காதலியை கட்டியணைத்தபடி குண்டை வெடிக்கவைத்த புலிகளின் மூத்த தளபதி!

கருணாவின் பெண் தளபதிக்கு இருந்த வித்தியாசமான சிக்கல்

பீஷ்மர்

1999 ஓயாத அலைகள் 03 சமரில் தளபதி பால்ராஜின் கட்டளையை மட்டக்களப்பு ஜெயந்தன் படையணி இளநிலை தளபதியொருவர் ஏற்க மறுத்தார் என்பதை கடந்தவாரம் குறிப்பிட்டிருந்தோம். அதைப்பற்றிய விபரங்களை இந்த வாரம் குறிப்பிடுவதாக கூறியிருந்தோம்.

ஆ.க.வெ சமரில்ஆனையிறவு இராணுவ முகாமை வீழ்த்துவதற்கு புலிகள் பலமுறை- பலகாலமாக முயன்றும் முடியாமலிருந்தது. எந்த பலத்திலும் ஒரு பலவீனம் உள்ளது. ஆனையிறவின் தரைத்தோற்றம்தான் இராணுவத்திற்கு பலமாக இருந்தது. நீண்ட வெட்டைவெளியை கடந்து புலிகளால் முன்னேறி சென்று, இராணுவத்தின் முன்னரணை உடைக்க முடியாமல் இருந்தது.இந்த தரையமைப்பில் இருந்த ஒரு பலவீனத்தையே தமக்கு சாதகமாக புலிகள் பயன்படுத்தினார்கள்.

வாசகர்களே, தமிழ் பக்கத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து விட்டீர்களா? வெறெந்த இணையங்களிலும் படிக்க முடியாத இப்படியான தொடர்களை படிக்கவும், செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும் தமிழ் பக்கத்தை லைக் செய்து வைத்து கொள்ளுங்கள். அதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்.

அது குடிநீர்!

ஆனையிறவு, இயக்கச்சி பகுதி இராணுவ முகாம்களில் நல்ல குடிநீர் கிடையாது. அதிலும் ஆனையிறவில் உப்பளம், வாடிவீட்டு முகாம்களில் மருந்துக்கும் குடிநீர் கிடையாது. குமாரபுரத்தில் இருந்து பவுசர்களில்தான் குடிநீர் கொண்டு செல்லப்படும். (இப்பொழுது பளை பிரதேசசபை இராணுவத்தின் வசமுள்ள குடிநீர் கிணறுகளை விடுவிக்க வேண்டுமென ஒரு கோரிக்கை வைத்துள்ளதே, அந்த குடிநீர் கிணறுகளில் இருந்துதான் ஆனையிறவிற்கான குடிநீர் வழங்கப்பட்டது. இப்பொழுதும் அந்த குடிநீர் கிணற்றில் இருந்துதான் யாழ் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான இராணுவ முகாம்களிற்கு- பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள முகாம்கள் உட்பட- குடிநீர் வழங்கப்படுகிறது)  உப்பளம், வாடிவீட்டு பகுதிகள்தான் இராணுவத்தின் பலமான முன்தளம்.

அந்த பகுதியால் பயணம் செய்பவர்களிற்கு, அந்த தரைத்தோற்றத்தை புரிந்து கொள்ள முடியும். அதற்கப்பால் பரந்தன் வரை வெட்டவெளி. இதற்குள்ளால் வரும் புலிகளின் படையணிகளை குருவி சுடுவதை போல இராணுவம் சுட்டு வீழ்த்தும்.

1991இல் புலிகள் ஆகாய கடல் வெளி இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ஆனையிறவின் மீது முதலாவது தாக்குதலை நடத்தினார்கள். அப்பொழுது வெட்டைவெளியை கடப்பதற்கு, புலிகள் பலவிதமாக உத்திகளை பாவித்தார்கள்.

மண்ணெண்ணெய் பரலிற்குள் மணலை நிரப்பி, அந்த பரலை உருட்டியபடி பரலிற்கு பின்னால் தவழ்ந்தபடி முன்னேறியது, ட்ரக்ரர், டோசர்களில் கவசம் அமைத்து அதன் பின்னால் நகர்ந்தது என பலவிதங்களில் முயன்று பார்த்தனர். இப்பொழுது ஆனையிறவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள கவசவாகனத்தை பார்த்தால் புரியும்- புலிகள் எப்படி கவசங்களை அமைத்தார்கள் என.

