் உள்ளனர். எனினும், அவர்களில் குறிப்பிட்டளவானவர்களிற்கு மட்டுமே நியமனம் வழங்கப்படும் என விஜயகலா தரப்பினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நாளை தமது சொந்த செலவில் பேருந்து ஏற்பாடு செய்து கொண்டு வருமாறும் விஜயகலா தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகலா தரப்பினால் இப்படி தம்மிடம் தெரிவிக்கப்பட்டதை வெளிவாரி பட்டதாரிகள் சங்கத்தின் பொறுப்பு வாய்ந்த பிரமுகர்களும், தமிழ்பக்கத்திடம் உறுதிசெய்தனர்.

முன்னைய மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் பட்டதாரிகள், வேலையற்ற இளைஞர் யுவதிகளை தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பயன்படுத்தியது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அப்போது எதிர்தரப்பிலிருந்த கூட்டமைப்பும் இந்த செயற்பாட்டை கடுமையாக எதிர்த்திருந்தது. எனினும், அண்மைக்காலமாகவே வேலையற்ற இளைஞர், யுவதிகளையும், பட்டதாரிகளையும் தனது தேர்தல் பிரச்சாரத்திற்கும், அரசியல் முயற்சிகளிற்கும் விஜயகலா மகேஸ்வரன் பயன்படுத்தி வருவது கட்டுக்கடங்காமல் அதிகரித்திருந்தும், தமிழ் தேசிய கூட்டமைப்பு இது குறித்து மூச்சுவிடவில்லை.

நாளைய தினம் மயிலிட்டியில் நடைபெறும் நிகழ்வில், மாவை சேனாதிராசாவும் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here