முயலுக்கு இரண்டு கால் என்பதை மறந்து, மூன்று கால் என்பவர்கள்தான் கூட்டமைப்பிற்கு எதிராக பிரச்சாரம் செய்பவர்கள்: தமிழ் அரசு கட்சி செயலாளர் விளக்கம்!

நமக்கு வழங்கப்படுகின்ற உரிமைகளை சிங்கள மக்களிடம் இருந்து பறிக்கப்படுகின்ற சொத்தாக உருப்பெருக்கிக் காட்டுவதிலே நமது எதிர்முனையில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் மிகுதிப் பெருந்தேசியம் எப்போதும் கண்ணாயிருக்கின்றது. இதன் காரணமாகத்தான் நமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நாம் எதிர்பார்த்த வேகத்தில் நிறைவேற்றப்படவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியில் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் விழிப்புணர்வு கருத்தரங்கு திங்கட்கிழமை மாலை கிரான் றெஜி கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற போது மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு விடுதலை இயக்கம். ஏனைய அரசியற் கட்சிகளைப் போன்ற ஒரு அரசியற் கட்சி அல்ல இது. விடுதலை என்பதிலே இரண்டு விடயங்கள் அவதானிக்கப்பட வேண்டும். ஒன்று, அந்நியராட்சியை ஒரு நாட்டிலே இருந்து வெளியேற்றுவது. அதனை எமது மூதாதையர்கள் செய்து முடித்துவிட்டார்கள். நாம் சுதந்திரத்தின் பின்னர் நமக்கான விடுதலையைத் தேடிக் கொண்டிருக்கின்றோம்.

சுதந்திர இலங்கையின் பாராளுமன்றம் திறந்து வைக்கப்பட்டது. அங்கு பிரித்தானிய அரசின் பிரதிநிதி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். வரவேற்புரையை பின்னர் பிரதமராக இருந்த அப்போதையை மூதவை உறுப்பினர் சேர்.ஜோன் கொத்தலாவல அவர்கள் வழங்கினார். இந்த நாடு பல சமூகங்களை ஒன்றிணைத்த பன்முகத் தன்மை கொண்ட நாடு. நாங்கள் சுதந்திரம் பெறுவதற்காக ஒன்றுபட்டு உழைத்தோம், தொடர்ந்தும் சுதந்திர இலங்கையில் நாங்கள் ஒருமித்து வாழ்வோம் என்று குறிப்பிட்டார்.

ஆனால், சுதந்திரக் கொடி காற்றில் பறந்ததைப் போல சுதந்திர தினத்தன்று சொல்லிய வாசங்களும் காற்றில் பறந்து விட்டன. சிங்கள இனம் தவிர்ந்த ஏனைய இனத்தினர் சிறுபான்மை மக்கள் என்று அழைக்கப்படுகின்றோம். அதிலும், தமிழ் பேசும் மக்கள் என்ற வகையிலே அடையாளப்படுத்தப்பட்டு முதலாவது அடக்குமுறை தமிழ் முஸ்லீம் சமூகங்கள் மீது பிரயோகிக்கப்பட்டது.

முஸ்லிம்கள் காலவரையிலே தமிழ் பேசும் இனம் என்ற கூட்டுக்குள் இருந்து விலகித் தனியாகச் செயற்படத் தொடங்கினார்கள். அவர்களுக்காகவும் செயற்பட்ட நாம் எமது இலக்கிலே மாற்றங்கள் செய்யாமல் தொடர்ச்சியாக எண்ணிக்கையில் சிறுபான்மையினரான மக்களுக்காக, குறிப்பாகத் தமிழ் மக்களுக்காக உழைத்தக் கொண்டிருக்கின்றோம்.

ஆம் இன்னும் விடுதலைக்காக நாம் உழைத்துக் கொண்டிருக்கின்றோம். இங்கு பிரயோகிக்கப்படும் விடுதலை என்பது நாட்டைவிட்டு அந்நியரை விரட்டியடித்த விடுதலையை விட வேறுபட்ட ஒன்று. ஒரே நாட்டிலே வாழ்ந்து கொண்டு நாடு சுதந்திரம் அடைந்த போது பொதுவாக வழங்கப்பட்ட சுதந்திரத்தை தமது சொந்தச் சொத்தாக அனுபவிக்கின்ற பெருந்தேசியவாதிகளிடம் இருந்து எமக்குரிய பங்கை பெற்றக் கொள்ளுதல் என்பது தான் இப்போது நாம் குறிப்பிடும் விடுதலைக்கான பொருள். அந்நியராட்சியை நாட்டை விட்டு அகற்றுவதற்குக் கையாண்ட பொறிமுறைகளை விட வித்தியாசமான பொறிமுறைகள் இங்கு கையாளப்பட வேண்டும்.