Image result for தளபதி பால்ராஜ்
பால்ராஜ்

குடாரப்பில் தரையிறங்கிய பால்ராஜ் தலைமையிலான 1200 பேர் கொண்ட படையணி, இத்தாவிலில் BOX அடித்தது. இந்த BOXஇற்குள் நிலைகொண்ட போராளிகளை மூன்று டிவிசன் படையினர் சுற்றிவளைத்து தாக்கினர். இப்படியான நெருக்கடியில் இருந்த பால்ராஜிற்கு, BOXற்கு வெளியில் நின்ற ஜெயந்தன் படையணியின் ஒரு அணியும் வழங்கப்பட்டது.

தாளையடியில் நிலைகொண்டிருந்த ஜெயந்தன் படையணியை எப்படியாவது உபயோகித்து, BOXற்குள் நிற்பவர்களின் அழுத்தத்தை குறைப்பதே திட்டம்.

ஆனால் பால்ராஜின் கட்டளையை தாளையடியில் நின்ற ஜெயந்தன் படையணியின் இளநிலை தளபதி ஏற்கவில்லை. ‘எங்களுக்கு அம்மான் மட்டும்தான் கொமாண்ட் பண்ணலாம். வேற யார் கொமாண்ட் பண்ணியும் நாங்கள் செய்யமாட்டம்’. இதுதான் அவரது பதிலாக இருந்தது.

யார் அந்த இளநிலை தளபதி தெரியுமா?

அக்கினோ.

கருணாவின் நம்பிக்கைக்குரிய விசுவாசியாக இருந்தவர். தாளையடி அணிக்கு உமாரமணன் பொறுப்பாக இருந்தார். அவரின் கீழ் செயற்பட்டவர் அக்கினோ. அப்பொழுது அவர் மீது புலிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சரி, ஜெயந்தன் படையணி யாழ்ப்பாண சண்டையில் முக்கிய பங்கு வகிக்காமல், உதவி அணியாக செயற்படட்டும் என பிரபாகரன் முடிவெடுத்தார்.

ஓயாத அலைகள் 03 சண்டை உக்கிரமாக நடந்து கொண்டிருந்ததால், இந்த விவகாரத்தை அப்போதைக்கு பெரிதுபடுத்தாமல், சண்டை முடியட்டும் என்பதே புலிகளின் எண்ணம். ஆனால், அக்கினோவை பொறுப்பிலிருந்து நீக்கி வைக்குமாறு மட்டும் கருணாவிற்கு ஒரு அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்கள்.

அக்கினோ விசயத்தில் புலிகள் உடனடியாக கடுமையாக நடந்து கொள்ளாததற்கு இன்னொரு காரணமும் உள்ளது.

கிழக்கு மகளிர் படையணியான அன்பரசி படையணியின் தளபதியாக இருந்த நிலாவினி/ சாளியை நீங்கள் அறிந்திருக்கக்கூடும். கருணா பிரிவின்போது அவருடன் சென்றவர். கொழும்பிற்கு கருணா அணி தப்பிச்சென்றபோது தனது முக்கியஸ்தர்கள் பலரை அழைத்து சென்றார். ஆனால் கொழும்பிற்கு சென்ற சிலநாளிலேயே, மிக நெருக்கமானவர்களை மட்டும்தான் தன்னுடன் வைத்திருக்கலாமென்ற நிலை அவருக்கு ஏற்பட்டது. கருணாவுடன் இருந்தவர்களை பரா மிலிட்டரியாக தம்முடன் இயங்கவைக்கலாமென்ற எண்ணம் இராணுவத்திற்கு இருந்தாலும், பெண்களை வைத்து எதுவும் செய்ய முடியாதென்பது அவர்களிற்கு தெரியும்.

இதனால் கருணாவுடன் தப்பிச்சென்ற மகளிர் படையணி முக்கியஸ்தர்களை மத்திய கிழக்கு நாடுகளிற்கு பணிப்பெண்களாக செல்லுமாறு கேட்கப்பட்டது. ஆனால் அவர்களிற்கு அதில் துளியும் உடன்பாடில்லை. தளபதிகளாக செயற்பட்டவர்கள், திடீர் திருப்பங்களால் கொழும்பில் நின்று என்ன செய்வதென தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தவர்கள்… பணிப்பெண்களாக செல்லுமாறு கூறியதை அவர்கள் விரும்பவில்லை. இந்த சமயத்தில் அவர்களின் உறவினர்களை கைது செய்து, அவர்கள் மூலம் தொடர்புகொண்டு கொழும்பில் நின்ற முன்னாள் மகளிர் படையணி தளபதிகளை தமது கட்டுப்பாட்டு பகுதிக்கு வருமாறு புலிகள் அழுத்தம் கொடுத்தனர்.

