தமிழ் ராக்கர்ஸ் இணைய முகவரியை முடக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!


புதிய படங்களை சட்டவிரோதமாக பதிவேற்றும் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதள முகவரிகளை முடக்க வேண்டும் என்று இணையதள சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கு தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சர்வதேச திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வார்னர் பிரதர்ஸ், தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

அந்த மனுவில், தமிழ் ராக்கர்ஸ், இ.இசட்.டி.வி., கேட்மூவிஸ், லைம்டொரன்ட்ஸ் போன்ற இணையதளங்கள், எங்களுக்குச் சொந்தமான திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் ஆகியவற்றை வெளியிடுகின்றன.

அதேபோல், யூ டி.வி., ஸ்டார், பாரமௌன்ட், யூனிவர்செல், நெட்பிளிக்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு சொந்தமான திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்களையும் சட்டவிரோதமாக வெளியிடுகின்றன.

இதனால் பெரும் இழப்பை நாங்கள் சந்திக்க வேண்டியுள்ளது. ஆதலால் மேற்கண்ட இணையதளங்களை முடக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

இந்த மனு, தில்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சீவ் நருலா முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்குரைஞர்களின் வாதத்தைக் கேட்ட நீதிபதி சஞ்சீவ் நருலா பிறப்பித்த உத்தரவு:

வார்னர் பிரதர்ஸ் நிறுவனத் தயாரிப்பு திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் ஆகியவற்றின் மீது அந்நிறுவனத்துக்கு காப்புரிமை உண்டு. ஆதலால் அந்நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகியுள்ள, வெளியாக இருக்கும் திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்களை ஒளிபரப்பவோ, இணையதளத்தில் வெளியிடவோ தடை விதிக்கப்படுகிறது.

இந்த வழக்கில் இடைக்கால உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டிய நிலையில் உள்ளது. அவ்வாறு இடைக்கால உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்காமல் போகும்பட்சத்தில், அது வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்துக்கு ஈடு செய்ய இயலாத இழப்பை ஏற்படுத்தும்.

இதை கருத்தில் கொண்டு, தமிழ் ராக்கர்ஸ், இ.இசட்.டி.வி., கேட்மூவிஸ், லைம்டொரன்ட்ஸ் போன்ற இணையதளங்களின் முகவரிகளையும், அந்த இணையதளங்களின் பகிர்வுகளையும் இணைய சேவை நிறுவனங்கள் முடக்க வேண்டும்.

மேற்கண்ட இணையதளங்கள் பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ள டொமைன்களையும் முடக்குவதற்கு மத்திய தொலைத் தொடர்புத் துறை, மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் ஆகியவை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, மேற்கண்ட இணையதளங்களை இணைய சேவை நிறுவனங்களால் முடக்க முடியுமா என்று கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here