சாத்வீக வழியில் முயன்றோம். நெருக்குவாரங்கள், இளைஞர்களை நோக்கி முனைப்புக் காட்டிய போது உயிர்ப்படைந்த இளைஞர்கள் ஆயுத வழியிலே விடுதலை பெற முனைந்தார்கள். அந்த விடுதலைப் போராட்டம் மூர்க்கத்தனமாக அடக்கப்பட்டது. மீண்டும் அறவழியினூடாக எமது உரிமைகளை வென்றெடுக்கும் முயற்சியிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒரே சக்தியாக இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

2015 வரை இருந்த சூழ்நிலைகள் அடக்கு முறையின் இன்னொரு அங்கமாகவே உருப்பெற்றிருந்தன. 2015ன் பின் பெருந்தேசியவாதிகளோடு புரிந்துணர்வு அடிப்படையில் செயற்பட்டுக் கொண்டு வருகின்றோம். இந்த நாட்டுப் பெருந்தேசியம் என்பது தமது மக்களுக்கு தமிழர்களை அந்நியர்களாகவே பழக்கப்படுத்தி விட்ட ஒன்று. தமிழர்கள் தமது இருப்புக்கு ஆபத்தானவர்கள் என்பது சிங்கள மக்கள் மத்தியிலே அரசியலாலும், மதத்தாலும் ஊட்டி வளர்க்கப்பட்டிருக்கின்றது.

நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பு ஏதோவொரு விதத்தில் சிறுபான்மை மக்களோடு புரிந்துணர்வின் அடிப்படையிலே தான் அரசியல் செல்நெறி அமைய வேண்டும் என்பதனை கட்டாயப்படுத்தியுள்ளது. இருப்பினும் பெருந்தேசியம் இரண்டாகப் பிரிந்து நிற்பதே இந்த நாட்டின் இயல்பாகவுள்ளது. இது சிறுபான்மை இனம் தன் உரிமையைப் பெற்றுக் கொள்வதற்கு என்றுமே குந்தக நிலைமையையே ஏற்படுத்துகின்றது.

2015 ஜனவரி 08ன் பின் இரண்டாகப் பிளவுபட்டிருந்த பெருந்தேசியவாதத்தில் ஒரு பிரிவினரை பிளவுபடுத்தி அந்தப் பிளவை மறுபகுதியினருடன் சேர்ப்பித்து நமக்கு எதிரான சக்தியின் வலுவைக் குறைவடையச் செய்தோம். இதன் காரணமாக எமது உரிமைகளை வென்றெடுத்தல் தொடர்பிலே புதிய அரசியலமைப்பை உருவாக்குதல், காணி விடுவிப்பு, அரசியற் கைதிகள் விடுவிப்பு, போர்க்குற்றம் தொடர்பான பொறுப்புக் கூறலிலே ஐ.நா தீர்மானத்திற்கு இலங்கை அரசும் இணை அனுசரணை செய்தல், அவசரகால நிலைமையை இலதாக்குதல், வரவு செலவுத் திட்டத்திலே வடக்கு கிழக்கிற்கு முன்னைய காலங்களை விட கூடிய நிதியை ஒதுக்குதல் இதன் மூலம் வடகிழக்கைக் கட்டியெழுப்புதல், பெண்கள் தலைமை விசேட சலுகைகளை வழங்குதல், புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளுக்கு வாழ்வாதாரங்களைப் பெற்றுக் கொடுத்தல், இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுத்தல் என்னம் விடயங்களினூடே எமது பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றோம்.

வரலாற்றில் எப்போமில்லாததைபோல, வரவு செலவு திட்டத்திற்கு நாம் ஆதரவளித்து பல்வேறு அபிவிருத்திகளை பெற்றுள்ளோம். இதையெல்லாம் பார்த்து எமது நண்பர்கள் புளுங்கி, பொறாமைப்பட்டு பல்வேறு கதைகளை பரப்புகிறார்கள். இவற்றை நம்பி, முயலுக்கு இரண்டு கால்தான் என்பதை மறந்து, மூன்று கால்தான் என அவர்கள் சொல்லும் நிகழ்ச்சியில் நாம் எடுபட கூடாது.