கருணாவுடனும் நிற்க முடியாது, உறவுகளும் புலிகளின் பிடியில் என்ற நெருக்கடியான நிலைமையில் மகளிர் படையணி தளபதிகள் புலிகளிடம் சரணடைந்தனர். இப்படி திரும்பி வந்த நிலாவினி, இராசாத்தி போன்றவர்கள் பகிரங்கமாக ஊடகங்களின் முன் பேட்டியெல்லாம் கொடுத்தனர். பின்னர், புலிகளின் புலனாய்வுப்பிரினால் விசாரணை செய்யப்பட்டு, சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த நிலாவினி விடயத்தில் 1997 இல் நடந்த ஒரு சம்பவத்தை மனதில் வைத்துதான், அக்கினோ விடயத்தில் புலிகள் உடனடியாக அவ்வளவாக இறுக்கிப்பிடிக்கவில்லை.

புலிகளிடம் சரணடைந்த கருணாவின் மகளிரணி முக்கியஸ்தர்கள்
புலிகளிடம் சரணடைந்த கருணாவின் மகளிரணி முக்கியஸ்தர்கள்

இப்பொழுது நாம் சொல்லப்போகும் விசயம் சில சமயங்களில் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தவும்கூடும். ஆனால் உண்மைகளை யாராலும் மறைக்க முடியாது. சரியும், தவறுமாக பலதும் இணைந்ததுதானே வரலாறு.

ஜெயசிக்குறு களத்திற்கு கிழக்கு படையணிகள் வந்த புதிதில் ஜெயந்தன் படையணியை ரமேசும், அன்பரசி படையணியை நிலாவினியும் வழிநடத்தினார்கள். நிலாவினி குறித்து அரசல்புரசலாக பலரும் ஒரு தகவலை அறிந்திருப்பார்கள். நிலாவினி சில தனிமனித பலவீனமுடையவர். அவருக்கு ஜெயந்தன் படையணியின் சில முக்கியஸ்தர்களுடன் உடல்ரீதியான தொடர்பு இருந்தது. ஜெயசிக்குறு களமுனையில் இப்போதும் உயிரோடு உள்ள கருணா அணியின் மிகப்பிரபலமான ஒருவருடன், நிலாவினிக்கு இருந்த தொடர்பு களமுனையில் பகிரங்கமாக அடிபட்டது.

மற்றைய படையணிகளின் தளபதிகள் மூலம் விசயம் புலிகளின் உயர்மட்டத்திற்கு போனது. அப்படியே, பிரபாகரனின் காதிற்கும் சென்றது. விடுதலைப்புலிகள் அமைப்பின் கண்டிப்பான விதிகளில் ஒன்று- போராளிகளிற்குள் பாலியல் தொடர்புகள் இருக்ககூடாதென்பது. பாலியல் தொடர்பு வைத்திருந்ததற்காகவே மரணதண்டனை விதிக்கப்பட்ட பல சம்பவங்கள் உள்ளன.

புலிகளின் மோட்டார் படையணி
புலிகளின் மோட்டார் படையணி

புலிகளிற்குள் தனிமனித ஒழுக்கம் எப்படியிருந்ததென்பதற்கு உதாரணமாக இரண்டு சம்பவங்களை குறிப்பிடுகிறோம்.

புலிகளின் குட்டிசிறி மோட்டார் படையணி உருவாக்கப்பட்டபோது அதில் முக்கிய பங்காற்றிய தளபதி சோ. அவரது பெயர் அவ்வளவாக வெளியில் தெரியாது. ஆனால், புலிகளின் மோட்டார் படையணி வளர்ச்சியடைந்ததற்கு அவர்தான் மிக முக்கிய காரணம். புலிகளில் இருந்தவர்களிலும், ஓரளவு அனுபவமுள்ளவர்கள்தான் அவரை அறிந்திருப்பார்கள்.

தளபதி சோ முதலில் புலிகளின் ராங்கி பிரிவிற்கு பொறுப்பாக இருந்தார். துல்லியமாக ராங்கியால் சுடுவதில் மிகமிக தேர்ந்தவர். அவரது துல்லிய சூட்டிற்கு ஒரு உதாரணம், புலிகள் முல்லைத்தீவு கடலில் ஐரிஸ்மோனா கப்பலை பணயமாக வைத்து இரண்டு டோறா படகுகளை தாக்கியழித்த சம்பவம்.

டாங்கி, மோட்டார் படையணிகளின் ஆணி வேர் சோ தான். பிரபாகரனிற்கும் அவரில் அலாதியான பிரியமும், நம்பிக்கையும் இருந்தது. அவர் தற்கொலை செய்துகொண்டார்.

அதுவும்- தனது காதலியான மோட்டார் படையணியின் இன்னொரு முக்கியஸ்தரான பெண் போராளியுடன் சேர்ந்து.

சோவும், காதலியும் ஏன் தற்கொலை செய்தார்கள்?

அதை அடுத்த பாகத்தில், வரும் புதன்கிழமை குறிப்பிடுகிறோம்.

(தொடரும்)

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here