இலங்கைத் தீவிலே தமிழர்களான நாம் அரசிடம் பெற்றுக் கொண்ட வாக்குறுதிகளை நிறைவேற்றச் செய்தல் என்பது அரசின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு மட்டும் உரியதல்ல. மாறாக சிங்கள மக்கள் மத்தியிலே ஊட்டி வளர்க்கப்பட்ட வேற்றுமை உணர்வுகள் விழிப்படைந்து விடாதபடி பார்த்துக் கொள்வதும் மிக முக்கிய அம்சமாகும். ஏனெனில் அத்தகைய வெறுப்புணர்வின் விழிப்பு எமது விடுதலைக்கு வைக்கப்படுகின்ற நெருப்பாக மாறிவிடும். எனவே எம்மோடு புரிந்துணர்வோடு நடந்து கொள்கின்ற பெருந்தேசிய அரசியலின் ஒரு பகுதி பிரிந்து நிற்கின்ற மறுபகுதி இலாபமடையாத வண்ணம் தனது நிகழ்ச்சி நிரலை அவதானமாக நடத்திச் செல்ல வேண்டியது அவர்களின் இருப்புக்கு இன்றியமையாத ஒன்றாகும்.

எனவே தான் எமக்கு வழங்கப்படுகின்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலே எம்மோடு பொருந்திக் கொண்ட பெருந்தேசியம் மிக அவதானமாக தனது செயற்பாடுகளை நகர்த்துகின்றது. நமக்கு வழங்கப்படுகின்ற உரிமைகளை சிங்கள மக்களிடம் இருந்து பறிக்கப்படுகின்ற சொத்தாக உருப்பெருக்கிக் காட்டுவதிலே நமது எதிர்முனையில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் மிகுதிப் பெருந்தேசியம் எப்போதும் கண்ணாயிருக்கின்றது. இதன் காரணமாகத்தான் நமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நாம் எதிர்பார்த்த வேகத்தில் நிறைவேற்றப்படவில்லை.

இதனைப் புரிந்து கொள்ளாமல் இருப்பது இலங்கையின் அரசியல் வரலாற்றை புரிந்து கொள்ளாமல் இருப்பதற்குச் சமமானதாகும். எனவே வாக்குறுதிகள் உரிய விதத்தில் நிறைவேற்றப்படாமல் இருக்கும் சந்தர்ப்பங்களில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பிலே எடுத்துக் கொண்ட நடவடிக்கைகள் தான் இப்போது எமக்கு எதிரான விமர்சனங்களாக மாறியுள்ளன. எமது நடவடிக்கைகளை எமது முந்திய கால அதாவது கடந்த 30 ஆண்டுகால வரலாற்றோடு நம்மில் சிலர் ஒப்பிட்டுப் பார்க்கின்றார்கள்.

அந்த வீரயுகத்திலே போராட்ட இயக்கம் அரசோடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதில் தொய்வு நிலை ஏற்படுகின்ற போதெல்லாம் பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டு போர்க்களத்திற்குத் திரும்பினார்கள். குறித்த சில காலங்களின் பின் இதேமாதிரியான நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்தவகையிலே இப்போதைய சூழ்நிலையிலே நாம் நடந்து கொள்ள முடியுமா? என்பது தொடர்பில் ஊன்றி சிந்திக்க வேண்டும்.

புரிந்துணர்வு என்ற அடிப்படையிலே எமது விடயங்கள் தொடர்பில் செயற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கின்ற அரசு நாம் எதிர்பார்த்த வேகத்தில் அல்லது எதிர்பார்த்த விதத்தில் செய்யாதிருக்கும் போது புரிந்துணர்வை முறித்துக் கொண்டு எதிர்க்களத்திற்குத் திரும்பி குறித்த சில காலங்களின் பின் புரிந்துணர்வுக் களத்திற்கு வரமுடியும் என்பதில் எவ்வித யதார்த்தமும் இல்லை.

எனவே இப்போதுள்ள புரிந்துணர்வுத் தளத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் நமக்கு இருக்கின்றது. அதனைத் தவறவிட்டால் நமது எதிர்முனை அரசியலாளர்கள் ஏற்றம் பெற்றுவிடுவார்கள். இடைநடுவில் நிற்கின்ற நமது அடைவுகள் அதோகதியென்ற நிலைமைக்கு ஆகிவிடும். இதனைப் புரிந்துகொள்வதிலே சாதாரண மக்களுக்கு கஷ்டம் இருக்கவில்லை. ஆனால், வேண்டுமென்றே எமக்குக் கறை பூச முற்படும் புத்திஜீவிகள் என்று தமக்குத்தாமே நாமமிடுபவர்கள் தான் புரளிகளைக் கிளப்புகின்றார்கள்.

கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றுவதற்கு அரசின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் இராணுவ அதிகாரிகள், நிருவாக அதிகாரிகள், புத்தபிக்குகள், எதிர்க்கட்சி என்னும் அனைத்துமே காரணமாக அமைகின்றன. இவர்களுடைய கைகள் ஓங்கும் வகையிலேயான காரியங்கள் நடைபெறுமானால் எமது இலக்குகளை நாம் அடைவதில் தடை ஏற்படும். சிங்கள மக்களின் வாக்கு வங்கியிலே தங்கி நிற்கின்ற அரசு மேற்குறிப்பிட்ட இத்தனை சக்திகளும் சிங்கள மக்களை அரசுக்கு எதிராக செயற்படுத்தும் வகையிலான நிகழ்ச்சி நிரல் தொடர்பில் எப்போதும் எச்சரிக்கையாகவே நடந்து கொள்வார்கள் என்ற யதார்த்தத்தை நாம் புரிந்து கொண்டாக வேண்டும்.

வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பதனால் நிறைவேற்ற வைப்பதற்கான வேற உத்திகளைக் கையாளாது நிராகரித்தல் என்பது தற்போதுள்ள ஜனநாயகக் கட்டமைப்பிலும், இலங்கைக்கேயான தனியான அரசியற் தன்மையிலும் நமது மக்களுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் வழிவகை ஆகாது.

எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்கும் அன்பர்கள் அவ்வாறு விமர்சிப்பதற்கு முன் இலங்கை அரசியற் துறையிலே தங்களுக்கு உள்ள நடைமுறை ரீதியான எத்தகைய பயிற்சி உண்டு என்பதனை சுய மதிப்பீடு செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாமல் இலகுவான காரியங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்யாதிருக்கின்றது என்று குறிப்பிடுவது நமது இனத்திற்கு எவ்விதத்திலும் பலம் சேர்க்கும் ஒன்றாக அமைய மாட்டாது.

வீரயுகத்திலே பல்வேறு இயக்கங்கள் நமக்காகப் போரிட்டன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு போக்கிலே செயற்பட்டார்கள். இது தமிழ் மக்களின் இலக்கை அடைவதற்கான வழிமுறையல்ல என உணர்ந்ததன் காரணமாகத் தான் தமிழ் மக்களுக்கென்ற ஏகபிரதிநிதித்துவம் என்ற கோரிக்கை எழுந்தது. சரியான வழியிலே, பிழையான முறையிலோ அந்த ஒரே இயக்கக் கோட்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டது.

தமிழ் மக்களின் பலம் ஒரே அணியில் திரட்டப்பட்டது. அவ்வாறான சூழ்நிலையிலே தான் அரசு உரிமைகளை வழங்கும் பல்வேற பேச்சுவார்த்தைகளுக்கு இறங்கி வந்தது. எமது துர்ப்பாக்கியம் 2001ல் அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட உலக அரசியல் மாற்றம் விடுதலைப் போராட்டங்களுக்கு வேறு பெயர் சூட்டியது. இதன் காரணமாக உலக நாடுகளின் அனுசரணையோடு அந்தப் போராட்டம் ஒடுக்கப்பட்டது.

இங்கே நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு பாடம் உண்டு. என்னதான் திறமை யாரிடம் தான் இருந்தாலும் ஒரே அணி என்பதுதான் ஒரு இனத்தின் பலமாக அமையும். தற்போதைய சூழ்நிலையிலும் வரலாற்றுத் தடங்களை திரும்பிப் பார்ப்பதன் மூலமும் தொடர்ச்சியாக தமிழ் மக்களின் உரிமை தொடர்பான செயற்பாடுகளை கையாண்டுகொண்டிருப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே.

இதன் நடவடிக்கைகளை கருத்துக் கருமானங்களோடு ஆக்கபூர்வமான விமர்சனங்களாக முன்வைத்து தமிழ் மக்களின் பலத்தை ஒன்று திரட்டும் வகையில் செயற்படுவது ஒவ்வொரு தமிழனதும் கடமையாகும். வீரயுகத்தில் எவ்வாறு ஒரே இயக்கம் பலம் பெற்று அரசோடு பேச்சுவார்த்தை நடாத்தியதோ அறவழிச் செயற்பாட்டின் போதும் நமது சக்தியை ஒருமுகப் படுத்தல் இன்றியமையாதது. வீரயுகத்தில் இருந்தது போலான வழிமுறைகள் அறிவழிப் பாதையில் கையாளப்படக் கூடியவை அல்ல. ஆனால், ஒன்றுபட்ட உழைப்பு என்பது எப்போதும் உறுதிப்படுத்தப்பட்ட ஒன்றேயாகும். அந்த ஒன்றுபடல் என்பது இருக்கின்ற சக்தியை பெரும் சக்தியாக்குவதே அல்லாமல் சிதறி நின்று அந்த சக்தியைப் பலவீனப்படுத்துவதன் மூலம் செயற்படுத்தக் கூடிய ஒன்று அல்ல.

இந்தப் பின்னணியிலேதான் தமிழினத்தின் அரசியலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கையாண்டு கொண்டிருக்கின்றது. ஆட்சியிலே பங்குகொண்டு, அமைச்சுகளைப் பெற்றுக் கொண்டு, அபிவிருத்தியைச் செய்து கொண்டு, அரசுக்கு ஆமாசாமி போட்டுக் கொண்டிருப்பதையே இந்த நாட்டு அரசுகள் விரும்புகின்றன. சிலசில வித்தியாசங்களைக் கடைப்பிடித்துக் கொண்டு எமது சகோதர முஸ்லீம் இனத்தவர்கள் மேற்குறித்த நடைமுறையையே கையாளுகின்றார்கள்.

நாம் அவ்வாறு நடந்து கொள்ள முடியாது. எனவே நாம் எதிர் அரசியல் நடத்தினாலோ அல்லது பரிந்துணர்வு அரசியல் நடத்தினாலோ அது பெருந்தேசியக் கட்சிகளுக்கு தொந்தரவாகவே விளங்குகிறது. எனவே, தமிழர்களின் இருப்பை, அவர்களினுடைய இலட்சியத்தை இலதாக்குவதென்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலவீனப்படுத்துவதொன்று தான் வழிமுறை என்பதை பெருந்தேசியம் தனது செயற்பாட்டின் மூலம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது. இது நமக்குத் தெரியாததல்ல. நமது மக்களும் இதைப் புரியாதவர்களாக இருக்கக் கூடாது. இவ்வடிப்படையிலே அந்தப் பெருந்தேசியம் எதை நினைக்கின்றதோ அதை அடைய முடியாதபடி செய்யும் வகையிலேதான் நாம் எமது ஆளுமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

எனவே தான் ஆளுங்கட்சி தனது முகவர்கள் மூலம் மேற்கொள்கின்ற அபிவிருத்திகள், எதிர்க்கட்சி நமது அணுகுமுறைகளில் பிழைகண்டு வெளிப்படுத்துகின்ற விமர்சனங்கள், எங்களிலே இருந்து ஏதேதோ காரணங்களுக்காக எங்களை விட்டுப் பிரிந்து சென்றவர்கள் எடுத்து இயம்புகின்ற குதர்க்க நியாயங்கள் எல்லாமே ஒன்றையே இலக்காகக் கொண்டிருக்கின்றன.

பெருந்தேசியம் இதனைத் தெரிந்து கொண்டே செய்கின்றது. எம்மவர்களோ நமது இனத்திற்கு நன்மை செய்வதாக நினைத்துக் கொண்டே தீமை செய்கின்ற அநுகூல சத்துருக்கள் ஆகின்றனர். ஒன்று மட்டும் உறுதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலவீனப்பட்டால் தமிழ்த் தேசியம் பலவீனம் அடையும், தமிழ்த் தேசியம் பலவீனமடைந்தால் பெருந்தேசியம் தனது நிகழ்ச்சி நிரலை சுதந்திரத்திற்கு முன்னமேயே திட்டமிட்ட திசையிலே செயற்படுத்தி நமது சுயநிர்ணய உரிமையை, நமது வரையறுக்கப்பட்ட ஆள்புலத்தை, நமது கலை கலாச்சாரம் பண்பாட்டு விழுமியங்களை மெதுமெதுவாக விழுங்கி அழித்துவிடும். இவற்றை எமது மனதிலே உள்வாங்கிக் கொள்வோம் என்றார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here